Home Blog Page 6170

திருவாரூர்: மத்திய பல்கலை கட்டட மேற்கூரை சரிந்து 3 பேர் பலி

திருவாரூர்: திரூவாரூரில், 100 ஏக்கர் பரப்பளவில், 250 கோடி ரூபாய் செலவில், மத்திய பல்கலைக் கழக கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இங்கு, கான்கிரீட் மேற்கூரை அமைத்தபோது, மேற்கூரையும், அருகில் உள்ள சுவரும் திடீரென சரிந்தன. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். தொழிலாளர்கள் 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வாழும்கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்

Yoga and meditation in Malaysia புது தில்லி: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.Letter from ISIS to IAHV and AOL Malaysia- 2 வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அண்மையில் மலேசியா சென்றிருந்தார். அப்போது அவருக்கு கூரியர் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து வாழும் கலை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அனுப்பிய தகவல்: கொலை மிரட்டல் கடிதம் சில நாட்களுக்கு முன்பு மலேசிய பயணத்தின்போது வந்தது. அந்த நேரம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கம்போடியாவில் இருந்தார். கொலை மிரட்டல் பற்றி உடனே இந்திய தூதரகம் உள்பட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் என்று கூறி 3 கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. நீங்கள் உங்களின் வாழும் கலை அமைப்பைத் தொடர்ந்து நடத்தினால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈராக் சென்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வன்முறையை கைவிடுமாறு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை கேட்டுக் கொண்டார். மலேசியா பினாங்கில் உள்ள ஹோட்டல் ஜென்னின் மேலாளர் கெவின் வெய்ட் ஹெட்டுக்கு ஒரு கடிதமும், மலேசியாவில் உள்ள வாழும் கலை அமைப்பின் இயக்குனர் அம்பிகா மேனனுக்கு ஒரு கடிதமும், வாழும் கலை அமைப்பின் மூத்த உறுப்பினர் எஸ் இ மெய்க்கு ஒரு கடிதமும் வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மலேசியா பினாங்கில் பத்தாயிரம் பேர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியில் ரவிசங்கர் கலந்து கொண்டார். பின்னர் மாலை நேரத்தில் பட்டு கவான் மைதானத்தில் 70ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசினார். Cover of letter to IAHVCover of letter to IAHV-2

அமேதிக்கு விரைவில் வருவார் ராகுல்: சோனியா காந்தி

sonia-amethi அமேதி: அமேதி தொகுதிக்கு விரைவில் வந்து மக்களைச் சந்திப்பார் ராகுல் காந்தி என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறினார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் திடீர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சோனியா காந்தி சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ராகுல் காந்தி விடுமுறை எடுத்து வெளியில் சென்றுள்ள நிலையில், தொகுதி மக்களை அவருக்கு பதிலாக சோனிய காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரேபரேலி, அமேதி தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு எந்த இடையூறு வந்தாலும், அதனை நாங்கள் தீர்த்து வைப்போம். ராகுல் காந்தி ஓய்வெடுப்பதற்காகச் சென்றுள்ளார். அவர் விரைவில் திரும்புவார் என்றார் சோனியா காந்தி. முன்னதாக, தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் உள்ள பச்வார், பந்திப்பூர், சிவ்புரி ஆகிய கிராமங்களுக்கு சோனியா காந்தி சென்றார். அங்கு அவரிடம், திடீர் மழையால் கோதுமை, கடுகு ஆகிய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் முறையிட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவி செய்ததா? என சோனியா காந்தி கேட்டார். அதற்கு அவர்கள், மத்திய அரசின் உதவிகள் தங்களுக்கு கிடைத்ததாகவும், ஆனால் உத்தரப் பிரதேச அரசு அறிவித்த உதவி இன்னமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்ட சோனியா காந்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு அதைக் கொண்டு சென்று, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பிறகு, சர்வோதயா, உதர்பாரா கிராமங்களுக்குச் சென்ற அவர், அண்மையில் ரயில் விபத்தில் உயிரிழந்த சிவேந்திர சிங், சிட்ல பிரசாத் மிஸ்ரா ஆகியோரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

“நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம்.!”

“நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்;திரும்பிப் போங்கள்” சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.10357599_860696523975514_1831596007967451521_n தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு, தரிசனத்துக்காகச் சென்றிருந்தார்கள், பெரியவாள். சதாசிவப் பிரும்மேந்திரரிடம், பெரியவாளுக்கு இருந்த பக்திக்கும்,மரியாதைக்கும் எல்லையே காண முடியாது. பிரும்மேந்திரர் பெயரைச் சொன்னாலும், கேட்டாலும், உருகிப் போய்விடுவார்கள்,பெரியவாள். அதிஷ்டானத்தில்,ஜபம் செய்வதற்கு உட்கார்ந்து விட்டார்கள்,பெரியவாள். அதிஷ்டான அன்பர்களும், பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் பணியாளர்களும், சற்றுத் தொலைவுக்குப் போய் நின்று கொண்டார்கள். பெரியவாள், அதிஷ்டானங்களுக்குள் சென்று ஜபம் செய்வதையோ, சந்யாஸ முறைப்படி வணங்குவதையோ யாரும் பார்க்கக்கூடாது என்பது,ஸ்ரீமடத்து சம்பிரதாயம். மானுட எல்லைகளுக்கு அப்பால் சென்று, தெய்வீகத்தின் நுழைவாயிலில் நிற்கும் அபூர்வ தருணங்கள், அவை. இந்தக் கட்டுப்பாடு, பக்தர்களின் நலனை முன்னிட்டுத் தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நூறு வாட்ஸ் மின்விளக்கையே பார்த்துப் பழகிய கண்கள் எதிரில், லட்சம் வாட்ஸ் மின் ஒளியைப் பாய்ச்சினால், எப்படித் தாங்கமுடியும்? அந்தச் சமயம் பார்த்து வெகு அவசரமாக வந்தார். ஓர் அன்பர் – ரங்கசாமி. “பெரியவாளை உடனே தரிசனம் பண்ணனும். பிரசாதம் வாங்கிக்கொண்டு உடனே புறப்படணும்”. என்று, மனம் திறந்து தொண்டர்களிடம் முறையிட்டார். “சுவாமி, பெரியவாள், கதவை சார்த்திக்கொண்டு அதிஷ்டானத்துக்குள் ஜபம் செய்து கொண்டிருக்கா, இப்போ யாரும் அவாளைத் தரிசிக்க முடியாது. தியானம் கலைந்து பெரியவாள் தானாகவே வெளியே வந்தவுடன் முதன் முதலாக நீங்கள் தரிசனம் செய்து கொள்ளலாம்.” வந்தவர், இலேசுபட்டவர் அல்லர்; ரொம்பவும் அமுக்கமான பேர்வழி!. தொண்டர்களின் பேச்சைக் கேட்டு சமாதானம் அடைந்துவிட்டாற்போல, பாவனை செய்து கொண்டிருந்தார். தொண்டர்களின் சுதந்திரமான வாய்வீச்சு, அடக்குவாரின்றி வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது. பேச்சு வெள்ளத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். கண்ணிமைக்கும் பொழுதில், புதிதாக வந்த அன்பர் ரங்கசாமி அதிஷ்டானத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு, உள்ளே சென்றுவிட்டார்! இந்தத் தடாலடித் திட்டத்தை யாரும் எதிர்பார்க்காததால் எல்லோரும் குழம்பிப் போய் நின்றார்கள். அந்த நேரத்தில் அதிஷ்டானத்திலிருந்து பெரியவாளின் குரல், அதுவரையில் சிஷ்யர்கள் கேட்டறியாத ஒரு கம்பீரத்வனியில் தெளிவாகக் கேட்டது. “நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்;திரும்பிப்போங்கள்” அன்பர் ரங்கசாமி கதவை மூடிவிட்டு, சட்டென்று வெளியே வந்தார். அணுக்கத் தொண்டர்கள் அவரை மொய்த்துக்கொண்டு விட்டார்கள். ரங்கசாமி ஒரு கதையே சொன்னார். அவருடைய நெருங்கிய உறவினருக்கு, திடீரென்று நெஞ்சுவலி. பரிசோதனை செய்த டாக்டர்கள், “நாற்பத்தெட்டு மணி நேரம் போனால்தான்,உறுதியாக சொல்ல முடியும்” என்று சொல்லிவிட்டார்கள். ஜோசியர், “உடனே ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்யுங்கள்” என்றார். உடனே போய், பெரியவாளிடம் தெரிவித்துப் பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்தால் நல்லது என்று ஒருவர் ஆலோசனை; வயதான மூதாட்டி ஒருவர், “பெரியவா, இதோ பக்கத்திலே, நெரூர்லே தானே இருக்கார். அவாகிட்ட சொல்லிவிடுங்கோ,அவா பார்த்துப்பா” என்று சொன்னதை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். அதன்படி தான், அன்பர் ரங்கசாமி அவ்வளவு அவசரப்பட்டிருக்கிறார். அவருடைய அதிர்ஷ்டம் – தெய்வமே அவருக்கு அருள்வாக்குக் கூறிவிட்டது! ரங்கசாமி வீட்டுக்குள் நுழைந்தபோது அந்த நோயாளி உறவினர், படுக்கையில் உட்கார்ந்து புன்முறுவலித்துக் கொண்டிருந்தார். “ஆமாம், இன்னும் ஒரு நூறாண்டு அவருக்கு காரண்டி!”

குறுக்கீடில்லா உலகம்!

dog_crossing_street நாயொன்று குறுக்கே போச்சு நானும்ப்ரேக் மிதிக்க லாச்சு வள்ளென்று கத்தி விலகிப் போச்சு திக்கென்று நெஞ்சு துடிக்க லாச்சு! நாயில்லா சாலை வாய்ப்பும் இல்லை நாய்போலே குறுக்கிடா மாந்தரும் இல்லை பிரேக்ஒன்று இருப்பதாலே விபத்தும் இல்லை தடைசிறிது வருவதாலே தளர்வும் இல்லை!

மிசோராம் மாநில ஆளுநர் திடீர் பதவி நீக்கம்

புது தில்லி: மிசோரம் மாநில ஆளுநர் பதவியில் இருந்து அஜிஸ் குரேஷியை மத்திய அரசு இன்று திடீரென நீக்கியது. இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மிசோரம் ஆளுநர் பதவியில் இருந்து குரேஷி விடுவிக்கப்படுகிறார். புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை மிசோரம் ஆளுநர் பொறுப்பை மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி கூடுதலாகக் கவனிப்பார் – என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் மிசோரம் மாநிலத்தில் 6 ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

விமானக் கடத்தல் முயற்சி உண்மையில்லை: மறுக்கிறது விமானப் போக்குவரத்துத் துறை

air-india-flight புது தில்லி: ஏர் இந்தியா விமானத்தை கடத்த பயங்கரவாதிகள் 6 பேர் சதி செய்ததாகவும், அவர்கள் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருந்ததாகவும், விமான பணிப்பெண்களின் முயற்சியால் அவர்களின் சதி முறியடிக்கப்பட்டது என்றும் ஒரு விமானி ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்தத் தகவலை விமானப் போக்குவரத்துத் துறை செயலர் மறுத்துள்ளார். இந்தச் சம்பவம் 10 நாட்களுக்கு முன் நடந்ததாகவும், ஆனால் இப்போதுதான் அது வெளியில் தெரிந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இப்படி ஒரு சம்பவம் குறித்து எதுவுமே எங்களிடம் ரிப்போர்ட் ஆகவில்லை, இது ஒரு தவறான தகவல் என்று இந்திய விமான போக்குவரத்துத் துறை செயலாளர் சோமசுந்தரம் கூறியுள்ளார். இது குறித்து முன்னர் வெளியான செய்தியில் அண்மையில் தில்லியிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடுவானில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா நிறுவன விமானம் ஒன்று அண்மையில், தில்லியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றது. நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் திடீரென தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். இதனால், அந்த பயணிக்கு விமானப் பணிப் பெண்கள் அவசர உதவிகளைச் செய்தனர். அப்போது பயணிகளில் 5 பேர் எழுந்து வந்து, தங்களை மருத்துவர்கள் என்று கூறிக்கொண்டனர். பின்னர் உடல்நலக்குறைவு என்று கூறிய பயணியைச் சோதித்தனர். பின்னர் அந்த 5 பேரும் விமானியை வரச் சொல்லுங்கள் அல்லது தலைமை விமானி அறைக்குள் அனுமதியுங்கள் என்று வற்புறுத்தியுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள் அந்த 5 பேரையும் விமானி அறைக்குள் செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர். அதேபோல் வெகுநேரம் வற்புறுத்தியும் அவர்களை காக்பிட் அறைக்குள் அனுமதிக்கவில்லை, தலைமை விமானியும் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. விமானம் லண்டன் சென்று சேர்ந்ததும் 5 பேரும் அவசர அவசரமாக வெளியேறிச் சென்று விட்டனர். அவர்களது நடவடிக்கைகளால் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள் இதுபற்றி, உடனடியாக விமான நிறுவனத்திடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த 5 பேர் பற்றியும் ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை செய்தது. அப்போது அவர்கள் 5 பேரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாஸ்போர்ட் வைத்திருந்தனர் என்றும் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்தது. அவர்கள் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டபோது அவை போலி என்று தெரிய வந்தது. அதுபோல உடல் நலக்குறைவு என்று கூறிய பயணிக்கு உண்மையிலேயே உடல் நலக்குறைவு ஏற்படவில்லை என்றும், அவர் விமானப் பணிப்பெண்களை ஏமாற்ற நடித்து இருப்பதும் தெரிந்தது. அவரும் போலி தொடர்பு எண் கொடுத்திருந்தார். எனவே அவர்கள் 6 பேரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் ஏர் இந்தியா விமானத்தை நடுவானில் கடத்திச் சென்று நாசவேலையில் ஈடுபட அவர்கள் 6 பேரும் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. யாரும் சந்தேகப்படாதபடி செயல்பட்டு அவர்கள் விமானத்தை கடத்தி நாசகர செயலில் ஈடுபட முயன்று இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய விமான போக்குவரத்துதுறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பயணிகள் யாரையும் விமான காக்பிட் அறைக்குள் அனுமதித்து விடாதீர்கள். விதிகளை முழுமையாக கடைபிடியுங்கள். விழிப்போடு இருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.- என்று கூறப்பட்டிருந்தது. இதனால், இந்த முயற்சி இந்திய விமானத்தைக் கடத்த நடந்த சதிச்செயலா என்று பெரும் சந்தேகம் எழுந்தது. இது குறித்து முழு அளவில் விசாரிக்கப்படும் என்றும் இது போன்று எதுவும் தங்களுக்கு ரிப்போர்ட் ஆகவில்லை என்றும் விமான போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சம் தொட்ட சாய்னா நேவால்: பேட்மின்டனில் முதலிடம் பெற்று சாதனை

saina-nehwal சர்வதேச பேட்மின்டன் தரவரிசையில் உச்சம் பெற்றுள்ளார் சாய்னா நேவால். சர்வதேச அளவில் முதலிடம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.. தில்லியில் நடைபெற்றுவரும் இந்தியன் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகித்துவந்த ஸ்பெயினின் கரோலினா மரின் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனிடம் தோற்றதால் இந்தியாவின் சாய்னா நேவாலுக்கு உலகத் தரவரிசையில் முதலிடம் வருவதற்கான புள்ளிகள் கிடைத்தன. இன்று நடைபெற்ற இந்தப் போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் ஜப்பானின் யுயி ஹஷிமோட்டோவை எதிர்த்து சாய்னா விளையாடவுள்ளார். இந்தப் போட்டியில் சாய்னா வெற்றி பெறாவிட்டாலும்கூட உலகத் தர வரிசையில் முதலிடத்தை அவர் தக்க வைப்பார். இந்தியன் ஓபனில் சாய்னா அரையிறுதியை எட்டியிருப்பதும் இதுவே முதல் முறை. உலகத் தர வரிசையில் முதலிடம் வந்துள்ளது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சாய்னா, தலைசிறந்த வீராங்கனையாகத் திகழவேண்டும் என்பதே தன் கனவு என்றும், முதலிடம் இரண்டாம் இடம் என்பதெல்லாம் தனக்கு அவ்வளவாக முக்கியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார்: சிரிய அதிபர்

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார் என்று சிரிய நாட்டு அதிபர் கூறியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிரியா அதிபர் ஆசாத், ஜான் கெர்ரியின் அறிவிப்பு குறித்து கூறுகையில், ‘ஒவ்வொரு பேச்சுவார்த்தையும் சாதகமான அம்சம்தான். எனவே பரஸ்பர மரியாதை அடிப்படையில் அமெரிக்கா உள்பட யாருடனும் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்’ என்று கூறினார். எனினும் டமாஸ்கஸ் மற்றும் வாஷிங்டன் இடையே நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று கூறிய ஆசாத், சிரியாவின் இறையாண்மைக்கு பாதிப்பின்றி நிகழும் எந்த பேச்சுவார்த்தையத வரவேற்கத்தக்கதுதான் என்று தெரிவித்தார். முன்னதாக ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டுப் போர் ஆகியவற்றால் சிரியா கடந்த 2011–ம் ஆண்டு முதல் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. சிரியா அதிபர் பஷார் அல்–ஆசாத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி சமீபத்தில் கூறுகையில், ‘சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அந்த நாட்டு தலைவருடன் அமெரிக்கா பேச்சு நடத்த வேண்டும்’ என்று கூறினார். ஆனால் இந்த விவகாரத்தில் ஆசாத்திடம் ஒருபோதும் பேரம் பேசமாட்டோம் என அமெரிக்கா பின்னர் அறிவித்து இருந்தது.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து மேதா பட்கர் ராஜினாமா

metha-patkarபுது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து சமூக ஆர்வலர் மேதா பட்கர் இன்று ராஜினாமா செய்துள்ளார். ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும் இன்று தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் மேதா பட்கர் அதிருப்தி அடைந்து ஆம் ஆத்மியை விட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து மேதா பட்கர் கூறுகையில், பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தியவர் பிரசாந்த் பூஷண். நாட்டின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்தியவர்களில் முதன்மையானவர். அதுபோல் யோகேந்திர யாதவ் அடித்தட்டு மக்களின் குறிப்பாக விவசாயிகளின் பேராதாரவைப் பெற்றவர். அவர்களை அப்படி நீக்கியிருக்கக் கூடாது. ஆம் ஆத்மியில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவதை நான் விரும்பவில்லை. அதேபோல் ஒருவரே பல பொறுப்புகளை வகிப்பதும் சரியானதல்ல. ஆகையால் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்கிறேன்” என்று அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து மேலும் பலரும் வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.