சண்டிகார்: பஞ்சாப் மாநிலம், இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ரத்தன்குர்த் என்ற இடத்தில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற கடத்தல்காரர்கள் இருவரை, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஏகே 47ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பல முறை சரணடையச் சொல்லியும் அவர்கள் சரண் அடையாததால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
‘நண்பேன்டா’ படத்துக்கு வரி விலக்கு இல்லை: நீதிமன்றம் செல்கிறார் உதயநிதி
சென்னை: ‘நண்பேன்டா’ படத்துக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டு இருப்பதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘நண்பேன்டா’ படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். ‘யு’ சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து வரி விலக்கு அதிகாரிகளுக்கு படம் திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் படத்துக்கு வரி விலக்கு அளிக்க முடியாது என்று அதிகாரிகள் மறுத்துவிட்டனர். படத்தில் ஆபாச காட்சிகளோ, ஆபாச வசனங்களோ இல்லாத பட்சத்தில் எதற்காக வரி விலக்கு மறுக்கிறார்கள் என வரி விலக்கு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதே போன்ற பிரச்னை, உதயநிதியின் முந்தைய படமான ‘இது கதிர்வேலன் காதல்’ படத்துக்கும் ஏற்பட்டது. அதற்கும் உதயநிதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
விற்பனைக்கு தயார் நிலையில் ஒன்றாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல்
சென்னை: ஒன்றாம் வகுப்பு தமிழ் பாட நூல்கள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அனைத்துப் பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டில் (2015-2016) இருந்து ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, 2015-16-ம் கல்வி ஆண்டில் பல்வேறு வாரியங் களைச் சேர்ந்த அனைத்துப் பள்ளிகளும் கட்டாயமாக தமிழ் மொழி பாடத்தை 1-ம் வகுப்பில் நடைமுறைப்படுத்த வேண்டும். எனவே, 1-ம் வகுப்பு பாட நூல்கள் அச்சடிக்கப்பட்டு பாட நூல் கழகத்தின் சென்னை மற்றும் மதுரை வட்டார அலுவலகங்களில் விற்பனைக்குத் தயார்நிலையில் உள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகள் சென்னை வட்டார அலுவலகத்திலும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட் டங்களில் உள்ள பள்ளிகள் மதுரை வட்டார அலுவலகத்திலும் பாடநூல்களைப் பெற்றுக் கொள்ளலாம். பாடநூலின் விலை ரூ.60 ஆகும். வட்டார அலுவல கங்களின் முகவரி வருமாறு: சென்னை: வட்டார அலுவலர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், வேளச்சேரி மெயின் ரோடு, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் அருகில், திரு வான்மியூர், சென்னை 600 041. தொலைபேசி எண்: 044-22541326, செல்: 9962478471, 9566116271. மதுரை: வட்டார அலுவலர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பாண்டியன் சூப்பர் மார்க்கெட், செந்தாமரை கிடங்கு, முடக்கு சாலை, தேனி ரோடு, மதுரை 625 010. தொலைபேசி எண் 0452-2381484 செல்: 9894057786 என்று கூறப்பட்டுள்ளது.
லீ- இறுதி ஊர்வலம் துவக்கம்: தேசிய துக்க தினம் அனுசரிப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூர் முதல் பிரதமரும், நிறுவனருமான லீ க்வான் யூவின் இறுதி ஊர்வலம் துவங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்தியாவில் தேசிய துக்க தினம் அனுசரிப்பு: இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை இன்று மறைந்த சிங்கப்பூர் முதல் பிரதமருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்தியா தேசிய துக்க தினத்தை அனுசரிக்கிறது. இதை ஒட்டி இன்று தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படுகிறது. இன்று அரசு முறை விழாக்கள் எதுவும் இல்லை. லீ-க்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி லீயின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளார்.
183 ரன்னுக்கு நியூசிலாந்து ஆட்டமிழப்பு
மெல்பர்ன்: உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 45 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 183 ரன்னே எடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எளிய இலக்கை நிர்ணயித்தது. துவக்கம் முதலே நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். குப்டில் 15 ரன்னிலும், மெக்குலம் ரன் ஏதும் எடுக்காமலும், வில்லியம்சன் 12 ரன்னிலும் ஆட்டம் இழந்ததால், அணியின் ரன் வேகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர் வந்த டெய்லர் 40 ரன்னும், எலியாட் 83 ரன்னும் எடுத்தனர். இருப்பினும் பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழக்க, நியூசிலாந்து அணி 45 ஓவரில் 183 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது.
புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடை: புதிய அரசின் வெற்றி என்கிறார் அஜித் பேரேரா
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடையைக் கொண்டுவந்திருப்பது, இலங்கையின் புதிய அரசுக்குக் கிடைத்த பெரும் அரசு ரீதியான வெற்றி என்றார் அந்நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அஜித் பெரேரா. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை கொண்டு வருவது குறித்து இலங்கை அரசு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து விடுதலைப் புலிகள் இயக்கம் மீது ஐரோப்பிய ஒன்றியம் சில நாட்களுக்கு முன் மீண்டும் தடையைக் கொண்டுவந்தது. விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடை இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேச அளவிலும்கூட அது மிக முக்கியமான ஒன்று என அஜித் பெரேரா கூறினார். இலங்கையில் மறுகட்டமைப்பு தொடர்பாக இலங்கை அரசு செயல்படும் நேரத்தில், பயங்கரவாதத்துக்கு எதிராக அது செயல்படுவது என்பதும் மிக முக்கியம். எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடை விதித்திருப்பது இலங்கைக்கு முக்கியம்தான். மஹிந்த ராஜபட்ச தலைமையிலான முந்தைய அரசின் ராஜதந்திர செயல்பாடுகளில் காணப்பட்ட குறையினாலேயே ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வருடம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட காரணமாயிருந்தது. மேலும், இலங்கையின் புதிய அரசுப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சகம் ஆகியவற்றின் முயற்சிகளின் காரணமாகவே, விடுதலைப்புலிகள் மீது மீண்டும் தடை வந்துள்ளது என்றும் கூறியுள்ளார் அஜித் பெரேரா. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் கடந்த வருடம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விஷன் – 2023: வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் கோரிக்கை
சென்னை: விஷன் – 2023 இலக்குகளை எட்ட அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப் போவதாக கடந்த 2001 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்றது முதல் ஜெயலலிதா கூறி வந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. 2011 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பின் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போவதாகக் கூறி, தொலைநோக்குத் திட்டம் -2023 (Vision 2023) என்ற ஆவணத்தை 22.03.2012 அன்று ஜெயலலிதா வெளியிட்டார். தொலைநோக்குத் திட்டம் -2023 வெளியிடப்பட்ட பிறகு, இரு ஆண்டுகள் கழித்து 23.02.2014 அன்று அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டதைத் தவிர அதன் இலக்குகளை எட்டுவதற்காக தமிழக அரசு இன்றுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. தொலைநோக்கு திட்டத்தின் முதல் இலக்கு 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் ரூ.6.20 லட்சமாக உயர்த்துவது ஆகும். திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், நடப்பாண்டில் தனிநபர் வருமானம் ரூ. 2 லட்சமாக உயர்ந்திருக்க வேண்டும்; ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அக்குடும்பத்தின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ.10 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தின் தனிநபர் வருமானம் இப்போது தான் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ரூ. 15 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இதுவரை ரூ.4.09 லட்சம் கோடி செலவிடப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ. 4,000 கோடி கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் மாநில வளர்ச்சிக்கு அவசியமான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. உதாரணமாக, 20,000 மெகாவாட் அளவுக்கு அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, இதில், 17,340 மெகாவாட் திறன் கொண்ட 13 மின் திட்டங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தது. இவற்றில் 660 மெகாவாட் எண்ணூர் மின்திட்டம், 1600 மெகாவாட் உப்பூர் மின் திட்டம் ஆகியவை அடுத்த ஆண்டில் முடிக்கப்பட்டு மின்னுற்பத்தி தொடங்கப்பட வேண்டும். தூத்துக்குடி, உடன்குடி, வடசென்னை, சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் 8120 மெகாவாட் திறன் கொண்ட 7 திட்டங்களை 2017 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தியாக வேண்டும். 2018 ஆம் ஆண்டிற்குள் 1460 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டங்களும், 2020 ஆம் ஆண்டுக்குள் 1500 மெகாவாட் திறன் கொண்ட ஜெயங்கொண்டம் மின் திட்டம் உட்பட மொத்தம் 5500 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த 13 திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக இதுவரை ஒற்றை செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை. இவற்றில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் திட்டங்களுக்கான இடம் கூட இன்னும் முடிவாகவில்லை. நெடுஞ்சாலை வசதிகளைப் பொறுத்தவரை செங்கல்பட்டு-தூத்துக்குடி, தூத்துக்குடி- கோயம்புத்தூர், கோவை- செங்கல்பட்டு இடையே ரூ. 24,000 கோடி செலவில் முக்கோண 6 வழி/8 வழி சாலைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இவை மட்டுமின்றி, ரூ.1.34 லட்சம் கோடி செலவில் மொத்தம் 16 பெரிய சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தொலைநோக்குத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் காகிதத்தில் கனவுத் திட்டங்களாக இருக்கின்றனவே தவிர நடைமுறையில் நனவுத் திட்டமாக மாற்ற எந்த முன்முயற்சியும் எடுக்கப்படவில்லை. ரூ.1.88 லட்சம் கோடி செலவில் மத்திய அரசுடன் இணைந்து தொடர்வண்டிப் பாதை மேம்பாட்டுத்திட்டங்கள், ரூ.25,000 கோடியில் விமான நிலைய விரிவாக்கத் திட்டங்கள், ரூ.1,60,985 கோடியில் தொழில்துறை திட்டங்கள், நகர்ப்புறங்களில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு புதிய வீடுகளைக் கட்டித்தருவதற்காக ரூ.25,000 கோடியில் திட்டங்கள் என ஏராளாமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்துமே அறிவிப்பு நிலையிலேயே உள்ளனவே தவிர, செயல்பாட்டுக்கு வருவதாக தெரியவில்லை. அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, தாய்-சேய் இறப்பு விகிதம் குறைப்பு, அனைத்து கிராமங்களுக்கும் கண்ணாடி இழை வழியாக அகண்ட அலைவரிசை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வேளாண்துறை ஆண்டுக்கு 8 & 10% வளர்ச்சியை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொலைநோக்குத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டே வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 12 விழுக்காடாக குறைந்தது தான் மிச்சம். மொத்தத்தில் தொலைநோக்குத் திட்டம் தொலைதூரத்தில் இருக்கிறதே தவிர, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இல்லை. இந்த உண்மையை ஒட்டுமொத்த தமிழகமும் உணர்ந்திருக்கிறது. தொலைநோக்குத் திட்டம் 2023 வெளியிடப்பட்டதற்கு அடுத்த நாள் (24.03.2012) கிருஷ்ணகிரி செய்தியாளர்கள் கூட்டத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த நான்,‘‘ தொலைநோக்குத் திட்டத்திலுள்ள அம்சங்களைப் பார்த்ததும் விட்டலாச்சாரியா படம் பார்த்த உணர்வு தான் ஏற்பட்டது. மாயாஜாலங்களை நிகழ்த்தினால் கூட இந்த இலக்குகளை எட்ட முடியாது. 1991 ஆம் ஆண்டில் முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது முதல் இதையே தான் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கப்போவதாகவும், இதை செயல்படுத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார். இவையெல்லாம் தமிழகத்தை தனியாருக்கு கூறு போட்டு விற்கும் நோக்கம் கொண்டவை’’ என்று கூறியிருந்தேன். அது இப்போது உண்மையாகிவிட்டது. இத்திட்ட இலக்குகளை எட்டுவதில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஆனால், கடன் மட்டும் அப்போதிருந்த ரூ.1 லட்சம் கோடியிலிருந்து ரூ.4.12 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் வளர்ச்சியைடைவதாக வாய்ப்பந்தல் போடும் ஆட்சியாளர்கள், தொலைநோக்குத் திட்டம் 2023 இலக்குகளை எட்டுவதற்காக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? இதுவரை எவ்வளவு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது? என்பது உள்ளிட்ட விவரங்களை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். – என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
செல்போன் அழைப்புக் கட்டணம்: 10 பைசா வரை உயரும்?
செல்போன் அழைப்புக் கட்டணம் நிமிடத்திற்கு 10 பைசா வரை உயர வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ரிலையன்ஸ் ஜியோ என்ற புதிய நிறுவனம் வாடிக்கையாளர்களை இழுக்க புதிய சலுகை அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரிகிறது. அதைப் பொருத்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வை நிர்ணயிக்கும் என்று தெரிகிறது. இருப்பினும், செல்போன் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தக்கூடாது என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். செல்போன் கட்டணத்தை நிமிடத்துக்கு 1.3 பைசாவுக்கும் அதிகமாக உயர்த்தக்கூடாது என்றார் அவர். தொலை தொடர்புத்துறைக்கான அலைக்கற்றை ஏலம் அண்மையில் விடப்பட்டது. இந்த ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1.09 கோடி லட்சம் வருவாய்க் கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் உரிமம் ஏலம் இதுவரை இந்த அளவுக்கு நடந்தது இல்லையாம். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே இந்த ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. இதனால் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 68 சதவீத பிரிமியத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் தனியார் நிறுவனங்களால் எடுக்கப்பட்டுள்ளது. 19 நாட்களாக 115 சுற்றுக்களில் நடந்த இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனல், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடோ போன், டாடா டெலிசர்வீஸ், யுனினார், ஐடியா செல்லுலார், ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த நிறுவனங்களிடையே நிலவிய போட்டியால் அவற்றின் ஒட்டு மொத்த கடன் இரண்டரை லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் 2ஜி, 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த நிறுவனங்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் பணத்தைக் கட்டும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 28 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாகச் செலுத்த வேண்டியுள்ளது. அடுத்தக்கட்டமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். எனவே கடன் சுமையைக் குறைக்க செல்போன் அழைப்புக்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையில் தனியார் நிறுவனங்கள் உள்ளன. செல்போனில் பேசுபவர்களிடம் நிமிடத்துக்கு 5 பைசா முதல் 10 பைசா வரை கூடுதலாக வசூலித்ததால் தான் ஏலம் எடுத்த தொகையை சமாளித்து லாபம் பெற முடியும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே செல்போன் கட்டணங்கள் ஓரளவு உயரும் என்று கூறப்படுகிறது.
பீகாரில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் வங்கி!
பாட்னா: உத்தரவாதம் தருவதற்கு யாரும் இல்லாமல், வங்கிகள் எதுவும் கடன் கொடுக்காததால் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே பிச்சைக்கார வங்கி ஒன்றை பீகாரில் தொடங்கி நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலய நகரமான கயாவில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள தொகையான 800 ரூபாயை மூலதனமாக வைத்து இந்த வங்கி இயங்கி வருகின்றது. இந்தக் குழுவைச் சேர்ந்த ராஜ் குமார் மாஞ்சி என்பவர் இதன் மேலாளராக உள்ளார். மாஞ்சியின் மனைவி நகினா தேவி பொருளாளராக இருக்கிறார். செயலாளராக மாலதி தேவியும், பிச்சைக்காரர்களிடம் இருந்து வார சந்தாத் தொகையை வசூல் செய்யும் முகவராக வனரிக் பஸ்வான் என்பவரும் பொறுப்பேற்றுள்ளனர். இந்த வங்கியில் மேலும் பல பிச்சைக்காரர்களை இணைத்து, அவர்களின் எதிர்கால சேமிப்புக்கு உதவி செய்வதே எங்கள் நோக்கம் என்கிறார் மாஞ்சி. மாநில அரசின் சமூக நலத் துறை கடந்த ஆண்டு வலியுறுத்தியதன் விளைவாக இந்த வங்கியைத் தொடங்கும் முயற்சியில் இறங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வங்கியினால் அடைந்த பலனைப் பற்றி குறிப்பிட்ட மாஞ்சி, ‘அண்மையில் என் மகளும், சகோதரியும் சமையல் செய்து கொண்டிருந்தபோது தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்கள். அப்போது, சிகிச்சை செலவுக்கு எங்கள் வங்கி 8 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன் தந்து உதவியது. என்னைப் போன்ற பிச்சைக்காரர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியோ, தனியார் வங்கியோ உரிய உத்தரவாத நபர் இல்லாமல் கடன் கொடுக்க முன்வருவதில்லை. இதைப் போன்ற சூழலில் எங்கள் மங்கலா வங்கி பிச்சைக்காரர்கள் அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்கிறார் அவர்.
சிங்கப்பூர் சென்றார் பிரதமர் மோடி
சிங்கப்பூர் : சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ-யின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்திய நேரப்படி காலை 8 மணியளவில் அவர் சிங்கப்பூர் சென்றடைந்தார். லீ-யின் இறுதிச் சடங்கில் டோனி அபோட், பில் கிளின்டன், உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

