மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவிய இந்திய அணி வீரர்கள் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களின் வருகையையொட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எப்போதும் உற்சாகமாக வீரர்களை வரவேற்கக் காத்திருக்கும் ரசிகர்கள் இந்தமுறை இல்லை. விராட் கோலி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் வந்திறங்கினார். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. உடன் பின்னால் ஜடேஜாவும் சோகமான முகத்துடன் வந்தார். இந்நிலையில் தோனியின் வருகையை எதிர்நோக்கியிருப்பதாக அவரது மனைவி சாக்ஷி டிவிட்டரில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நமது அணிக்காக கடுமையாக போராடினீர்கள். பெருமைப்படுகிறேன். சிலவற்றில் வெல்லலாம், சிலவற்றை இழக்கலாம். ஆனால் செய்த தியாகங்கள் மதிப்புக்குரியவை என்றுள்ளார்…
தோல்வியுடன் திரும்பிய இந்திய வீரர்கள்: வரவேற்பு பலமில்லை; பாதுகாப்பு பலம்
எங்களுக்கு ஆதரவு தாருங்கள்: இந்திய ரசிகர்களுக்கு நியூஸி. கேப்டன் கடிதம்
இறுதிப் போட்டியில் முதல்முறையாக ஆட வுள்ள எங்களுக்கு உங்களின் ஆதரவினைத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் நியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்கலம். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நாளை நியூசிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா மோதுகிறது. இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்கு உங்களது ஆதரவைத் தெரிவியுங்கள் என்று ஒரு திறந்த மடலை எழுதியுள்ளார் நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம். இந்திய ரசிகர்களுக்கு, பூமா நிறுவனம் வாயிலாக ஒரு கடிதம் எழுதியுள்ளார் மெக்கலம். அதில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய ரசிகர்களின் ஆதரவு நியூசிலாந்துக்குதான் கிடைக்கப்போகிறது என்பது தெரிகிறது. இந்திய ரசிகர்களிடம் நியூசிலாந்து வீரர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். உங்களது ஆதரவை ஒவ்வொரு பந்துக்கும் காட்டுங்கள். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தாகம், எப்படிப்பட்டது என்பதை உணர்ந்தவர்கள் இந்திய ரசிகர்கள். எங்கள் கிரிக்கெட் அணிக்கு, இது மிகப்பெரிய தருணம். இந்த நேரத்தில், உங்களது ஆதரவை நாங்கள் கேட்கிறோம். உங்களது ஆரவாரம் எங்களுக்கு தேவை என்று மெக்கல்லம் கேட்டுக் கொண்டுள்ளார்.
போட்டியை வெல்ல இரண்டில் கவனம் செலுத்துங்கள்: கிளார்க் அறிவுரை
உலகக் கோப்பை இறுதிப் போட்டியை வெல்வதற்கு இரண்டே இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் என்று ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் தனது சகாக்களுக்கு கூறியுள்ளார். இதனை அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். நாளைய போட்டி சிறப்பான போட்டியாக இருக்கும். இதில் சந்தேகம் இல்லை. ஆனால், அது அணி சார்ந்ததாக இருக்க வேண்டும். அதைத்தான் நானும் விரும்புகிறேன். இந்தப் போட்டி குறித்து அணி வீரர்களிடம் பேசினேன். அப்போது உணர்ச்சி வசப்பட வேண்டாம். திறமையுடன் விளையாட வேண்டும். இது இரண்டும் முக்கியமான போட்டி மற்றும் தொடரை வெல்வதற்கு முக்கியக் காரணிகளாக இருக்கும் என்று வலியுறுத்தினேன். ஆகவே, நாளைய போட்டியில் எந்த வித்தியாசமும் இருக்காது. மெல்போர்ன் மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவது ஒவ்வொரு வீரர்களுக்கும் அற்புதமான தருணம். எனக்கு இது கடைசி போட்டி என்பதால் இன்னும் சிறப்பானது என்றார் அவர்.
ஏர் இந்தியா விமானத்தைக் கடத்த முயற்சி: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கைவரிசை?
புது தில்லி: அண்மையில் தில்லியிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடுவானில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா நிறுவன விமானம் ஒன்று அண்மையில், தில்லியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றது. நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் திடீரென தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். இதனால், அந்த பயணிக்கு விமானப் பணிப் பெண்கள் அவசர உதவிகளைச் செய்தனர். அப்போது பயணிகளில் 5 பேர் எழுந்து வந்து, தங்களை மருத்துவர்கள் என்று கூறிக்கொண்டனர். பின்னர் உடல்நலக்குறைவு என்று கூறிய பயணியைச் சோதித்தனர். பின்னர் அந்த 5 பேரும் விமானியை வரச் சொல்லுங்கள் அல்லது தலைமை விமானி அறைக்குள் அனுமதியுங்கள் என்று வற்புறுத்தியுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள் அந்த 5 பேரையும் விமானி அறைக்குள் செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர். அதேபோல் வெகுநேரம் வற்புறுத்தியும் அவர்களை காக்பிட் அறைக்குள் அனுமதிக்கவில்லை, தலைமை விமானியும் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. விமானம் லண்டன் சென்று சேர்ந்ததும் 5 பேரும் அவசர அவசரமாக வெளியேறிச் சென்று விட்டனர். அவர்களது நடவடிக்கைகளால் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள் இதுபற்றி, உடனடியாக விமான நிறுவனத்திடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த 5 பேர் பற்றியும் ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை செய்தது. அப்போது அவர்கள் 5 பேரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாஸ்போர்ட் வைத்திருந்தனர் என்றும் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்தது. அவர்கள் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டபோது அவை போலி என்று தெரிய வந்தது. அதுபோல உடல் நலக்குறைவு என்று கூறிய பயணிக்கு உண்மையிலேயே உடல் நலக்குறைவு ஏற்படவில்லை என்றும், அவர் விமானப் பணிப்பெண்களை ஏமாற்ற நடித்து இருப்பதும் தெரிந்தது. அவரும் போலி தொடர்பு எண் கொடுத்திருந்தார். எனவே அவர்கள் 6 பேரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் ஏர் இந்தியா விமானத்தை நடுவானில் கடத்திச் சென்று நாசவேலையில் ஈடுபட அவர்கள் 6 பேரும் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. யாரும் சந்தேகப்படாதபடி செயல்பட்டு அவர்கள் விமானத்தை கடத்தி நாசகர செயலில் ஈடுபட முயன்று இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய விமான போக்குவரத்துதுறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பயணிகள் யாரையும் விமான காக்பிட் அறைக்குள் அனுமதித்து விடாதீர்கள். விதிகளை முழுமையாக கடைபிடியுங்கள். விழிப்போடு இருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி பிரச்னையில் கர்நாடக அரசை கலைக்க வேண்டும்
காவிரி பிரச்னை விவகாரத்தில் கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் 86 % பேருக்கு ஆதார் அட்டை : ஆட்சியர் கருணாகரன் தகவல்
நெல்லை மாவட்டத்திலுள்ள 33 லட்சம் மக்கள் தொகையில் 86 சதவிகிதத்தினருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது என ஆட்சியர் கருணாகரன் தெரிவித்தார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் கருணாகரன் தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் ஆதார் எண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்து கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கருணாகரன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியம், பணமாற்று ஆணை மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசின் அறிவுரையின் பேரில் தொழிலாளர்களின் ஆதார் எண்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி 31.03.2015-க்குள் முழுமையாக முடிவு பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதார் அடையாள அட்டை பெறும் நபர்களின் புகைப்படம், கைரேகை போன்ற தகவல்கள் இணைத்து ஆதார் எண் வழங்கப்படுவதால் ஆள்மாறாட்டம் செய்வதற்கு சாத்தியமில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், வாக்காளர் பெயர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வீடு,வீடாக நேரடியாகச் சென்று மேற்கொண்டு வருகிறார்கள்;. திருநெல்வேலி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 33 இலட்சம் ஆகும். அதில், 86 சதவிகிதம் நபர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. அரசு பொதுமக்களுக்கு செயல்படுத்தும் நலத்திட்டங்களை எளிதில் பெற ஆதார் எண் மிகவும் அவசியமாகின்றது. பொதுமக்கள் சிரமமின்றி ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் முகாம் செயல்பட்டு வருகின்றது. ஆதார் அடையாள அட்டைகளை பெறாதவர்கள் இம்முகாம்களை பயன்படுத்தி உடனடியாக புகைப்படம் எடுத்துக்; கொள்ள வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை உடனடியாக இணையதளத்தில் பதிவு செய்து அரசு தங்களுக்கு செயல்படுத்தும் நலத்திட்டங்களை சிரமமின்றி பெற்றிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.அண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெல்லையில் ஏப்ரல் 1 முதல் நீச்சல் பயிற்சி
கோடை விடுமுறையை முன்னிட்டு நெல்லையில் சிறப்பு நீச்சல் பயிற்சி ஏப்.1 ம் தேதி முதல் நடக்கிறது.
முழு அடைப்பு: காவிரி பாசனப் பகுதிகளில் ஆதரவு
கர்நாடக மாநில அரசு மேகதாது பகுதியில் புதியஅணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தில், காவிரி பாசனப் பகுதிகளில் ஆதரவு காணப்பட்டது. மற்ற இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும், இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை. மன்னார்குடி அருகே கோட்டூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதம் பந்த் அறிவிக்கப்பட்டிருந்த போதும் தொழில் நகரமான கோவையில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. பொள்ளாச்சியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த போதிலும் பஸ்கள் எப்போதும் போல் இயக்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல்லில் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை. மதுரையில் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை. சென்னையில் கோயம்பேடு சந்தை, பேருந்து நிலையம் வழக்கம்போல் இயங்கின. அதனால் பொது மக்களுக்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை.
அமேதி: மகனுக்கு பதில் தாய் செல்கிறார்
புது தில்லி : அமேதி தொகுதி எம்.பி.,யும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி எங்கிருக்கிறார், எப்போது வருவார் என்று எந்தத் தகவலும் தெரியாத நிலையில், அவரது தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அதன் பின்னர் தனது தொகுதியான ரேபரேலிக்கும் சென்று விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் சோனியா காந்தி. முன்னதாக, தங்கள் தொகுதி எம்.பி.யைக் காணவில்லை என்று அமேதி தொகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
ஜனநாயகப் படுகொலை: செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட பூஷண், யாதவ்
புது தில்லி: எங்களை தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை என்று ஆவேசத்துடன் கூறினர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்த்ர யாதவ் இருவரும். யோகேந்திர யாதவ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசிய நிர்வாகக் குழுவில் நடந்த வாக்கெடுப்பு மோசடியானது. முன் கூட்டியே தீர்மானத்தை ரகசியமாகத் தயாரித்து வைத்து நிறைவேற்றியுள்ளனர். திட்டமிட்டு ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது. ஆம் ஆத்மியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை. எங்களை ஆதரித்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்” என்றார் ஆவேசத்துடன். பிரசாந்த் பூஷண் இதுகுறித்துக் கூறுகையில், நான் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டது சட்ட விரோதமானது. கூட்டத்துக்கு குண்டர்களை அழைத்து வந்து எங்களின் ஆதரவாளர்களைத் தாக்கினார்கள். இந்த கூட்டமே முழுவதும் சட்ட விரோதமான ஒன்றுதான் என்றார். முன்னதாக, ஆம்ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் இருவரும் இன்று காலை நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் அதிரடியாக நீக்கப்பட்டனர். இவர்களுடன் யோகேந்திர யாதவ் ஆதரவாளர்களான ஆனந்த குமார், அஜித் ஷா இருவரும் நீக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த யோகேந்திர யாதவும், பிரசாந்த் பூஷணும் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.

