Home Blog Page 6167

அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்காக மார்ச் 30, 31-இல் இரவு 8 மணி வரை வங்கி நேரம் நீட்டிப்பு

சென்னை: மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கி பரிவர்தனைகளை வரும் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் இரவு 8 மணி வரை பணி நேரத்தை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றிக்கையின் அடிப்படையில் இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்தி: நிகழ் நிதியாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலையடுத்து, மார்ச் 30,31-ஆம் தேதிகளில் இந்தியன் வங்கி மூலம் நடைபெறும் மத்திய, மாநில அரசுகளின் பணப் பரிவர்த்தனைகள் இரவு 8 மணி வரை நடைபெறும். மேலும், மின்னணு பணப் பரிவர்தனைகளும் மார்ச் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடர்ந்து செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை நாள்கள் விடுமுறை தேசியமாக்கப்பட்ட வங்கிகள் மார்ச் 30-ஆம் தேதி (திங்கள்கிழமை), நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31-ஆம் தேதியும் (செவ்வாய்க்கிழமை) வழக்கம்போல் செயல்படும். மேலும், ஏப்ரல் 1- அடுத்த நிதியாண்டின் முதல் நாள், ஏப்ரல் 2- மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3- புனித வெள்ளி ஆகிய 3 நாள்கள் மட்டுமே தொடர் விடுமுறையாகும். அந்த மூன்று நாள்களும் வங்கிச் சேவை இருக்காது. ஏ.டி.எம். மூலம் வங்கிச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்பின்னர் ஏப்ரல் 4-ஆம் தேதி சனிக்கிழமையன்று வங்கிகள் வழக்கம்போல் மதியம் வரை செயல்படும். மாதத் தொடக்கத்தில் வங்கிகளுக்கு 3 நாள்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் மாதச் சம்பளம் பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, ஏ.டி.எம். இயந்திரங்களில் அதிக பணத்தை நிரப்ப வங்கிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏர் கனடா விமானம் ஓடுபாதையில் விபத்து: 25 பேர் காயம்

air-canada நோவா ஸ்காட்டியா: ஏர் கனடா விமானம் ஒன்று கனடா நாட்டில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 25 பேருக்கு காயம் ஏற்பட்டது. கனடாவின் நோவா ஸ்காட்டியாவின் ஹாலிபேக்ஸ் விமான நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. ஏர் கனடாவிற்கு சொந்தமான ‘ஏர்பஸ் ஏ 320 விமானம் ஒன்று, 132 பயணிகளுடன் மோசமான வானிலை காரணமாக நீண்ட நேரம் தரையிறங்க முடியாமல் வானில் பறந்தபடியே இருந்தது. பின்னர், விமானம் தரையிறங்கிய போது விமானியால் ஓடுபாதையை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. இதனால் விமானம் ஓடுபாதையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 25 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் விமானம் மோதியதால் விமான நிலையத்தின் மின்சார இணைப்புகள் பாதிக்கப்பட்டன. இதனால், ஒட்டுமொத்த விமான நிலையமும் இருளில் முழ்கியது.

ஆஸ்திரேலிய அணிக்கு மோடி வாழ்த்து

உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், மீண்டும் ஒரு நல்ல திறமையைக் காட்டி கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பாராட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.  

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ-க்கு மோடி புகழாரம்: உலகத் தலைவர்களுடன் சந்திப்பு

singapore-pm-modi சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முதல் பிரதமர் லீயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிங்கப்பூர் சென்ற மோடி, அவருக்கு புகழாரம் சூட்டினார். கனத்த மன நிலையில் சிங்கப்பூருக்கு வந்திருக்கிறேன் என்று சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட மோடி, நம் காலச் சூழலில் மிக உயரிய தலைவராக லீ திகழ்ந்தார் என்று புகழாரம் சூட்டினார். சிங்கப்பூரின் ஒரு தலைமுறையில் அதன் முன்னேற்றத்தை வடிவமைத்தவர், சிங்கப்பூர் அடைந்துள்ள வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அதன் தன்னம்பிக்கையிலும் திருப்தியுடன் விட்டுச் சென்றுள்ளார் லீ என்று குறிப்பிட்டார். நாம் இப்போது செய்திருப்பதைக் காட்டிலும் இந்தியாவினால் மிக அதிகமாக சாதிக்க முடியும் என்று நம்பினார் அவர். சிங்கப்பூரின் நிறுவுனரும் முதல் பிரதமரும் தந்தையுமான அவரின் இழப்புக்கு சிங்கப்பூர் மக்களுக்கு இந்திய மக்களின் ஆழ்ந்த வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மோடி. இதனிடையே, லீயின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பில் க்ளிண்டனுடன் மோடி பேசினார். அப்போது ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் உடன் இருந்தார். மேலும், கனடாவின் கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்சன், இஸ்ரேலின் அதிபர் ர்யுவென் ரிவ்லின் உள்ளிட்டோருடன் மோடி பேசினார். பின்னர் லீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இரங்கல் குறிப்பில் தன் கைப்பட வாசகங்களை எழுதிவைத்தார்.

 

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

singapore-pm-lee-funeral சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வின் உடல் தேசிய மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. லீயின் இறுதிச் சடங்கில் பாரதப் பிரதமர் மோடி உள்ளிட்ட சுமார் 23 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். லீ குவான் யூ மறைவைத் தொடர்ந்து சிங்கப்பூரில் ஒருவார கால துக்கம் அனுசரிக்கப்பட்டது. அவரது உடல் சிங்கப்பூர் நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்தது. லீ குவான் யூவின் உடலுக்கு கடந்த ஒரு வார காலமாக சுமார் 5 லட்சம் பேர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இன்று மதியம் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. அவரது உடல் சிங்கப்பூர் கொடி போர்த்தப்பட்டு திறந்த வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தை ஊர்வலம் அடைந்ததும் அங்கு 21 குண்டுகள் முழங்க முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. லீ இறுதிச் சடங்கில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதற்காக அவர் இன்று காலை தில்லியில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார். லீயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். லீயின் மறைவிற்கு பிரதமர் மோடி … லீ மாபெரும் சிந்தனையாளர்.இந்தியாவின் சிறந்த நண்பராகத் திகழ்ந்தவர் என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.

ஏப்.10 ல் துவங்குகிறது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில் சித்திரைத் திருவிழா

திருச்சி: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில் சித்திரைத் திருவிழா வரும், 10ஆம் தேதி துவங்கி, 20ஆம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம், ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 10ம் தேதி துவங்குகிறது. அன்று காலை முதல் பகல் 12 மணி வரை கண்ணாடி அறையில் நம்பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடக்கிறது. இரண்டாம் நாளில் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து பல்லக்கில் புறப்பாடு கண்டருள்கிறார். பின்னர் கற்பக விருட்ச வாகனத்தில் சித்திரை வீதிகள் வலம் வருதல் நடக்கிறது. மூன்றாம் நாள் சிம்ம வாகனத்தில் நம்பெருமாள் வலம் வருகிறார். நான்காம் நாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து, தங்க கருட வாகனத்தில் புறப்பாடு கண்டருளி. சித்திரை வீதிகளில் வலம் வருகிறார். அடுத்தடுத்த நாட்களில் சேஷ வாகனம், அனுமந்த வாகனம், தங்க ஹம்ச வாகனம், யானை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வருகிறார். ஒன்பதாம் நாளில், சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது பத்தாம் நாளான, 19ஆம் தேதி சத்தாவரணமும், பதினோராம் நாளில் பல்லக்கில் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேர்தலும் நடக்கிறது. இதையடுத்து, சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது. சித்திரைத் திருவிழா நடக்கும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி முடிய 11 நாட்களிலும் காலை விஸ்வரூப தரிசனம் கிடையாது என கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

வயலூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா: ஏப்.3ல் தொடக்கம்

திருச்சி மாவட்டம், வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா ஏப்ரல் 3- ம்தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 3-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜையும், காலை 8 மணி முதல் பால் காவடி, அபிஷேகமும் நடைபெறும். இரவு 10 மணிக்கு சிங்காரவேலர் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா வருதல் நடைபெறும். ஏப்ரல் 5-ம் தேதி தினைப்புனம் காத்தல் திருவிழாவும், 6-ம் தேதி முருகப்பெருமான் வேலன், வேடன் விருத்தனாக வருதல், யானை விரட்டல் காட்சியும் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 7-ம் தேதி வள்ளி திருக் கல்யாண உற்சவம் நடைபெறும். பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

சென்னை: இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து, மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணாம்பட்டினம் அருகே இந்திய கடல் பகுதியில், இலங்கை மீனவர்கள் கீர்த்திக், பத்மஸ்ரீ, செல்வா, நிகில்குப்தா, வைஷ்ணா ஆகியோர் மீன் பிடித்தனர். அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்து, நேற்று துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு படகும், 220 கிலோ மீனும் பறிமுதல் செய்யப்பட்டன.

புரோட்டா மாஸ்டர் கடப்பாரையால் அடித்துக் கொலை: ஹோட்டல் உரிமையாளர் கைது

திருச்சி அருகே புரோட்டா மாஸ்டரை கடப்பாரையால் அடித்துக்கொன்ற ஹோட்டல் உரிமையாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். ஜீயபுரம் அருகேயுள்ள குழுமணி வெள்ளாளத் தெருவை சேர்ந்தவர் மூக்கன் மகன் அலங்கராஜ் (55). அப்பகுதியிலுள்ள புளியமர பேருந்து நிறுத்தத்தில் ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வாத்தலை அருகேயுள்ள சென்னக்கரை பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் சிவா(எ) சிவகுமார்(27) என்பவர் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். ஹோட்டல் துவங்கிய நாள் முதல் வேலை செய்து வந்த சிவகுமாருக்கு, அங்குள்ள ஒரு நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிக்கொடுத்துள்ளார் அலங்கராஜ். இந்நிலையில் சிவகுமார் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேலையிலிருந்து தான் நின்று கொள்வதாக அலங்கராஜியிடம் தெரிவித்துள்ளார். அப்போது அலங்கராஜ் நான் வாங்கிக்கொடுத்த கடன் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டு செல் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பின்னர் கலைந்து சென்றனர். இந்நிலையில் நள்ளிரவு ஆத்திரம் தீராத அலங்கராஜ் கடையில் தூங்கிக் கொண்டிருந்த சிவகுமாரை கடப்பாரையால் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்து போன சிவகுமாருக்கு ரேணுகா என்ற மனைவியும்,பவித்ரா என்ற 3 வயது பெண் குழந்தையும் உள்ளது. கொலை குறித்து தகவலறிந்த ஜீயபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சிவகுமாரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து அலங்கராஜை கைது செய்தனர்.

ராகுல் ஸ்பெயில் உள்ளார்: சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி

புது தில்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஸ்பெயினில் உள்ளதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி… எல்லோரும் தேடிக் கொண்டிருக்கும் ராகுல், ஸ்பெயினின் பார்சிலோனா நகருக்கு சென்றுள்ளார். சட்ட ரீதியாக சோனியாவுக்கு பிரதமராகும் தகுதியில்லை என்றார். மேலும், தனிப்பட்ட முறையில், தில்லி முதல்வர் வேட்பாளர் கிரண்பேடியை யாரும் எதிர்க்கவில்லை. பாகிஸ்தான் விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை. கோல்கத்தாவில் கன்னியாஸ்திரி பலாத்கார விவகாரத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு தொடர்பு உள்ளது. பாகிஸ்தான் மற்றும் துபாயுடன் காஷ்மீர் முதல்வர் முப்திக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. ஐ.பி.எல்., விவகாரத்தில் சசிதரூரால் தப்பி செல்ல முடியாது. துபாயை சேர்ந்தவர்கள் மூலம் சுனந்தா கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் வழக்கை மூட போலீசார் பணம் பெற்றுக்கொண்டனர் என்று பல தகவல்களைக் கூறியுள்ளார்.