Home Blog Page 6161

ஆசிரியரின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

மதுரை: மதுரையில் ஆசிரிர் ஒருவரின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன. மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் அகமது. ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாஜிதா (34). இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சாஜிதாவுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையில் மீண்டும் தம்பதியினர் குழந்தை பெற விரும்பினர். ஆனால் அவருக்கு தவறான கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததால் இயற்கை முறையில் குழந்தை பிறக்காது என கூறப்பட்டது. இதன் பின் செயற்கை கருத்தரிப்பு மூலம் சாஜிதா கருவுற்றார். இந்நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவத்துக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாஜிதாவிற்கு 2 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் பிறந்தன. இது குறித்து மருத்துவமனை டீன் கூறிய போது, ‘சாஜிதாவுக்கு 4 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளன. ஒவ்வொரு குழந்தைகளும் சராசரியாக ஒரு கிலோ 500 கிராம் எடை உள்ளன. இதில் குழந்தைகளுக்கு சற்று மூச்சுத் திணறல் உள்ளது. இதனால் 2 குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தாய் நலமாக உள்ளார். இந்த மருத்துவமனையில் 4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறப்பது இதுவே முதல் முறை” என்றார்.

வேட்பாளர் புகைப்படத்தையும் வாக்குச்சீட்டில் அச்சிட முடிவு: தேர்தல் கமிஷன்

sandeep-saxsena சென்னை: வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் புகைப்படத்தை சேர்த்து அச்சிட இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட அறிக்கையில்… எலக்ட்ரானிக் வாக்கு எந்திரத்தில் வைக்கப்படும் வாக்குச் சீட்டு மற்றும் தபால் வாக்குச் சீட்டுகளில் இதுவரை வேட்பாளருக்கான வரிசை எண், வேட்பாளரின் பெயர், வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் ஆகியவை மட்டும் அச்சிடப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் ஒரே பெயர் கொண்ட பல வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவது பற்றி இந்திய தேர்தல் கமிஷன் கவனத்தில் கொண்டது. இது வாக்காளர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. அதன்படி, வரும் மே 1-ந்தேதிக்கு மேல் நடக்க இருக்கும் அனைத்து தேர்தலிலும் பயன்படுத்தப்படவுள்ள, எலக்ட்ரானிக் வாக்கு எந்திரத்தில் ஒட்டப்படும் வாக்குச் சீட்டுகள், சாதாரண வாக்குச் சீட்டுகள், தபால் வாக்குச் சீட்டுகள் ஆகியவற்றில் ஏற்கனவே அச்சிடப்படும் விவரங்களுடன் அந்தந்த வேட்பாளர்களின் புகைப்படமும் அச்சிடப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அந்த புகைப்படத்தின் அகலம் மற்றும் உயரம் முறையே 2 செ.மீ.க்கு 2.5 செ.மீயாக இருக்கும். எனவே தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் அண்மைகால புகைப்படத்தை வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்பக்கத்தில் வேட்பாளரின் கையெழுத்து இடம் பெற்றிருக்க வேண்டும். அந்தப் புகைப்படம் 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்டதா என்பது பற்றிய உத்தரவாதம், வேட்பாளரிடமோ அல்லது அவரது ஏஜெண்டிடமோ பெறப்படும். வேட்புமனுவுடன் புகைப்படத்தை தாக்கல் செய்யாவிட்டால், மனு பரிசீலனைக்குள் புகைப்படத்தை தாக்கல் செய்யும்படி அதிகாரி நோட்டீசு பிறப்பிப்பார். புகைப்படம் கொடுக்காவிட்டால் வாக்குச் சீட்டில் அவரது புகைப்படம் அச்சிடப்படாது என்பதும் அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருக்கும். அதன் பிறகும் புகைப்படத்தைத் தராத வேட்பாளரின் புகைப்படம், வாக்குச்சீட்டில் அச்சேற்றப்படாது. புகைப்படம் கொடுக்காதது, வேட்புமனுவை தள்ளுபடி செய்வதற்கான ஒரு காரணமாக எடுக்கப்படாது. அந்த புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு, நோட்டீசு பலகையில் வேட்புமனு பரிசீலனைக்கு மறுநாளில் ஒட்டப்படும் என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவிப்பதோடு, அதில் உள்ள குறைகளை திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பார். இந்த அறிவிப்புகள் அனைத்தும் வரும் மே 1-ந்தேதிக்கு மேல் நடக்கும் தேர்தலில் இருந்து அமலுக்கு வரும். என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தி.க.,வின் தாலியறுக்கும் போராட்டம் தமிழர் பண்பாட்டைச் சீர்குலைக்கும் வேலை: என்.ஆர்.தனபாலன்

  சென்னை: தி.க.,வின் தாலியறுக்கும் போராட்டம் தமிழர் பண்பாட்டைச் சீர்குலைக்கும் வேலை என்று பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் கலாசாரத்தையும், தமிழர் பண்பாட்டையும் சீர்குலைக்க முயலும் போராட்டம் இது. பெரியார் உயிருடன் இருந்தால் இது போன்ற கேவலமான போராட்டத்தை அறிவித்தித்திருக்க மாட்டார். எந்த ஒரு தமிழ்ப் பெண்ணும், தன் கணவர் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தாலியையும் குங்குமத்தையும் தினம் தினம் போற்றி மகிழ்வாள். ஏப்.14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தமிழ்ப் பெண்கள் மதிக்கும் மங்களகரமான தாலியை கொச்சைப்படுத்தத் துடிக்கும் வீரமணியின் போராட்டம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நட்டுக்கு இதனால் எந்த நன்மையும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை தோல்வியுடன் டேனியல் வெட்டோரி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

vettori ஆக்லாந்து: நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் வெட்டோரி, இந்த உலகக் கோப்பை போட்டி தோல்வியுடன் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணி மெல்போர்னில் ஞாயிற்றுக் கிழமை விளையாடிய இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து அந்த அணி வீரர்கள் செவ்வாய்க்கிழமை இன்று காலை நியூசிலாந்தின் ஆக்லாந்து நக்ருக்கு வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டேனியல் வெட்டோரி, தான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ‘‘உலகக் கோப்பை போட்டிதான் நியூசிலாந்து அணிக்காக நான் விளையாடிய கடைசி போட்டி. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அது சிறப்பானதாக முடிந்தது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்’’ என்று அவர் கூறினார். தற்போது 36 வயதாகும் வெட்டோரி தனது 18 வயதில் 1997- பிப்ரவரியில் நியூசிலாந்து அணியில் இளம் வீரராக கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கினார். மிக இளம் வயதில் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற நியூசிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்ற வெட்டோரி, தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகமானார். வெட்டோரி இதுவரை 4000 ரன்களும் அடித்து 300 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் 32 ஆட்டங்களில் விளையாடி 36 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் வெட்டோரி. இந்த உலகக் கோப்பை போட்டியில், சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி 9 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் தொடர் வெற்றிக்குத் துணையாக இருந்தார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புதுதில்லி கடந்த 1992-ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய கட்டடம் இடிப்பு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 20 பேர் மீதான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில் குற்றம் நிரூபிக்கப் படாததால் ரேபரேலி நீதிமன்றம் இந்த வழக்கைக் கைவிட்டது. இதையே அலகாபாத் நீதிமன்றம் 2010-ல் உறுதி செய்தது. இதனை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று நடக்கிறது. இந்த வழக்கை, நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து மற்றும் சி.கே.பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

பராமரிப்பில் அலட்சியம்: பிரேக் பிடிக்காத ஸ்கூல் வேன் கால்வாயில் கவிழ்ந்து 3 பேர் பலி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பிரேக் பிடிக்காத ஸ்கூல் வேன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் எஸ்.ஜி.எஸ். நினைவு மெட்ரிக் பள்ளியில் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பகுதியை சேர்ந்த 9 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள், தினமும் பள்ளி வேனில் சென்று வருவர். அதுபோல், நேற்று காலை 9 மணியளவில் வழக்கம் போல் பள்ளி வேன், வேங்கோடு பகுதியில் உள்ள 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு கருங்கல் நோக்கி புறப்பட்டது. வேனை கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெனிஷ் (30) ஓட்டிச் சென்றார். அந்த வேன் வேங்கோடு பகுதியில் சென்ற போது, school-busபிரேக் பழுதாகி தாறுமாறாக ஓடி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு டீக்கடை சுவர் மீது மோதியது. பின்னர் கடையின் பின்புறம் உள்ள கால்வாய்க்குள் பாய்ந்து கவிழ்ந்தது. அப்போது, அந்தக் கால்வாயில் விஜயகுமார் என்பவரின் மனைவி கனகலதா குளித்துக் கொண்டிருந்தார். அவர் மீது அந்த வேன் பாய்ந்தது, இதனால் வேனுக்கு அடியில் சிக்கிய கனகலதா அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வேன் ஓட்டுநர் ஜெனிஷும் இடிபாடுகளில் சிக்கி பலியானார். இந்நிலையில் வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகளும், ஆயாவும் கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் ஓடிவந்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு விரைந்துவந்த புதுக்கடை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் சஜின்குமார் (8), அனிதா (8), ஜோஸ்லின் (4), அஸ்வின் கிறிஸ்டி (9), பெனர்லின் (5), பியுலின் டெனி (9), ஜோஸ்லின் டால் (5), சாம்லின் அஸ்வினி, வேனில் இருந்த ஆயா நேசம் ஆகியோரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கக் கொண்டு செல்லும் வழியில் மாணவன் சஜின்குமார் உயிரிழந்தார். இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். இந்நிலையில், படுகாயம் அடைந்த ஆயா மற்றும் பள்ளி குழந்தைகள் 8 பேரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து புதுக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமாவை ஏழைகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும் : நடிகர் ஆர்கே

‘சினிமாவை ஏழைகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும்’ என்று நடிகர் ஆர்கே கூறினார்.

மக்கள் பாசறை தயாரித்த ஆர்கேவின்  ‘ என்வழி தனி வழி’ படத்தின் 25வது நாள் விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் ஆர்கே பேசியபோது… “இன்று சினிமாவுக்கு என்ன ஆயிற்று? கடந்தசில ஆண்டுகளாகவே சினிமா சிரமத்தில் இருப்பதாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிறைய படங்கள் வருகின்றன. நிறைய படங்கள் தோல்வி அடைகின்றன. ஓடுவதில்லை. சூப்பர் ஸ்டாரிடமே பணத்தை திருப்பிக் கேட்கிற நிலை உள்ளது.envazi-thani-vazhi வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களுக்கே திரையரங்கிற்கு யாரும் வருவதில்லை. நாலாவது நாள் நல்லபடம் என்று கேள்விப் பட்டுப் பார்க்கப் போனால் கூட, படம்  திரையரங்கில் இருப்பதில்லை. ஏன் மக்கள் தியேட்டர் பக்கம் வருவதில்லை? மக்கள் வராததற்கு யார் காரணம்? எல்லா வியாபாரத்திலும்  விழா, பண்டிகை காலங்களில்,விசேட நாட்களில் 10 சதவிகிதம் தள்ளுபடி 20சதவிகிதம் தள்ளுபடி 30,சதவிகிதம்  40சதவிகிதம்  ,60 சதவிகிதம் வரை தள்ளுபடி  கொடுக்கிறார்கள். சினிமாவில் மட்டும் பண்டிகை காலங்களில்,100 ரூபாய் டிக்கெட் 300 ரூபாய் ஆகும். இது என்ன நியாயம்? சென்னையை மட்டும் வைத்து தமிழ்நாட்டை கணிக்க முடியாது. மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானம் உள்ளவன் மனைவிக்குப் புடவை ,துணிமணி எல்லாம் எடுத்துவிட்டு ஆசை யோடு படம் பார்க்கப் போகிறான்.அங்கே 100 ரூபாய் டிக்கெட் 300 ரூபாய் என்கிறார்கள். யோசிக்கிறான்.3 நாள் பொறுத்துக் கொண்டால் 4 வது நாள் திருட்டு விசிடி வந்துவிடும். 25 ரூபாயில் பார்த்து கொள்ளலாம் என்று இருந்து விடுகிறான்; திரும்பி  வந்து விடுகிறான். அப்படி அவனுக்குப் பொருளாதாரப் பிரச்சினை அவன் சினிமாவை ரசிப்பவன்தான். ஹீரோவை விரும்புகிறவன்தான். ஆனால் அவனைத் திருட்டு விசிடி வாங்கவைத்தது நாம்தான். அவனை திருட்டு விசிடிவாங்க வைத்துவிட்டோமே? அது யார் தவறு? அன்று கோடிக் கணக்கான பேர் பார்த்த சினிமாவை இன்று யார் பார்க்க வருகிறார்கள்? சினிமா இன்றைக்கு பணக்கார பைனான்சியர் கையில்  சிக்கிக் கொண்டு விட்டது. ஏரியாக்களை வாங்கிக் கொள்கிறார்கள். தொழில் மாறிவிட்டது. திருட்டு விசிடியை சரி என்று சொல்லவில்லை. ஆனால் அதை ஒழிக்க முடியவில்லையே. மக்கள் ஆதரவு இருக்கும் எதையும்ஒழிக்க முடிவதில்லை. அரசே நினைத்தாலும் திருட்டு விசிடியை தடுக்க முடியாது. ஒரு காலத்தில் கேபிள்டிவிக்கு அனுமதி கிடையாது. எல்லாமே திருட்டுத்தனமாகத்தான் இயங்கின. அதன் தாக்கத்தை பார்த்து அரசே ஏற்று நடத்தும் அளவுக்கு போகவில்லையா? ஒரு படத்தை ஓடவைப்பது யார்? ரசிகர்கள் ஒரு ஹீரோ படத்தை 50 படங்கள்கூடப் பார்த்திருப்பார்கள்.பலமுறை பார்த்திருப்பார்கள். அதற்காகப் பல லட்சம்கூட இழந்திருக்கிறார்கள். என்னபலன்? பேண்ட் வாங்கினால் சட்டை இலவசம் என்கிற காலம் இது.அவர்களுக்கு இதனால் என்னபலன்? ஏன் ரசிகர்களை நம்ப முடியாதா? 100 நாள் படப்பிடிப்பு நடத்த முடிகிறவர்களால் தியேட்டர்களை வாடகைக்கு எடுக்க துணிச்சல் வருவதில்லையே ஏன்?இன்று தியேட்டர்காரர்களிடம் அடிமையாக இருக்கிற நிலை உள்ளது. படம் 100 நாள் ஓடும் நம்பிக்கை இருந்தால் தியேட்டரை வாடகைக்கு எடுங்கள்  உன் படம் 100 நாள் ஓடுமா என்று சவால் விட்டால் தமிழ்நாட்டு ரசிகர்களை நம்பி நான் அந்தச் சவாலை ஏற்றுக் கொள்கிறேன். இபோதாவது மாற்றி யோசியுங்கள். சினிமாவில் அணுகுமுறை மாற வேண்டும். இதுவரை பணக்காரர்களிடம் இருந்த சினிமாவியாபாரம் இனி ஏழைகள் பக்கம் போகட்டும். 1000 டிக்கெட் வாங்கினால் 100 டிக்கெட் எடுத்துக் கொள்ளச் செய்யுங்கள் 1000 டிக்கெட்விற்றால் ஒரு ஷோ ஓட்டிக்கொள் என்று கூறுங்கள் படத்தை 100 நாள் ஓட்டமுடியாதா? நிச்சயம் முடியும். வியாபாரத்தை மாற்றி யோசியுங்கள். சினிமாவை,அதன் வியாபாரத்தை ஏழை மக்களிடம் எடுத்துச் சென்றால் சினிமாவும் வாழும்.ஏழைகளும் வாழ்வார்கள். இன்று முதல் சினிமாவை, ஏழை மக்களிடம் எடுத்துச் செல்வோம்.இந்த மாற்றத்தை இன்றே  தொடங்குவோம்.” இவ்வாறு ஆர்கே பேசினார். இவ்விழாவில் ‘ என்வழி தனி வழி’ இயக்குநர் ஷாஜி கைலாஷ், கதை வசனகர்த்தா பிரபாகர், கலை இயக்குநர்கள் போபன்,அங்கமுத்து சண்முகம், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் ராதாரவி,மதன்பாப், தலைவாசல்விஜய், ‘வழக்கு எண்’ முத்துராமன், ரமேஷ் கண்ணா,  தயாரிப்பாளர்  ஞானவேல், இயக்குநர்கள் சுசீநதிரன், திரு, செந்தில்நாதன்,பாடலாசிரியர் இளைய கம்பன், பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ், நடிகைகள் நீது சந்திரா, கோமல் சர்மா, ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

“பெரியவாளின் துயரம்”

“ப்ரணதார்த்தின்னு சொல்லாதே! அது ஸ்வாமி பேரு. அதைக் கெடுக்காதே! ஒண்ணு.. ப்ரணதார்த்திஹரன்னு சொல்லு. இல்லேன்னா, ஹரன்னு சொல்லு” “பெரியவாளின் துயரம்” (பிறர் கஷ்டத்தைக் கண்டு உருகுகின்ற மனம்) (கட்டுரையில் சில ஸ்வாரஸ்ய பகுதிகள்) இரண்டு போஸ்டுகள் ஒன்றாக இணைந்து இன்று. சொன்னவர்-வி.ஸ்வாமிநாத ஆத்ரேயன் தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன். (சில பாராக்கள் நெட்டில் காபி செய்தேன்) . ( சென்னையில்”1964 இல்லாட்டா 1965 ல) ஒரு நாள், காலேல மெட்ராஸ் கதீட்ரல் ரோடுல மியூஸிக் அகாடமி வழியா பெரியவா கூண்டுவண்டிய பிடிச்சிண்டு, அதுக்குப் பின்னால நடந்து வந்துண்டிருந்தா.அவர்களுடன் கூட பி.ஜி.பால் அண்கோ நீலகண்டய்யர்,ஸ்ரீமடம் சிவராமய்யர்,பாணாம்பட்டு கண்ணன்,ஸ்ரீகண்டன்,ராயபுரம் பாலு,மற்றும் நான்) . கோபாலபுரம் முனைக்கு வந்ததும் என்னை கூப்ட்டு “அதோ! அங்க பின்னால பொட்டிக்கடை வாஸல்ல குடுமி வெச்சுண்டு, வாயால புகை விட்டுண்டிருக்கான்…. பாரு!…. அவன்ட்ட போய் “பரவாக்கரை ஸ்ரௌதிகளை தெரியுமா?..ன்னு கேட்டுண்டு வா” ன்னார். நான் ஓடினேன். அந்த ஆஸாமி கடைவாசல்ல தொங்கிண்டு இருந்த நெருப்பு கயத்துல பீடி பத்த வெச்சுண்டு இருந்தான். அவனை பாக்கவே ரொம்ப அருவருப்பா இருந்தது. மெதுவா அவன் பக்கத்ல போய், “ஏன்யா! ஒனக்கு பரவாக்கரை ஸ்ரௌதிகளை தெரியுமா?”ன்னு கேட்டதும், அவன் பத்த வெச்ச பீடியை மடமடன்னு ஒதறிட்டு, அப்டியே பதறி போனான் ! “யார் நீங்க? எதுக்கு கேட்கறேள்?” “ஆச்சார்ய ஸ்வாமிகள் கேட்டுண்டு வரச்சொன்னா” “ஆச்சார்ய ஸ்வாமிகள்?…..என்னது? பெரியவாளா!………எங்கே?” “அதோ…………” என்று காட்டினேன் நான். அவ்வளவுதான்! அவன் குதிகால் பிடரில அடிக்க, எதிர்புறமா ஓடியே போய்ட்டான் ! பெரியவாட்ட போய் “கேட்டேன். பதிலே சொல்லாம போய்ட்டான்”ன்னு சொன்னேன். பெரியவா ஒண்ணுமே பேசலை. முகாமுக்கு போனோம். வரிசையா நெறையப்பேர் தர்ஶனத்துக்கு வந்தா. எல்லாரும் ஒருவழியா தர்சனம் பண்ணியானதும், பெரியவா எழுந்து உள்ளே போக அடி எடுத்து வெச்சா…….. அப்போ அவன் வந்தான் ! நெத்தில பட்டை விபூதி, ஒடம்பு முழுக்க அலங்கோலமா விபூதி, இடுப்புல துண்டை வரிஞ்சு கட்டிண்டு, நீள நெடுக நமஸ்காரம் பண்ணினான். பெரியவா உட்க்கார்ந்துட்டா. எங்கிட்ட “இவன் யார்?” ன்னு கேட்டா. “கொஞ்ச நேரம் முன்னாடி, பரவாக்கரை ஸ்ரௌதிகளை தெரியுமான்னு இவனைத்தான் பெரியவா கேட்டுண்டு வர சொன்னேள் ” “ஆமா….நான் பரவாக்கரை ஸ்ரௌதிகள் பேரன். ப்ரணதார்த்தின்னு பேரு” அவன் முடிக்கலை, பெரியவா சொன்னா.. .. “ப்ரணதார்த்தின்னு சொல்லாதே! அது ஸ்வாமி பேரு. அதைக் கெடுக்காதே! ஒண்ணு….. ப்ரணதார்த்திஹரன்னு சொல்லு. இல்லேன்னா, ஹரன்னு சொல்லு. நமஸ்காரம் பண்றவாளோட பீடையெல்லாம் போக்கிடுவார் ஸ்வாமி. அதுதான் பேர். வெறும்ன ப்ரணதார்த்தின்னா பீடைன்னு அர்த்தம்” “இப்பிடித்தான் எல்லாரும் கூப்பிடுவா! அதே பழக்கமாயிடுத்து” “அதுனாலதான் இப்பிடி இருக்கே! நீ அத்யயனம் பண்ணினியோ?” “தாத்தா எனக்கு ஸாமம் எல்லாம் கத்து குடுத்தா” “ஒரு ஸாமம் சொல்லு”ன்னு சொல்லி, எல்லாரும் ப்ரஸித்தமா சொல்ற ஸாமத்தை சொன்னா பெரியவா. ரெண்டு மூணு வாக்யம் சொன்னான். குரல் நன்னா கணீர்..ன்னு இருந்தது. “மேல மறந்து போச்சு” “ஒனக்கு அண்ணா, தம்பி யாராவது இருக்காளா?” “ரெண்டு பேர் அண்ணா! அவா இங்க்லீஷ் படிப்பு படிச்சு எங்கேயோ வேலைல இருக்கா. நான் நன்னா சொல்றேன்னு தாத்தா எனக்கு ஸாம வேதம் சொல்லி குடுத்தா……….எனக்கு அது பிடிக்கலை. வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்” “இப்போ என்ன பண்றே?” “போலீஸ்காராளுக்கு உதவி பண்ணறேன்” “போலீஸ்காராளுக்கு நீ உதவி பண்றியா? அது என்ன உதவி?” “கோர்ட்டுக்கெல்லாம் அழைச்சுண்டு போவா! சாட்சி சொல்லச் சொல்லுவா, அதுக்கு படி குடுப்பா” “ஒனக்கு இந்த புகை பழக்கம் எப்படி வந்துது?” “அவாகூட போறப்போ, கட்டுகட்டா பீடி வாங்குவா. ரெண்டு மூணு எனக்கும் குடுப்பா” “கோர்ட்டுல நீ பாத்ததைத்தானே சொல்லுவே?” “நான் ஒண்…ணையும் பாத்ததில்லே, அவா இப்டி இப்டி சொல்லுன்னு சொல்லிக் குடுப்பா, அதை அப்படியே சொல்லுவேன்” “வக்கீல்கள்ளாம் உன்னை தாறுமாறா கேள்வி கேட்பாளே?” “ஆமாம்….கட்டாயம்! அதுக்குத்தான் போலீஸ்காரா என்னை கொலை நடந்த இடத்துக்கே அழைச்சுண்டு போய்…. இந்த இடத்தில், இப்படிக் கொலை நடந்தது. நீ இங்க நின்னு பாத்துண்டு இருந்தே, கூட்டமா இருந்தது, வேடிக்கை பார்த்தே….கொலைகாரன் கிழக்கு பக்கமா ஓடினான், அவன் கையில அரிவாள் இருந்தது, அதுல ரத்தம் கொட்டித்து…… இப்டில்லாம் சொல்லி கொடுப்பா! பல கேஸ்ல ஸாக்ஷி சொல்லியிருக்கேனா ! நல்ல பழக்கம். வக்கீல் எப்பிடி கேட்டாலும் கெட்டிக்காரத்தனமா பதில் சொல்லிடுவேன். ரெண்டு மூணு தடவை உளறிட்டேன், அதுக்காக போலீஸ்காரா செமையா என்னை அடிச்சுட்டா!” “கோர்ட்டுக்கு போறப்போ சட்டையெல்லாம் போட்டுண்டு போவியோ?” “இல்ல, இல்ல! போலீஸ்காரா விடமாட்டா ! பட்டை பட்டையா விபூதி போடணும். பூணூலை நன்னா ஸோப்பு போட்டு வெளுத்துக்கணும். இடுப்புல துண்டை கட்டிண்டு வரணும்னு நிர்பந்தப்படுத்துவா” “இந்த மாதிரியெல்லாம் சாட்சி சொல்றது பாவமில்லயா?” “பாவந்தான், நன்னா தெரியறது. எனக்கு வேற வழியில்லையே!” “அப்டியா? நா….ஒரு வழி காட்டறேன், செய்வியா?” [அதமனுக்கும் வழி காட்டும் ஜகத்குரு] “சொல்லுங்கோ” “மைலாப்பூர்ல கபாலீஸ்வரன் கோவில் இருக்கு. தெனோமும் ஸாயரக்ஷை அங்க போய், மேல கோபுர வாஸலை நன்னா பெருக்கி, ஜலம் தெளிச்சுட்டு வா! ஒனக்கு தெனொமும் பத்து ரூவா பணம் தரச் சொல்றேன். மத்யான்னம் சாப்பாடும் போடச் சொல்றேன்” [1965ல் பத்துரூபாய் எவ்வளவு பெரிய தொகை!!] “கோவில் உண்டைக்கட்டில்லாம் எனக்கு ஒத்து வராது” “கோவில் ப்ரஸாதம் வேண்டாம். வாரத்ல ஒவ்வொரு நாள் ஒவ்வொருத்தர் ஆத்துல சாப்பாடு போட சொல்றேன். ராத்ரி, அந்த பத்து ரூவால சாப்டுக்கோ!” “அதெல்லாம் சரியா வராது” “அவசரப்படாதே! ரெண்டு நாளைக்கு மடத்துல இரு. சந்த்ரமௌலீஸ்வரர் பூஜையை பாரு. பூஜை ஆனாவிட்டு, உடனேயே உனக்கு சாப்பாடு போட சொல்றேன். யோசிச்சு பதில் சொல்லு” “இன்னிக்கு அது முடியாது. எழும்பூர் கோர்ட்ல பெரிய கேஸ் ஒண்ணு இருக்கு! சாட்சி சொல்ல போகாட்டா, முதுகெலும்பை முறிச்சுடுவா! நான் போறேன்” ன்னு போயே போய்விட்டான் ! பெரியவா அவன் காம்பவுண்ட் தாண்டி போறவரைக்கும், அவனையே பாத்துண்டு இருந்தார். நானும் நீலகண்டய்யரும் பெரியவாளோட உள்ள போனோம் . ஐயர்வாள் சொன்னார்…. “பெரியவா இவ்ளோவ் சொல்லியும், அவன் கேக்கலியே!…” “அவன் இருக்கட்டும். போலீஸ்காரா பொய் சாட்சின்னு… ஒரு தொழிலையே ஜனங்களுக்கு கத்துக் குடுத்துட்டாளே !…” “போலீஸ்காரா என்ன பண்ணுவா? பட்டப்பகல்ல பல பேர் பாக்க, கொலை நடந்திருக்கு! இன்னார்தான் பண்ணினான்னு நன்னாத் தெரியறது. ஆனா, கோர்ட்ல சாட்சி சொல்றதுக்கு யார் போவா? அவா அவாளுக்கு அவா அவா ஜோலி! சாட்சி சொல்றேன்னு போனாக்க, வக்கீல்கள் தாறுமாறா கேள்வி கேட்டு அவாளை அலைக்கழிக்க விட்டுடுவா. அப்றம் அதுலேர்ந்து தப்பிக்கவும் முடியாது. அதுனால நேர்ல பாத்தவா சாட்சி சொல்ல மாட்டா! கோர்ட்ல குத்தவாளியே குத்தத்தை ஒப்புத்துண்டாக்கூட, சாட்சி இல்லாட்டா, கேஸ் நிரூபணம் ஆகலேன்னு கேஸை தள்ளுபடி பண்ணிடுவா. போலீஸ்காரா சரியா கேஸை நடத்தலேன்னு வேற புகார் கெளம்பும். அதுனால வேற வழி இல்லாம, சாட்சியை ஜோடிக்க வேண்டியிருக்கு….” பெரியவா; “கொலை…ஒரு அந்யாயம்; கொலையைப் பாத்தவா சாட்சி சொல்லாதது, அடுத்த அநியாயம்; பாக்காதவா, பொய் சாட்சி சொல்றது மூணாவது அநியாயம்….இத்தனை அநியாயத்தையும் நியாயப்படுத்தறாப்போல நீ வாதம் பண்ற!…” “பெரியவா க்ஷமிக்கணும்….லோகத்ல நடக்கறதை சொன்னேன்..” “இதுல இன்னொரு வேதனை…. இத்தனை அக்ரமமும் ப்ராஹ்மண ரூபத்ல! ப்ராஹ்மணன் பொய் சாட்சி சொன்னாக்கூட, அதை ஸத்யம்னு கோர்ட்ல நம்புவான்னு போலீஸ்க்கு நம்பிக்கை இருக்கே. அதெல்லாம் போட்டும்….இந்த ஸ்ரௌதிகள் பேரன் இப்பிடி இருக்கானே!” “பெரியவா சொல்றதை காதுலேயே வாங்க மாட்டேங்கறானே?..” “அவன் என்ன செய்வான்? கோர்டுக்கு போகாட்டா…போலீஸ்காரா அடிப்பாங்கறானே ?” “பெரியவா ரொம்ப க்லேஸப் படறாப்போல இருக்கு….நாங்கள்ளாம் என்ன செய்ய முடியும்?..” “ஸந்யாஸி ஸுகதுக்கங்களுக்கு மனஸ்ல எடம் கொடுக்கப்படாதுன்னு சாஸ்த்ரம் இருக்கு. தெரியுமோ?”ன்னு கேட்டுண்டே ஸ்நானம் பண்ண போனார். மத்யானம் மூணு மணி இருக்கும். நான் பூஜைக்கட்டு பக்கத்ல இருந்த வராண்டால படுத்துண்டிருந்தேன். “ராமா!…” பூஜைக்கட்டுல ஸகல கைங்கர்யமும் பண்ணிண்டிருந்த மேலூர் ராமசந்த்ரய்யர் கூப்ட்டார். ரொம்ப ஆசாரம் ஜாஸ்தி. ஒரு சின்னத் தப்புகூட நேர்ந்துடாதபடி, அப்டி கவனிச்சு கவனிச்சு கைங்கர்யம் பண்ணுவார். அவரைக் கண்டா அங்க இருக்கற எல்லாருக்கும் ஸிம்ஹ ஸொப்பனம்! “இன்னிக் காலம்பற பெரியவா சவாரியிலே நீ கூட வந்தாயோ?…” “வந்தேனே!..” “அப்போ என்ன நடந்தது?..” “ஒண்ணுமில்லியே ” “ஏதோ நடந்திருக்கு! பெரியவா இன்னிக்கி பூஜையே பண்ணலே…” “அப்டியா! ஒருவேளை…அது வந்து”…..ன்னு மெதுவா பரவாக்கரை ஸ்ரௌதிகள் பேரனோட கதையை சொன்னேன். நான் அவர் தலைல அடிச்சுண்டு நகர்ந்து போய்ட்டார்! கொஞ்ச நேரத்தில் பெரியவா கொட்டாய் பக்கம் போனா.. ..நமஸ்காரம் பண்ணினேன். “மேலூர் மாமா என்ன சொன்னார்? அவர் இன்னிக்கி சாப்பிடலையாமே? விஜாரிச்சியோ?…” “பெரியவா பூஜை பண்ணாததால, பிக்ஷையும் பண்ணல; பெரியவா பிக்ஷை பண்ணாம, மேலூர் மாமா சாப்ட மாட்டாரே” என்னோட கண்ணுலேர்ந்து ஜலம் வந்துது….. “என்னவோ சொல்லணும்னு நெனைக்கறே! சொல்லிடேன்….” “பெரியவாட்ட என்ன சொல்ல முடியும்? ஸ்ரீதர ஐயர்வாள் ஸ்லோகம் ஒண்ணு நெனவுக்கு வருது” “ஐயாவாள் சுலோகமா? பக்திரஸம் கொட்டுமே! சொல்லு பார்க்கலாம்.” ” த்வந் நாமதேய ரஸிகா; தருணேந்து மௌலே …துக்கம் ந யாந்தி கிமபீதி ஹி வாதமாத்ரம். …தேSமீகில ஸ்வவிபதீவ வஹந்தி துக்கம் …த்ருக்கோசரீபவதி துக்கிநி ஜந்துமாத்ரே : “இன்னொரு தடவை சொல்லு!…” ” த்வந் நாமதேய ரஸிகா; தருணேந்து மௌலே …துக்கம் ந யாந்தி கிமபீதி ஹி வாதமாத்ரம். …தேSமீகில ஸ்வவிபதீவ வஹந்தி துக்கம் …த்ருக்கோசரீபவதி துக்கிநி ஜந்துமாத்ரே : “எங்கே அர்த்தம் சொல்லு பார்க்கலாம்” “இளம்பிறைச் சந்திரனைத் தலையில் சூடிக்கொண்ட பெருமானே! உலகில் எல்லாரும் சொல்வார்கள்.- சிவசிவ என்கிற மதுரமான நாமத்தை ரஸித்துச் சொல்பவர்கள் துயரப்படமாட்டார்கள் என்று. அது வெறும் பேச்சுதான். உண்மையிலே- மனுஷனாகட்டும்,பசு-பூச்சியாகட்டும், எந்த ஜீவனாவது கஷ்டப்படுவது அவர்களுடைய கண்களில் பட்டு விட்டால், அந்தக் கஷ்டம் தனக்கே வந்து விட்டது போல உருகி விடுவார்கள்” “நன்னாச் சொன்னே! அதிலே ஒரு ஸ்வாரஸ்யம் கூட இருக்கு. கவனித்தாயா!” “என்ன? நான் கவனிக்கவில்லையே!” ‘தருணேந்து மௌலே – என்கிறார். நம்ம சந்த்ரமௌளீச்வரரைப் பார்த்துதான். இப்படி சொல்கிறார். அவருடைய குருநாதர் போதேந்த்ர ஸரஸ்வதி பூஜை பண்ணின மூர்த்திதானே சந்த்ரமௌளீச்வரர்.அவரிடம்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார்’ என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தார்கள். ……………………………………………………………………………………………………………………… கட்டுரையாளர்;-சொல்கிறார். இவன் உதட்டிலே ஒன்று சொல்ல வேண்டுமென்று ஒரு துடிப்பு வந்தது.சொல்லியிருந்தால் அபசாரமாகுமோ,என்னவோ? நமக்குள்ளே பரிமாறிக்கலாமே! முன்னூற்றைம்பது வருஷங்கள் முன்னால் இருந்த ஸ்ரீதர ஐயாவாள்,பிறர் கஷ்டத்தைக் கண்டு உருகுகின்ற மனமுடைய ஒரு பெரியவாள்அவதாரம் பண்ணப்போகிறார் என்று,அந்த சந்த்ரமௌலீசுவரரிடம்விண்ணப்பித்திருக்கிறாரே.!download

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 6

ஆயின், அந்தப் பராசக்தி மகாமாயையாக இருப்பதன் விசேஷம், முப்பது ஆண்டுகளுக்குப் பின் இன்றைக்கும் ‘என்றைக்கோ வரத்தான் செய்யும்’ என்று நினைக்குமாறேதான் வைத்திருக்கிறாள்! ஆனாலும் அவளே கொஞ்சத்தில் கொஞ்சம் ஞானாம்பாளாக அநுக்ரஹம் செய்திருப்பதில், அன்று அச்சமயத்தில் ‘நாம் எழுதியது வெளி வார வேண்டும்’ என்ற ஆசையும், வரும் என்பதில் திருப்தியும் ஏற்பட்டாலும் பொதுவாக அந்த எண்ணம் எனக்குக் கிடையாது. எழுத்துப் பணி வெளிக்கார்யம் உள்ளுலகிலேயே நிலைப்படுத்துவதற்கு குந்தமாக இருப்பதாகத்தான் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஆகையால் பெரியவாளின் ஸம்பூர்த்தியான சரித்ரம் இனி என்றோ வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, ஸ்வய சரித்ரம் ‘ஸ்வயம்’ பூர்த்தியாக அடிபட்ட நிலையில் நிலைப்பதே முக்யம் என்பது தான் எண்ணமாக உள்ளது. முன்‌கதைக்குத் திரும்புவோம். தாம் ஜீவியவந்தாராக உள்ளபோதே நான் எழுதும் தமது ஜீவிய சரிதம் வருவதில் தமக்கு விருப்பமில்லை என்று கூறிய பெரியவாள் ஏனென்றும் விளக்கினார். அதன்பின், ‘பூராவா வரணும்-கிறது ஒண்ணு. வரது பூராவும் ஸரியாயிருக்கணும்-கறது ஒண்ணு. இது ரொம்ப முக்யம். பெறத்தியார் சொல்லி கேட்டு எழுதறது முழுக்க அப்டி இருக்கும்னு சொல்ல முடியாது. ஒவ்வொத்தன் ஸமாசாரமும் அந்த ஒத்தனுக்கு மட்டுந்தானே முழுக்க ஸரியாத் தெரியும்? ‘முழுக்க’னு சொல்ல முடியாட்டாலும் இங்கே க்லோஸா இருக்கறவா, கூடிய மட்டும் ஸத்யமா இருக்கறவா எழுதியிருக்கறதும், அந்த மாதிரி இருக்கப்பட்டவாளை நீ கேட்டு அவா சொல்றதும் பெரும்பாலும் ஸரியாவே இருக்கும். அதையெல்லாம் பாத்து, கேட்டு, அதை பேஸ் பண்ணி எழுதிண்டு போ. ஆனா, ஃபைனலா எங்கிட்டே காட்டு, என் கண்ணு, புத்தி ஸரியா இருக்கற மட்டும் எங்கிட்டயே கொண்டு வா. பாத்து, ஸரி பண்ணவேண்டி ஏதாவது இருந்தா, பண்றேன்.” எதிர் பாராத இந்த மஹா வரத்துடன், இன்னொரு மஹா வரமும் ஈந்தார். “ என்னையே ஏதாவது கேட்டுக்கணும்னாலும் கேளு; தாராளமாகக் கேளு. நீ கேக்காமயே, எனக்கா என்னவாவது சொல்லணும்னு தோணினாலும் சொல்றேன்.” என்ன இருந்தாலும் இப்படி வராநுக்ரஹத்தைக் கோட்டை விடக்கூடாதென்று தோன்றிவிட்டது போலும்! படுத்துகிற, ஆனாலும் சமர்த்தான குழந்தையின் அழகுப் பார்வையுடன், “இப்படிச் சொன்னதால எல்லாம் சொல்லிவிடுவேன்னு நினச்சுண்டுடாதே!” என்றார். இன்னும் பலவும் அந்த உரையாடலில் உண்டு. ‘இப்போதிக்கு’ இது போதும். ‘நடக்கணும்-னு இருந்தா” மீதம் வருகிறபோது வரும். தம்மையே வாழ்க்கை விவரங்கள் கேட்க அவர் அநுமதித்ததின் பேரில் நான் கேட்ட, எழுதிவைத்துக் கேட்ட ஒன்றுதான் தொடக்கத்தில் கண்ட கணபதி ஆவாஹன மந்திர விஷயம். அதில் பெரியவாளுக்கு முந்தயப் பட்டத்தைத்தான் ‘கலவை சின்னப் பெரியவாள்’ என்று குறிப்பிட்டு இருந்தேன். அவருக்கு முந்தயவர் ‘கலவை பெரிய பெரியவாள்’. இருவருமே கலவையில் ‘ஸித்தி’ ஆனவர்கள் என்பதும் 66-வது பட்டமான பெரிய பெரியவாளுக்குப் பின் அடுத்த பட்டம் எட்டே நாள்தான் பீடம் வகித்து வாழ்வை முடித்தவரென்றும் வாசகர்கள் அறிந்திருபார்கள். அந்த சின்னப் பெரியவர் நமது பூர்வாச்ரமத்தில், நமது மஹா பெரியவாளின் பெரியம்மா புத்திரரே என்பதும் தெரிந்திருக்கலாம். நமது பெரியவாளின் தாய்வழிப் பாட்டனார் திருவையாற்றுக்கு அருகே உள்ள ஈச்சங்குடி கிராமத்தைச் சேர்ந்த நாகேச்வர சாஸ்திரிகள் என்ற பெரும் வேத வித்வான். தர்ம சாஸ்திரப் பிரயோகங்களில் வல்லவர். அவருக்கு மூன்று புத்திரர், மூன்று புத்திரி. மூத்த புத்திரி லக்ஷ்மியம்மாளின் ஏக புத்திரரே பிறகு கலவை சின்னப் பெரியவரானவர். லக்ஷ்மியம்மாள் பல்லாண்டுகள் புத்ராபாக்யமின்றி இருந்தாள், அவள் வயிறு திறப்பதற்கு நாகேச்வர சாஸ்திரிகள் ஈச்சங்குடியிலுள்ள லக்ஷ்மிநாராயணப் பெருமாளை வேண்டிக்கொண்டார். பத்தாம் மாதம் மலடியின் மடி நிறைய மணிப் பயல் பிறந்துவிட்டான். மாயப் பெருமாள் எப்படியெப்படி திருவிளையாடல் புரியப் போகிறான் என்று அப்போது யார் கண்டது? அவன் பெயரையே சற்று மாற்றி லக்ஷ்மீகாந்தன் என்று குழந்தைக்கு இட்டார் மாதாமஹர். ‘காந்தன்’ என்றே கூப்பிடுவார்கள். மெய்யாலுமே பாலனிடம் ஒரு வசீகர காந்தம் இருந்தது. காந்ததோடு சந்தமும்! மஹாப் பெரியவாளின் இந்த ஒன்றுவிட்ட அண்ணா- பிற்காலத்தில் அவரது நேர் குரு – பிறந்தது 1890-ல். அதாவது பெரியவாளைவிட அவர் நாலு வயசு மூத்தவர். தாய்வழியில் அக்குடும்பம் பல துறைகளில் மஹா மேதைகளை ஈந்த ஒரு பரம்பரையாகும். கன்னட ஹொய்ஸள ஸ்மார்த்தரில் ஒரு பிரிவே இது. ஹொய்ஸளர் பற்றி நம் ஸ்ரீசரணர் சரித்திரப் பேராசிரியரும் அருஞ்சுவைக் கதாசிரியரும் ஒருங்கே ஆகிப் பல சொன்னதுண்டு. -தொடரும்.. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.

பாலிவுட்டில் கலக்கும் தமிழ் ஒளிப்பதிவாளர் ‘நட்டி’

natti-actor ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களைக்  களவாடியிருப்பவர் நட்டி என்கிற நட்ராஜ். விரிவாகச்சொன்னால் நடராஜன் சுப்ரமணியன்.பாலிவுட்டில் இன்றைய மோஸ்ட் வாண்டட் கேமராமேனான இவர், இப்போது பரபரப்பான நடிகராகிவிட்டார். அண்மையில் வந்துள்ள ‘கதம் கதம்’ படத்தில்கூட மோசமான போலீசாக வருகிறார். ஒளிப்பதிவில் தனக்கான ஒரு பாணியை உருவாக்கிப் பயணிக்கும் நட்டி ,நடிப்பில் கெட்டது செய்தும் கைதட்டலை அள்ளி வருகிறார். மார்ச்மாதத்து ஒரு மாலைநேரத்து மயங்கிய ஒளியில் அவரைச் சந்தித்தபோது நீங்கள் ஓர் ஒளிப்பதிவாளராக ஆனது எப்படி?  எனக்கு சொந்த ஊர் பரமக்குடி. நான் எட்டு வயதாக இருக்கும் போது பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு குடும்பம் சென்னைக்கு வந்தது. நான் படித்ததெல்லாம் சென்னையில்தான். எனக்கு கேமரா மீது தணியாத ஆர்வம். எங்கள் தூரத்து உறவினர் ஒருவர் கேமரா வாங்கியிருந்தார். அதைத் தொடவேண்டும் பார்க்க என்று அவரைச் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒரு கட்டத்தில் என்னிடம் அதைக் கொடுத்து எடுக்கச் சொன்னார். எனக்குத் தெரிந்த விதத்தில் எல்லாம் படங்கள் எடுத்து பிரிண்ட் போட்டு அவரிடமே காட்டினேன். இப்போதெல்லாம் டிஜிட்டல் வந்து விட்டது. அப்போதெல்லாம் ஒரு பிலிம் ரோல் வாங்க 56 ரூபாய் வேண்டும். பணம் தேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இப்படி கேமரா ஒளிப்பதிவு மோகத்தில் இருந்தேன். நிறைய்யய படங்கள் பார்ப்பேன். இப்படி இருந்த நான் முதலில் ரங்காவிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். பிறகு பி.ஆர். விஜயலட்சுமியிடம் சேர்ந்தேன்.அவர்தான் என் பெயரை நட்டு என்றாக்கினார்.இந்திக்குப்போனதும் நட்டி ஆக்கிவிட்டார்கள்… அதன் பிறகு நண்பன் யூகே செந்தில்குமாருடன் இணைந்தேன். இப்படி படிப்படியாகத்தான் நான் ஒளிப்பதிவாளர் ஆனேன். இந்திப் பக்கம் போனது எப்படி? வட இந்தியாவில் நம் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. ஒருவரிடம் திறமை இருக்கிறது என்றால் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள். அதில் அவர்களுக்குத் தயக்கமே கிடையாது. எல்லா கிரிக்கெட்டர்களுடன்,நடிகர்களுடன் நிறைய விளம்பரப்படங்கள் ,மியூசிக் வீடியோஸ் செய்தேன்.அதைப் பார்த்துவிட்டுத்தான் அங்கே அழைத்தார்கள்.அப்படிப் போன நான். ‘லாஸ்ட் ட்ரெய்ன் டு மகாகாளி ‘,பாஞ்ச்’,’ப்ளாக் ப்ரைடே’,பரிணிதா’,ஜப்விமெட்’,’ராஞ்ச்சனா’ என்று தொடர்ந்து’ ஹாலிடே…’ வரை 16 படங்கள் இந்தியில் செய்து விட்டேன் 8 கோடி பட்ஜெட்டிலிருந்து 80 கோடி வரை வேலைபார்த்து விட்டேன்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம்.அதன்மூலம் நிறையக்கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தியில் மெதுவாகவே படம் எடுப்பார்கள் என்பார்களே..? அதெல்லாம் அந்தக் காலம் இப்போது பாலிவுட் திரையுலகம் கார்ப்பரேட் மயமாகி விட்டது. பூஜை போடும் போதே வெளியிடும் தேதியையும் அறிவித்து விட்டுத்தான் தொடங்குகிறார்கள். அதனால் எல்லாம் குறித்த நேரத்தில் நடக்கும். படங்கள் எடுப்பதில் நம்மவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு? அங்கே எல்லாம் கார்ப்பரேட் ஆகிவிட்டது. இங்கே கார்ப்பரேட் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்திப் படங்கள் பெரும்பாலும்கலகலப்பான எண்டர் டெய்னர்ஸ்தான். சீரியஸான முயற்சிகள் மிகக் குறைவு அவர்களின் வியாபார ஏரியா பெரியது எனவே பொழுதுபோக்கு தன்மையுடன்தான் படங்கள் இருக்கும் ஒரு ரிக்ஷாக்காரன், மெக்கானிக்கை எல்லாம் வைத்து அங்கு படங்கள் எடுக்க முடியாது. ஒரு ‘காதல் ‘மாதிரி ஒரு ‘வழக்கு எண் மாதிரி’ அங்கே கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாது. கலகலப்பான கலர்புல்லான குடும்பப் படங்கள்  வரவேற்கப்படும். அங்கே காதல் ஒரு பிரச்சினை இல்லை. விருப்பப்பட்டால் இருவேறு சமூகத்தினர் திருமணம் செய்து கொள்ள முடிகிறது. எனவே சாதி சமூகம் சார்ந்த சிக்கல்கள் பெரிதாக இல்லை. நிச்சயமாக தமிழில் மாறுப்பட்ட சோதனை முயற்சியாக படைப்புகள் வருகின்றன. வரவேற்கவும் செய்கிறார்கள். ஒளிப்பதிவில் யதார்த்தமாக   பதிவுசெய்வது, எதையும்  அழகுணர்வோடு செய்வது  இவற்றில் எது உங்கள் பாணி? இயல்பான ஒளியில் செய்வது அழகுணர்வோடு செய்வது யதார்த்தம் எல்லாமும் எனக்குப் பிடிக்கும் கதையும் திரைக்கதையும் எதைக் கேட்கிறதோ அதையே நான் செய்வேன். திரைக்கதையும் பட்ஜெட்டும் தான் எவ்வகை என்பதை முடிவு செய்யும் நடிப்பு என்பது உங்களுக்குள் இருந்த ரகசியக் கனவா? நிச்சயமாக அந்த எண்ணம் எனக்குள் இருந்ததில்லை. ஒரு கேமராமேனாக விதம்விதமாக படங்களில் பணியாற்றி திறமை காட்டவே ஆசைப்பட்டேன். நான் உதவியாளனாக இருந்த போதே நடிக்க வாய்ப்பு வந்தது. மறுத்து விட்டேன். நான் முதலில் நடித்தது ‘நாளை’ படம்.அதில் நடிக்க வேண்டிய நடிகர் கடைசி நேரத்தில் வராமல் போகவே வேறு வழி இல்லாமல்தான் நான் நடிக்க வேண்டி இருந்தது. இப்படி நான் நடிகரானது ஒரு விபத்துதான் அப்புறம் ‘சக்கரவியூகம்’ நான் தயாரிப்பில் ஈடுபட்ட படம். அதில் நடித்தேன்.பிறகு’முத்துக்கு முத்தாக’ ‘மிளகா’, ‘சதுரங்கவேட்டை’ ‘இப்போது ‘கதம்கதம்’ வந்திருக்கிறது. ஒரு நடிகராக உங்களுக்கு நம்பிக்கை வந்து விட்டதா? முதலில் நடிக்கும் போது தயக்கம், பதற்றம் இருந்தது உண்மைதான் அடுத்தடுத்த படங்களில் எனக்கு நானே மார்க் போட்டுக் கொள்வேன். இன்றும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாம் என்று தோன்றும். ‘சதுரங்கவேட்டை’ படம்தான் நடிகராக உங்களை நீண்ட தொலைவு கொண்டு சென்றது என்று கூறலாமா? நிச்சயமாக ‘சதுரங்கவேட்டை’.எனக்கு மிகப் பரந்த பரப்பிலான பார்வையாளர் களைத் தேடிக் கொடுத்தது. அந்த பாத்திரத்தை ரசித்து செய்தேன்.அந்தப் படத்துக்குப் பிறகு என்னைப் பார்க்கிறவர்களில் பலர் என்றால், 10 பேரில் 4 பேருக்கு இப்படி ஏமாந்த அனுபவம் இருக்கிறது.அதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்கு இல்லை என்றால்கூட தங்கள் நண்பர்களுக்கு நிகழ்ந்ததைக் கூறுகிறார்கள். ஒளிப்பதிவு நடிப்பு எதற்கு முன்னுரிமை தருவீர்கள்? நான் இப்போது ‘புலி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். நடிக்க படங்கள் வந்த போது ‘புலி’க்காகவே காத்திருந்தேன்.அதில் விஜய்யுடன் பணியாற்றியது மறக்க முடியாத து.அவர் தொழில்நுட்பக்கலைஞர்களை மதிக்கத்தெரிந்தவர். ‘புலி ‘நிச்சயம் ஒரு மாஸ் படமாக வரும்.ஒளிப்பதிவுக்கு இரண்டு இந்திப் படங்கள்  கையில் உள்ளன. நடிப்பைப் பொறுத்தவரை ‘உத்தரவு மகாராஜா’, ‘குண்டு இட்லி கேர் ஆப் கும்பகோணம்’ மட்டுமல்ல மேலும் 2 புதிய படங்களிலும் நடிக்க உள்ளேன்.நடிக்கும் படங்களில் நான் வெறும் நடிகன் மட்டுமே.கேமரா பக்கம் கவனம் செலுத்தமாட்டேன். ஒளிப்பதிவு நடிப்பு எதற்கு முன்னுரிமை என்றால் எனக்கு சுய திருப்தியும் படைப்பு அனுபவமும் தருவது ஒளிப்பதிவு த் துறைதான் நடிகனாக நடித்தாலும்  எந்தக் காலத்திலும் அதைக் கைவிட மாட்டேன். நடிப்பில் யாரைப் போல வர ஆசை? அப்படி எதுவும் இல்லை. போகப்போக கற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு பாத்திரமும் புதுவிதமாக இருக்க வேண்டும். பார்ப்பவர்களுக்கு போரடிக்கக் கூடாது. மசாலா மணம் எப்போதும் புதிதாக இருக்க வேண்டும்.