Home Blog Page 6168

திருவாரூர் கட்டட விபத்து: பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

திருவாரூர்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக அலுவலர்கள் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழக அலுவலர்கள் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் திருவாரூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவையில் சிறுமி பலாத்கார சம்பவம்: 2 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், கீழ்புட்டுபட்டு, அகதிகள் முகாமைச் சேர்ந்த சந்திரனின் மகள், அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது, பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாலா, பிரபு என இருவர், கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கோட்டைகுப்பம் போலீசார் பாலா, பிரபு இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்தியர் மீது தாக்குதல் : அமெரிக்க போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்தியரைத் தாக்கிய அமெரிக்க போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் மேடிசன் நகர் பகுதியில் வசித்து வரும் தனது மகன், மருமகள், புதிதாக பிறந்த பேரக் குழந்தையை பார்த்து வருவதற்காக குஜராத்தை சேர்ந்த சுரேஷ் பாய் படேல் (57) சென்றிருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 6-ந்தேதி அவர் அந்தப் பகுதியில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் காட்சி தருவதாக போலீசில் ஒருவர் புகார் செய்தார். உடனே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். ஆங்கில மொழி தெரியாத அவர் தொடர்ந்து பதில் அளிக்க முடியாமல் திணறியபோது, எரிக் பார்க்கர் (26) என்ற போலீஸ் அதிகாரி அவரை மடக்கி கீழே பிடித்து தள்ளினார். இதில் அவர் முடமானார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இந்தியா தலையிட்டு, அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது அதைத் தொடர்ந்து எப்.பி.ஐ. விசாரணை நடத்தியது. அலபாமா மாகாணத்தின் கவர்னர் ராபர்ட் பென்ட்லி, இந்திய அரசிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே எரிக் பார்க்கர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர், பணி நீக்கம் செய்யுமாறு அரசுக்கு மேடிசன் போலீஸ் துறை பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அரசு வக்கீல்கள் குழுவினர், எரிக் பார்க்கர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தனர். இது தொடர்பாக உதவி அட்டார்னி ஜெனரல் வனிதா குப்தா, அலபாமா வடக்கு மாவட்ட அட்டார்னி ஜாய்ஸ் வான்சி ஆகியோர் எரிக் பார்க்கர் மீது பதிவு செய்த குற்றச்சாட்டில்… சுரேஷ் பாய் படேலை கீழே தள்ளிவிட்டு எரிக் பார்க்கர் முடமாக்கி விட்டார். பார்க்கரின் செயல்கள், அமெரிக்க அரசியல் சாசனத்தின்படி, பாதிக்கப்பட்ட நபர் உரிமையை இழக்க செய்துள்ளது. போலீஸ் அதிகாரிகள், சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும்தான் பதவி ஏற்கிறார்கள். தங்களது பதவிப்பிரமாணத்தின்மீது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை காக்காமல், மீறி, பலப்பிரயோகம் செய்த ஒருவர் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் – என்று கூறப்பட்டுள்ளது. எரிக் பார்க்கர், தன் மீதான குற்றசாட்டை மறுத்து விட்டார். இதையடுத்து அவர் மீது அடுத்த மாதம் 29-ஆம் தேதி முறைப்படியான நீதிமன்ற விசாரணை தொடங்கி நடைபெறும். இந்த வழக்கில் எரிக் பார்க்கர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அமெரிக்க மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க முடியும்.

வண்டலூர் பூங்கா மார்ச் 31-ஆம் தேதி திறந்திருக்கும்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா மார்ச் 31-ம் தேதி செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்பு பணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படுவது வழக்கம். இருப்பினும் தேர்வு விடுமுறை மற்றும் அரசு விடுமுறைகளை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை வழக்கம்போல் செயல்படும்.

வெற்றியுடன் விடை பெற்றார் கிளார்க்: ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு

  மெல்போர்ன்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 74 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸி., கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆட்டம் இழந்தார். ஏற்கெனவே அவர் அறிவித்திருந்தபடி, இந்தப் போட்டியுடன் அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். வெற்றிகரமாக போட்டியை நிறைவு செய்து, கோப்பை வாங்கிக் கொடுத்த ஆனந்தக் கண்ணீருடன், ரசிகர்களிடம் இருந்து கிளார்க் விடை பெற்றார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் அவரை பாராட்டினர்.

உலகக் கோப்பையை 5 ஆம் முறையாக வென்றது ஆஸ்திரேலியா

australia-won-worldcupமெல்பர்ன் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, 5 ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலில் விளையாடிய நியூசிலாந்தை 45 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழக்கச் செய்து, 183 ரன் மட்டுமே எடுக்க வைத்தது ஆஸ்திரேலியா. எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா 33.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மித் 56 ரன் எடுத்தார். வார்னர் 45 ரன் எடுத்தார். க்ளார்க் 74 ரன் குவித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா கோப்பையை வென்று சாதனை படைத்தது.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் மேலும் பல நாடுகள் இணையும்: ஜீ ஜிங் பிங்

பீஜிங்: சீனா உருவாக்கி வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் மேலும் பல நாடுகள் இணையும் என்று அதிபர் ஜீ ஜிங் பிங் தெரிவித்தார். சீனாவின் தென் பகுதியிலுள்ள ஹைனான் தீவில் நடைபெறும் போவோ சர்வதேசக் கருத்தரங்கில், நேபாளம், இலங்கை அதிபர்கள், மைக்ரோஸாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், டாடா முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சர்வதேச அளவில் முக்கியத் தொழிலதிபர்கள், அதிகாரிகளும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர். டாடா முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்யும் போவோ நிர்வாகக் குழு உறுப்பினராக கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டார். இந்தக் கருத்தரங்கில் சனிக்கிழமை கலந்து கொண்டு பேசிய சீன அதிபர் ஜீ ஜிங் பிங், பொருளாதாரத்தில் தாராள மயம், வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கு ஏற்ற சூழல், முதலீட்டாளர்களின் சட்டபூர்வமான உரிமைகளுக்கும் நலன்களுக்கும் பாதுகாப்பு ஆகியவற்றை சீனா உறுதி செய்யும். சீனா உருவாக்கி வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இந்தியா உள்பட 30 நாடுகள், உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளன. ரஷியாவும் இந்த வங்கியில் பங்கு பெறப் போவதாக அறிவித்துள்ளது. அந்த வங்கியில் உறுப்பு நாடாகச் சேருவதற்கு கடைசி நாளான மார்ச் 31-ஆம் தேதிக்குள் மேலும் பல நாடுகள் அதில் பங்கு பெறுவதாக அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

அண்டை நாடுகளுடன் நட்புறவுக்கு சீனா தயார்: ஜீ ஜிக் பிங்

அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புறவு, ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஏற்படுத்த சீனா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்தார். சீன அரசு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் போவோ சர்வதேசக் கருத்தரங்கில் சனிக்கிழமை கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் … “தூரத்து உறவினர்களைவிட, அண்டை வீட்டார் மேல்’ என்று சீனாவில் ஒரு பழமொழி உண்டு. அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படுத்தும் முயற்சிகளை சீனா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நட்புறவு, ஒத்துழைப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்யும் விதமாக அண்டை நாடுகள் அனைத்துடனும் ஒப்பந்தம் ஏற்படுத்த தயாராக உள்ளோம் என்றார்.

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு; ஆர்ப்பாட்டம்

தேவாரம் அருகே அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தி 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அம்பரப்பர் மலை முன்பு போராட்டம் நடத்தினர். பொட்டிப் புரம், புதுக்கோட்டை, சின்ன பொட்டிப்புரம், ராமகிருஷ்ண புரம், தம்மிநாயக்கன்பட்டி ஆகிய 5 கிராமங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் அம்பரப்பர் மலையடிவாரத்தில் குவிந்தனர். டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களில் பொதுமக்கள் வந்தனர். பொட்டிப்புரத்தில் நியூட் ரினோ ஆய்வு மையம் அமைக் கும் திட்டத்திற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மலையடி வாரத்தில் திடீர் போராட்டத் தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத் தினர். அனுமதியின்றி போராட் டம் நடத்துவது தவறு என்றும், கலைந்து செல்லா விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் அனைவரும் புதுக்கோட்டை கிராமத்தில் கூடி, ஆலோசனை நடத்தினர். அப்போது, அம்பரப்பர் மலையடி வாரத்தில் உள்ள அம்பராயன் கோவிலில் திருவிழா நடத்துவது, நியூட்ரினோ ஆய்வு திட்டத்தின் ஆபத்து குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நியூட்ரினோ திட்டத்தை நிரந்தரமாக தடை செய்யும் வகையில் அறவழியில் தொடர்ந்து போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.

திருவாரூர் கட்டட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: திருமாவளவன் கோரிக்கை

சென்னை:
திருவாரூர் கட்டட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடுதர வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
 திருவாரூர் பல்கலைக்கழகக் கட்டட விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டதாகவும், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.  தமிழக அரசு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாயும் இழப்பீடு வழங்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
திருவாரூர் மாவட்டம், கங்களாஞ்சேரி அருகே நாக்குடி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில்,  250 கோடி ரூபாய் செலவில் மத்திய பல்கலைக்கழக கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அங்கு இன்று (29-3-2015) காலை கான்கிரீட் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்றபோது, மேற்கூரையும் சுவரும் இடிந்து விழுந்து வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மத்திய பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் கட்டுமானப் பணியிலேயே பாதுகாப்பற்ற, தரமற்ற நிலை இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.  இந்தக் கட்டட விபத்துக்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தற்போது பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் தொழிலாளர்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். அங்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகளில் வெளி மாநிலத் தொழிலாளர்களே அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுக்கப்படுவதோடு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. கட்டுமான நிறுவனங்கள் ஏறக்குறைய அவர்களைக் கொத்தடிமைகளாகவே நடத்துகின்றன.  இதைத் தமிழக அரசு அனுமதிப்பது முறையல்ல.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காகவும் நலன்களுக்காகவும் உடனடியாக சிறப்புத் திட்டம் ஒன்றை வகுக்கவேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. – என்று கோரிக்கை விடுத்துள்ளார்.