புது தில்லி: இன்று மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் இணைவதற்கான கடைசி நாள். இதனால் இன்று ஏராளமானோர் இந்தத் திட்டத்தில் இணைய் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் நேரடி மானியத் திட்டத்தை தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி மத்திய அரசு அமல்படுத்தியது. சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை எண்ணெய் நிறுவனங்கள் காலக்கெடு அறிவித்திருந்தன. மேலும் கருணை காலத்துக்குள் மானிய திட்டத்தில் இணையாதவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை சந்தை விலையில்தான் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என்றும், அவர்கள் மானிய திட்டத்தில் இணைந்த பிறகு மானியத் தொகை தகுதியின் அடிப்படையில் அனுமதிக்கப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, இன்றுடன் இதற்கான காலக்கெடு முடிவடைகிறது.
நாளை முதல் ரயில் நிலைய நடைமேடைக் கட்டணம் உயர்வு
புது தில்லி: ரயில் நிலையங்களின் நடைமேடைக் கட்டண உயர்வு நாளை முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. ரயில் நடைமேடைக் கட்டணம் 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தப் படுகிறது. மேலும், பண்டிகை மற்றும் பொதுக்கூட்ட காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 10 ரூபாய்க்கு மேல், பிளாட்பாரம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள கோட்ட மேலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாளை முதல் அமல்: 120 நாட்களுக்கு முன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி!
புதுதில்லி: 120 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இடைத் தரகர்களைக் கட்டுப்படுத்தவும், அனைத்துப் பயணிகளுக்கும் முன்பதிவு வசதி கிடைக்கவும் இந்த கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. ரயில் நிலையத்தில் நுழைந்த 5 நிமிடங்களுக்குள் பயணச் சீட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு விவகாரம்: அத்வானி உள்ளிட்ட 19 பேருக்கு நோட்டீஸ்
புது தில்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி கட்டட இடிப்பு விவகாரத்தில், பாஜக., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 19 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு ஹாஜி மெஹ்மூத் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை இன்று காலை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாஜக தலைவர்களான் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட தலைவர்களுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது. சிபிஐ மற்றும் பாஜக., விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் என 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. முன்னதாக, கடந்த 1992-ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய கட்டடம் இடிப்பு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில் குற்றம் நிரூபிக்கப் படாததால் ரேபரேலி நீதிமன்றம் இந்த வழக்கைக் கைவிட்டது. இதையே அலகாபாத் நீதிமன்றம் 2010-ல் உறுதி செய்தது. இதனை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று நடக்கிறது. இந்த வழக்கை, நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து மற்றும் சி.கே.பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
தவறாக அனுப்பப்பட்ட மெயில்: மோடி உள்பட 31 தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு
சிட்னி: கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஜி 20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டபோது, பிரதமர் மோடி உள்ளிட்ட 31 தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளியே கசிந்துள்ளன. இதற்கு தவறாக அனுப்பப் பட்ட இமெயில் காரணமாகியுள்ளது. 2014 நவம்பரில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஜி20 மாநாடு நடைபெற்றது. அதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் உள்ளிட் 31 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, மாநாட்டில் கலந்து கொண்ட 31 தலைவர்களின் பிறந்த தேதி, பதவியின் பெயர், பாஸ்போர்ட் எண், விசா விவரம் மற்றும் சில தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய ரகசியக் கோப்பினை ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை ஊழியர் ஒருவர் தவறுதலாக ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்துபவர்களில் ஒருவருக்கு இமெயிலில் அனுப்பியுள்ளார். இமெயிலைப் பெற்றவர் இது தனக்கு தவறுதலாக அனுப்ப பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டியபிறகே அவருக்கு தனது தவறு புரிந்தது. இவ்வாறு தகவல் கசிந்த விவரம் குறித்து சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என குடியேற்றத் துறை அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டபடி, அப்போது நடந்த சம்பவம் குறித்து அந்தத் தலைவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லையாம்.
கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: தமிழகத்தில் பருவமழை குறைவாக பெய்து இருப்பதால் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து தமிழக சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியவற்றில் இருந்து… தமிழகத்திற்கு ஆண்டுதோறும் கிடைக்கும் சராசரி மழை அளவு 920.09 மி.மீ ஆகும். 2014-ம் ஆண்டில் தமிழகத்திற்கு 906.09 மி.மீ மழை கிடைக்கப்பெற்றுள்ளது. இது சாதாரண மழை அளவை விட 2 சதவீதம் குறைவானதாகும். 2014-ம் ஆண்டு தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான மழையும், 18 மாவட்டங்களில் போதுமான மழையும் 5 மாவட்டங்களில் அதிக மழையும் கிடைக்கப் பெற்றது. 2014-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையில் மாநிலத்திற்கு போதுமான மழை கிடைத்த போதிலும் வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், திருச்சி, காஞ்சீபுரம், விருதுநகர், மதுரை, பெரம்பலூர் மாவட்டங்களில் குறைவான மழையே கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்வரும் கோடைகாலத்தில் எதிர்பார்க்கப்படும் குடிநீர் பற்றாக்குறையினை சமாளிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தேவை நிலையை ஆய்வு செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அரசால் அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி கலெக்டர்கள் அந்தந்த மாவட்டங்களில் குடிநீர் தேவையினை ஆய்வு செய்து, குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள துறை ரீதியான நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டதாக தெரிவித்துள்ளனர். குடிநீர் பற்றாகுறையை சமாளிப்பதற்காக துறை ரீதியான திட்ட ஒதுக்கீடு மற்றும் அவசர காலநிதியைத் தவிர்த்து கூடுதலாக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும் சில பணிகள் மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக துறைத் தலைவர்கள் மற்றும் கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துதல், புனரமைப்புப் பணிகள், லாரிகள் மூலம் குடிநீர் வழங் கல், சின்டெக்ஸ் டாங்குகள் அமைத்தல், குடிநீர் குழாய் களை மாற்றுதல், சிறு மின்விசைப் பம்பு அமைத்தல், கைப்பம்புகள் அமைத்தல் ஆகியவையாகும். இந்தப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்துக்கு ரூ.20 கோடி, திருவண்ணாமலை ரூ.10 கோடி, காஞ்சீபுரம், திருச்சி, விருதுநகர், மதுரைக்கு ரூ.5 கோடி, பெரம்பலூருக்கு ரூ.3 கோடி, அரியலூருக்கு ரூ.2 கோடி, மீதமுள்ள 23 மாவட்டங்களுக்கும் தலா ரூ.50 லட்சம், ஆக மொத்தம் ரூ.66.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல அரசுத் துறைகளான, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாகத் துறைக்கு தலா ரூ.10 கோடி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.5 கோடி, பேரூராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.3 கோடி, கால்நடை பராமரிப்புத் துறைக்கு ஒரு கோடி ரூபாய் என மொத்தம் ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் எதிர்வரும் கோடைகாலத்தில் மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்க ஏதுவாக அமையும். என்று பேசினார்.
உள்கட்டமைப்புக்கு முதலீடு செய்ய சீன தூதரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் உள்கட்டமைப்புத் துறையில் சீனா அதிக முதலீடுகள் செய்ய வேண்டும் என சீன தூதரிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவுக்கான சீன தூதர் லீ யுசென் தலைமைச் செயலகத்தில் முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது மே மாதம் சென்னையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், சீன தொழிலதிபர்கள் பங்கேற்க முதல்வர் அழைப்பு விடுத்தார். இதேபோல் சீனா வருமாறு முதல்வருக்கு சீன தூதர் அழைப்பு விடுத்தார். மேலும், சென்னையில் சீன நாட்டின் துணை தூதரகம் விரைவில் அமைக்கப்படும் என அந்நாட்டு தூதர் தெரிவித்ததாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலியின் தனிப்பட்ட வாழ்க்கையை கிளறாதீங்க: யுவராஜ் சிங்
விராட் கோலியின் தனிப்பட்ட வாழ்க்கையை கிரிக்கெட் ரசிகர்கள் கிளறக்கூடாது, மதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அரை இறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் கடுப்பான கிரிக்கெட் ரசிகர்கள், விராட் கோலியையும், அவரது காதலி அனுஷ்கா சர்மாவையும் கலாய்த்து தீர்த்தனர். டிவிட்டர், பேஸ்புக் என சமூக்க வலைதளங்களில் அவர்களைப் பற்றிய கிண்டலும் கேலியும் ஏகமாகப் பரவியது. இது குறித்த செய்திகளும் ஊடகங்களில் அதிகம் வெளியாயின. கோலி அனுஷ்கா சர்மாவின் உருவப்படம் சில இடங்களில் எரிக்கப்பட்டன. இத்தகைய சம்பவங்களுக்குப் பின்னர் தனது கருத்தை தெரிவித்த யுவராஜ் சிங் இது குறித்து தனது டுவிட்டர் பதிவில்… “இந்திய வீரர் விராட் கோலியின் தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்கள் மதிக்க வேண்டும். ஆஸ்திரேலியா தொடரில் 5 சதங்கள் எடுத்த விராட் கோலி அவரது ரசிகர்களால் மதிக்கப்படுவதற்கு தகுதி உடையவரே. இனிவரும் ஆட்டங்களில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவார்” என்று கூறியுள்ளார்.
To all our real Indian fans who support us in our wins and loses ! Let’s respect @imVkohli and @AnushkaSharma personal life — yuvraj singh (@YUVSTRONG12) March 29, 2015
நிலம் கையகப்படுத்தும் சட்ட நிலைப்பாடு குறித்து பொது வாக்கெடுப்புக்கு அதிமுக தயாரா?: ராமதாஸ் சவால்
சென்னை: நிலம் எடுப்பு சட்ட நிலைப்பாடு: அதிமுக பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் சவால் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது குறுக்கிட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள ‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை – நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து நீண்ட சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார். பாரதிய ஜனதாக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் போல மாறி அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், தமிழக விவசாயிகளுக்கு எதிரான அதிமுக அரசின் துரோகம் தொடரும் என்பதையே காட்டுகிறது. நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் எதிர்க்கட்சிகள் முன் வைத்த 9 திருத்தங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாலும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சலுகை தரக் கூடாது என்ற அ.தி.மு.க.வின் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டதாலும் அந்த மசோதா புனிதமடைந்து விட்டதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார். அதேநேரத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டம் மிக மோசமானது என்றும் முதல்வர் குற்றஞ்சாற்றியிருக்கிறார். முந்தைய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் சில அம்சங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் அச்சட்டத்தின் பல பிரிவுகள் விவசாயிகளுக்கு ஆதரவானவை என்பதும் உண்மை. அந்த சட்டத்தின்படி விவசாயிகள் நினைத்தால் தங்களுடைய நிலம் கையகப்படுத்தப்படுவதை தடுக்க முடியும். ஆனால், இப்போதுள்ள சட்டத்தின்படி உச்ச நீதிமன்றமே நினைத்தாலும் நிலம் கையகப்படுத்தப்படுவதை தடுக்கமுடியாது. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு விதிவிலக்குகளை எல்லாம் விதிகளாகவும், விதிகளை எல்லாம் விதிவிலக்குகளாகவும் காட்டி நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்தத்தை நியாயப்படுத்த முதலமைச்சர் முயல்வது கண்டிக்கத்தக்கது. முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் கட்டாய நிலம் எடுப்பிலிருந்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினாலும், சட்டத்தின் நான்காவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 13 மத்திய அரசு சட்டங்களின் கீழ் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இந்த சட்ட விதிகள் பொருந்தாது என்று முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார். ரயில் பாதை, மின்பாதை, நிலம் கையகப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டோரை மறு குடியமர்த்துதல் உள்ளிட்டவை தொடர்பான அந்த சட்டங்களின் கீழ் எடுக்கப்படும் நிலங்களின் மதிப்பு அரசால் கையகப்படுத்தப்படும் நிலங்களின் மொத்த மதிப்பில் 5 விழுக்காட்டைத் தாண்டாது. ஆனால், மத்திய அரசு இப்போது கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி 5 வகையான பயன்பாடுகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இந்த சட்ட விதிகள் பொருந்தாது. இந்த வகையில் கையகப்படுத்தப்படும் நிலங்களின் மதிப்பு 95 விழுக்காட்டிற்கும் மேல் இருக்கும். 5 விழுக்காடு பாதிப்பை எதிர்க்கும் முதலமைச்சர், 95% பாதிப்பை ஆதரிப்பதைப் பார்க்கும் போது உழவர்கள் மீது அவர் கொண்டுள்ள அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த 5 வகையான பயன்பாடுகளுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, அவற்றுக்கு நிலம் எடுப்புச் சட்டத்தின் சமூகத் தாக்க ஆய்வு, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்புக் கூறுகள் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டிருப்பதால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் இன்னொரு வாதம் ஆகும். விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பிரிவை உருவாக்கிவிட்டு, அதை செயல்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடம் கொடுத்துவிட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது,‘‘கொலை செய்யவும் தயங்காதவரிடம் கத்தியை கொடுத்திருக்கிறோம்… ஆனால், அவர் குத்த மாட்டார்’’ என்று கூறுவதைப் போல் உள்ளது. உண்மையிலேயே விவசாயிகள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் கிராம அவைகளிடம் தான் ஒப்படைத்திருக்க வேண்டும். முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் குறைகள் இருப்பதாகக் கவலைப்படும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அந்த சட்டத்தில் உள்ள குறைகளை களையும்படி போராடினால் அது நியாயமானதாக இருக்கும். அதை விடுத்து அதைவிட அதிக குறைகள் உள்ள சட்டத்தை ஆதரிக்கத் துடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். மத்திய அரசின் நிலம் எடுப்புச் சட்டத் திருத்தத்தை தில்லியில் ஆதரிக்காவிட்டால், பெங்களூரில் அதன் விளைவுகள் தெரியும் என்ற அச்சத்தின் காரணமாகத் தான் இச்சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்கிறது என்பது தமிழ்நாட்டிலுள்ள குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். இந்த உண்மையை மறைப்பதற்காக ‘விவசாயிகள் ஆதரவு’ என்ற பொருந்தாதப் போர்வையை போர்த்திக் கொள்ள தமிழக அரசு விரும்புகிறது. இது நல்லதல்ல. நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை ஏற்கனவே மக்களவையில் ஆதரித்த அதிமுக, அடுத்தக் கட்டமாக மாநிலங்களவையிலும் ஆதரிக்க முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவை நியாயப் படுத்துவதற்காகத் தான் அச்சட்டத்தை, பாரதிய ஜனதாக் கட்சியை விட ஒருபடி கூடுதலாக ஆதரித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார். ‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை & நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத் திருத்த மசோதாவை ஆதரிப்பது உழவர்களுக்கு செய்யப்படும் மிகப் பெரிய துரோகம் ஆகும். இப்படி ஒரு துரோகத்தை செய்தவர்களை தமிழக விவசாயிகள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். எனவே, நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தம் தொடர்பான நிலைப்பாட்டை தமிழக அரசும், அ.தி.மு.க.வும் மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வளவுக்குப் பிறகும் மத்திய அரசின் நிலம் கையகப் படுத்துதல் சட்டத் திருத்தம் விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடியது என்று முதல்வர் பன்னீர்செல்வம் கருதினால், அது குறித்து தமிழ்நாட்டு மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும். – என்று கேட்டுள்ளார்.
தி.க.,- விடுதலைச் சிறுத்தைகள் உறவை யாராலும் சிதைக்க முடியாது: தொல்.திருமாவளவன்
சென்னை: தந்தி டிவியில் ஒளிபரப்பான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் பேட்டியைத் தொடர்ந்து, இன்று அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தங்களுக்கும் தி.க.வுக்குமான உறவை யாராலும் சிதைக்க முடியாது என்று உறுதி கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: கி.வீரமணி நேர்காணல் மார்ச் 28 அன்று தனியார் தொலைக்காட்சி (தந்தி டி.வி.,) ஒன்றில் ஒளிபரப்பானது. அவரை நேர்காணல் செய்த அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் (ரங்கராஜ் பாண்டே) விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்துக்கும் இடையிலான நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு ஓரிரு கேள்விகளை எழுப்பியதைக் காண முடிந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியாரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் என்னும் கருத்தைப் பரப்புவதாக அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். விடுதலைச் சிறுத்தைகளும் திராவிடர் கழகமும் கொள்கைப் புரிதலோடு ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்பட்டுவருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத காழ்ப்புணர்வின் அடிப்படையிலேயே இக்கேள்வி எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது. தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் எத்தகைய புரிதலோடும் நட்புறவோடும் இணைந்து பணியாற்றினார்களோ அதே வகையில், அவ்விரு தலைவர்களின் வழியில் இன்றும் இவ்விரு இயக்கங்களும் தோழமை உணர்வோடு இணைந்து பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, சாதி-மதவெறி சக்திகளை எதிர்ப்பதில் பெரியாரிய சக்திகளோடு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து களமாடி வருகிறது. திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழாய் துப்பாக்கி என அழைக்கப்படுவதுண்டு. தற்போது விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்ந்து மூன்று குழல் துப்பாக்கியானோம் என ஆசிரியர் வீரமணி மிகுந்த பூரிப்போடு அறிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்துக்கும் இடையிலான நட்புறவு வலுப்பெற்றிருக்கிறது. அவ்வுறவில் சிறு கீறலையாவது ஏற்படுத்த வேண்டுமென்னும் தீய உள்நோக்கத்தோடு அத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் குதர்க்கமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அக்கேள்விக்குப் பதிலளித்த ஆசிரியர் கி.வீரமணி கேள்வி எழுப்பியவரின் திசை திருப்பும் முயற்சியை மிகச் சரியாக அம்பலப்படுத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் புரட்சியாளர் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் தமது கொள்கை ஆசான்களாக ஏற்றுக்கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சாதிமதவெறி சக்திகளுக்கு எதிராகப் போராடிவரும் சான்றோர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக தந்தை பெரியாரின் பெயரில் விருது மற்றும் பொற்கிழி வழங்கி வருகிறது. விடுதலைச் சிறுத்தைகளின் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள் உள்ளிட்ட அனைத்து வெளியீடுகளும் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகிய இரு பெரும் தலைவர்களின் திருவுருவப் படங்களோடுதான் வெளியிடப்பட்டு வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகளின் திருமண நிகழ்ச்சிகளில் மணமக்கள் இருவரும் ‘புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் வழியில் சமூகப் பணி ஆற்றுவோம்!’ என உறுதியேற்று வருகின்றனர். அம்பேத்கர் திருவுருவச் சிலைகளை நிறுவும் இடங்களிலெல்லாம் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைகளையும் நிறுவ வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளுக்கு கட்சியின் தலைமையிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எனது அரசியல் உந்துசக்திகளாக விளங்கும் மூவரில் ஒருவர் தந்தை பெரியார் என்பதை மிகுந்த பூரிப்போடு அறிவிப்புச் செய்திருக்கிறேன். அதாவது, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மேதகு பிரபாகரன் ஆகிய மூவரும்தான் எனது பொதுவாழ்க்கைக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளித்துவரும் தலைவர்கள் என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறேன். பெரியார் திடலிலிருந்துதான் என் அரசியல் பயணம் தொடங்கியது என்பதைப் பல முறை பதிவுசெய்திருக்கிறேன். இவ்வாறு பெரியாரின் கொள்கைகளோடும் பெரியாரின் இயக்கங்களோடும் இரண்டறக் கலந்து ஒடுக்கப்பட்டோர் சிறுபான்மையினர் மற்றும் பிற விளம்புநிலை மக்கள் யாவரையும் அமைப்பாக்குவதிலும் அரசியல்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டுவரும் விடுதலைச் சிறுத்தைகளின் மீதான நன்மதிப்பையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில், அந்த நேர்காணல் நிகழ்ச்சியில் கேள்விகள் எழுப்பியதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்திற்கும் மற்றும் பிற பெரியார் இயக்கங்களுக்கும் இடையிலான நட்புறவை எவராலும் எக்காலத்திலும் சிதைக்க முடியாது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் மிகவும் அழுத்தமாகத் தெளிவுபடுத்த விரும்புகிறது. மேலும், சாதி-மதவெறி சக்திகளுக்கெதிராக பெரியாரிய, மார்க்சிய இயக்கங்களோடு என்றென்றைக்கும் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து போராடும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறது.

