Home Blog Page 6166

தஞ்சை அருகே தனியார் பஸ்ஸுடன் வேன் மோதல்: 4 பேர் பலி

bus-accident தஞ்சாவூர்: தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில், தனியார் பஸ் ஒன்று, வேன் மீது மோதியதில், 4 பேர் பலியாயினர். நாமக்கல்லைச் சேர்ந்த 7 பேர், ஆம்னி வேனில் கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்குச் சென்றனர். காலை, 9:00 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, எதிரே வந்த தனியார் பஸ்ஸும் இந்த ஆம்னி வேனும் மோதியதில் ஆம்னி வேன் நொறுங்கியது. இதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு பேர் பலியாயினர். மூன்று பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தை முற்றுகையிட்ட அந்தப் பகுதி மக்கள், தனியார் பஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், சாலையில் வேகத் தடைகள் அமைக்க வேண்டும் என்று தாங்கள் நெடுநாட்களாகக் கோரி வருவதாகவும் கூறினர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிஸ் இந்தியா ஆனார் தில்லி கர்காவ்னைச் சேர்ந்த அதிதி ஆர்யா

miss-india-aditi-arya மும்பை: கர்காவ்ன் பகுதியைச் சேர்ந்த அதிதி ஆர்யா, ஃபெமினா மிஸ் இந்தியா 2015 பட்டம் வென்றார். 2015-ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி நாடு முழுவதும் 13 நகரங்களில் நடந்தது. இதில் கலந்துகொண்ட அழகிகளில் 21 பேர் இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மும்பையில் உள்ள யஷ்ராஜ் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் மிஸ் இந்தியாவின் 52வது எடிஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு பிரிவுகளைக் கடந்து, இறுதிப் போட்டி நடந்து வந்தது. இதில் 5 பேர் டாப்-5 அழகிகளாகத் தேர்வு செய்யபட்டுள்ளனர். அவர்களில் 3 பேரை நடுவர்கள் தேர்வு செய்தனர். இறுதியில் புது தில்லி கர்காவ்ன் பகுதியைச் சேர்ந்த அதிதி ஆர்யா என்பவர் முதல் இடத்தைப் பிடித்து இந்திய அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆஃப்ரீன் ரசேல் வஸ், வர்திகா சிங் ஆகியோர் 2-வது, 3-வது இடங்களைப் பிடித்தனர். அழகிகளைத் தேர்வு செய்ய நடிகர்கள் ஜான் ஆபிரகாம், அனில்கபூர், நடிகைகள் மனிஷா கொய்ராலா, ஷில்பா ஷெட்டி, சோனாலி பிந்த்ரே, அபு ஜானி, சந்தீப் கோஸ்லா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். முன்னதாக, பிசி ஜூவல்லர்ஸ் தயாரித்த மகுடத்தை முந்தைய வருட அழகி கோயல் ரானா எடுத்து அதிதி ஆர்யாவுக்கு சூட்டினார். இந்த அழகிப் போட்டியில் முதலிடம் பெற்ற அதிதி ஆர்யா உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்.

விமர்சன வித்தகர், சிறியன சிந்தியா தி.க.சி. : முதலாண்டு நினைவு நிகழ்ச்சி!

book-release-tks எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும் ,சிறந்த விமர்சகருமாகத் திகழ்ந்த தி.க.சி.யின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, காவ்யா ஏற்பாட்டில் நடைபெற்றது. திகசி திறனாய்வுக் களஞ்சியம் நூல் வெளியீடும் நடைபெற்றது. தி.க.சி. முதலாண்டு நினைவேந்தல் குறித்து வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டவை… நம்மிடம் வாழ்ந்த முக்கிய இலக்கிய கர்த்தாவாக இருந்த தி.க.சி அவர்கள் மறைந்து ஒராண்டு காலம் நிறைவு பெற்றுவிட்டது. பல எழுத்தாளர்களை தாமரை இதழ் மூலம் ஊக்குவித்தவர் தி.க.சிவசங்கரன். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடும் குணமுடையவர். பல நேரம் இதனால் தி.க.சிக்கும், ஜெயகாந்தன் அவர்களுக்கும் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன. கி.ராவின் கதையே ”தாமரையில்” வெளியிட மறுத்த போது, நா.வானமாமலை, என்.டி.வானமாமலை போன்றோர் முன்னிலையில் பெரிய விவாதமே நடந்தது. நவீன இலக்கிய போக்கில் திறனாய்வு என்ற வாசலைத் திறந்து வைத்தவர் தி.க.சி. நெல்லையில் பிறந்து, கேரளத்தில் தொழிற்சங்கப் பணியாற்றி, சென்னையில் தாமரை இதழில் ஆசிரியராகவும், சோவியத் நாடு இதழில் பணியாற்றியும், தன்னுடைய இறுதிகாலத்தில் நெல்லை டவுணில் உள்ள தன்னுடைய சுடலைமாடன் தெரு வீட்டிலேயே வாழ்ந்து மறைந்தார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அவரோடு ஏற்பட்ட பழக்கத்தாலும், நெருக்கத்தாலும் தான். என்னுடைய “நிமிரவைக்கும் நெல்லை” நூலினை விரும்பி, நேசித்து பல சமயம் பலரிடம் என்னைக்குறித்து அவர் பாராட்டிப் பேசியதெல்லாம் செவிகளுக்கு வந்ததுண்டு. தன் முகநூல் பதிவில், அண்ணன் எஸ்.ஏ. பெருமாள் ( Sap Marx ) குறிப்பிட்டது போல “ஒரு கல்லைக்கூட கார்டு (போஸ்ட் கார்டு) எழுதி எழுத்தாளனாக்கிவிடும் அற்புத மனிதர் தான் திகசி” . தி.க.சி.யின் கால் காசு கடுதாசி பல விசயங்களைப் பேசும். பொதுவுடைமைவாதியாக, தொழிற்சங்கத் தலைவராக, கனிந்த மனம்கொண்டவராக, இளைஞனுக்கும் தோழனாக, ஏகலைவன்களை உருவாக்கும் துரோணராக, தத்துவ மேதையாக, நிறைவாக வாழ்ந்த மாமேதை எங்கள் பாசத்துக்குரிய தி.க.சி. அவர்கள். அவருடைய எழுத்துகளும் , கடிதங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றைச் சொல்லும். நம்முடைய “கதைசொல்லியின்” ஆலோசகர். இப்படி அவருடைய புகழ்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். காலம் எத்தனை வேகமாகச் சுழல்கிறது. தி.க.சி யை என்றும் தமிழ்கூறும் நல்லுலகம் நினைவில் கொள்ளும்.


இந்த நிகழ்ச்சியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரியும் வேங்கட பிரகாஷ் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்… விழா இரவு 8 மணிக்கு முடிந்ததும் திரு.கே.எஸ்.ஆர். என்னையும் (வேங்கட பிரகாஷ்) திரு.கல்கி ப்ரியனையும் காரிலேற்றி அசோகா ஓட்டலுக்குக் கொண்டு சென்றார். நான்கு பேர் அமரக்கூடிய மேசையில் மூன்று பேர் அமர்ந்திருக்கிறோம். ’’காபி சாப்பிடுவோம்’’ என்றார். ஒரு சந்தேகத்தில்தான் கேட்டேன் ’‘என்ன மாமா இங்க?’’ அவர் சொன்னார்….’’இல்ல இங்கதான் தி.க.சி.யக் கூட்டிட்டு வந்து சாப்பிடுவோம். இன்னைக்கு அவர் ஞாவகமாவே இருக்குல்ல…..அதான் !’’ என்றார். தி.க.சி. காப்பியென்று ஒரு காப்பியை இன்று சுவைத்தோம். குடித்ததும் எழுந்துவிடவில்லை. ஏனென்றால் அந்த நான்காம் இருக்கையில் தி.க.சி. இன்னும் காபி குடித்து முடித்திருக்கவிலை…..! தி.க.சி. குறித்துப் பேச ’கதைசொல்லி’கள் திரு.கே.எஸ்.ஆர்., மற்றும் திரு.கழனியூரன் பணித்திருந்தனர். எழும்பூர் இக்சா மையத்தில் நேற்று மாலை நிகழ்ச்சி சிறப்புற நடந்தேறியது. என்னை எழுதவைக்கிறார்கள் பேசவைக்கிறார்கள்…. இன்னும் என்னென்னவோ தெரியவில்லை….. தி.க.சி. என்பது அடையாளம்தானே…. ஒவ்வொருவருக்கும் வாழ்வில் தி.க.சி.க்கள் கிடைப்பார்கள்! எனக்கு இவர்கள். நன்றி… ’நீங்களும் வாசிச்சி நானும் வாசிக்கவா..!’ என்று கலவரத்தோடுதான் ஒவ்வொரு மேடையிலும் திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்டோரைப் பார்க்கிறேன். ஆனால் அவர்களோ சிரித்த முகமென்கிறார்கள்! ஊடகப் பழக்கம்….! இலக்கியவாதிகளோடு உறவு இனிக்கத்தான் செய்கிறது. இந்த இனிப்பெல்லாம் ‘ உங்கள் ஆட்சியில் நீங்கள் மட்டும் என்ன செய்தீர்களாம்? ‘ என்பது போன்ற கசப்புக்கேள்விகளில் கரைத்துவிடத்தானா…?! இந்த நிகழ்வில் வேங்கட பிரகாஷ் பேசியவற்றில் இருந்து…. திறனாய்வுத்தென்றல் தி.க.சி. அவர்களின் முழுமையான விமர்சனக் கட்டுரைத் தொகுப்புநூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருக்கின்ற, கதைசொல்லியைத் துயிலெழுப்பியிருக்கும் கரிசல்குயில், தாமரை இலைத் தண்ணீர் போல் அரசியலில் வீற்றிருக்கும் அன்பர், (தாமரை ஆசிரியர் தி.க.சி.யை விரும்பும் மனிதர் அரசியலில் அப்படித்தானே இருக்க முடியும்!) பெருமதிப்பிற்குரிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களே, நான் எப்போதும் விரும்பிக் கேட்கின்ற பேச்சுக்குச் சொந்தக்காரர், சொற்களை அருவியாய்க் கொட்டும் அன்புநிறைந்த ஐயா திருப்பூர் கிருஷ்ணன் அவர்களே, வரலாறு வாழ்த்துகின்ற பணிகளாகத் தொடர்ந்தாற்றிவரும் பெருமதிப்பிற்குரிய கழனியூரன் அவர்களே, ஐயா செந்தில்நாதன் அவர்களே, ஐயா முகம் மாமணி அவர்களே, ஐயா தருமராசன் அவர்களே, காவ்யா பதிப்பகத்தார் ஐயா சண்முகசுந்தரம் அவர்களே மற்றும் அரங்கில் முன்னமர்ந்திருக்கும் பேரன்புள்ள இலக்கிய ஆர்வலர்களே வணக்கம். என் இலக்கிய வாழ்வு நிறைவாழ்வென்றுதான் நான் கருதுகிறேன் என்பது திகசி தன்னைப் பற்றிச் சொன்னது. இந்த மனநிறைவு ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கவேண்டும். மிகச்சிலரைத் தவிர பெரும்பாலானோர்க்குச் சில புத்தகங்களை எழுதியதுமே வாழ்நாள் முழுவதும் இந்த மனநிறைவென்பது வந்துவிடுகிறது. திகசியின் விமர்சனங்களை முழுமையாகப் படித்தால்தான் சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்கக்கூடியவனாக ஒரு எழுத்தாளன் எப்படி மிளிர வேண்டும் என்பது தெரியும் என்று கருதுகிறேன். அந்த இலக்கணத்தில் நின்று இயங்கி பிறகு மனநிறைவு வந்தால் அதுவே உண்மையான மனநிறைவாக இருக்கமுடியுமென்று கருதுகிறேன். பொதுவில் யாரும் விரும்பாத ஒன்று விமர்சனம். தப்பித்தவறி ஒருவர் ஒரு விமர்சனத்தை விரும்புகிறாரென்றால அதில் அவரைப் பற்றிப் பாராட்டுவார்த்தைகள் இருக்குமென்பது திண்ணம். இடித்துரைக்கும் சொற்களை எந்தக் கண்களும் காணத்துடிக்காது எந்தக்காதுகளும் கேட்கத்துடிக்காது. தொடக்கத்தில் வல்லிக்கண்ணன் பணியாற்றிய கிராம ஊழியன் இதழில் திரைப்பட விமர்சனங்களை எழுதிவந்தவரை பேராசிரியர்.நா.வானமாமலை இலக்கிய விமர்சனப் பாதைக்கு இட்டுச்செல்கிறார். ஆனால் இன்றைக்கு அவர் இருந்தால் திரைப்படங்களுக்கு மட்டும் விமர்சனங்களைத் தொடர்ந்து எழுதுங்கள். நாட்டை அது பாழ்படுத்துவது போல் வேறெதுவும் பாழ்படுத்தவில்லை என்று நாம் மன்றாடிக் கேட்டுக்கொண்டிருப்போம். ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் பாலுணர்வைத் தூண்டக்கூடிய காட்சிகள் நிரம்ப இருந்தது கண்டு கொதித்துப்போய்த் தமிழகத்தின் பெரும் பண்பாட்டை மண்ணாக்கும் மசாலாத்தனமான படம் என்ற வகையில் எழுதிவிட்டார். அந்த இதழுக்கு அதுவரை அளிக்கப்பட்டு வந்த விளம்பரத்தை நிறுத்திவிட்டார் வாசன். ஆனால் அத்தோடு இவர் நிறுத்தினாரா என்றால் இல்லை. விகடன் நிறுவனம் நடத்திவந்த நாரதர் இதழில் நடிகையர் பயன்படுத்தும் வாசனைத்திரவியங்கள் குறித்தெல்லாம் கவர்ச்சியாக எழுதப்படுவதையும் கண்டித்தார் திகசி. விளைவு அந்த இதழ் இவர்களுக்கு அனுப்பப்பட்டதேகூட நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நா.வானமாமலை தி.க.சி.யை மடைமாற்றிவிடுகிறார். சரி அங்கும் என்னதான் ஆயிற்று?! மு.வ.வின் நூல்கள் தமிழகத்தில் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருந்த காலகட்டமல்லவா அது? அவரது 80 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கி ஊன்றிப் பயின்று ஆழ்ந்த விமர்சனக் கட்டுரைகளை ஜனசக்தியில் தொடர்ந்து எழுதினார். பின்னர் அதைத் தொகுத்து அவருக்கே அனுப்பியும் வைத்தார். வந்த பதிலென்ன தெரியுமா? ஓர் அஞ்சலட்டையில் ஒற்றை வரி. ‘உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் நன்றி’ என்று மட்டுந்தான். நான் இப்பெருமகனார்களைக் குறை சொல்லவில்லை. ஆனால் விமர்சனத்தை எதிர்கொள்ளும் பாங்கு இப்படித்தான் இருந்திருக்கிறது. இத்தனைக்கும் மென்மையான மனிதர்தான் திகசி. நெல்லையிலிருந்து மூன்று மைல் ஆற்றிலிறங்கி நடந்துசென்று அக்கரையில் வண்ணார்பேட்டையில் அப்போது குடியிருந்த டி.கே.சியோடு அளவளாவி வருவார்களாம். அவரும் இவரைப் போல் மென்மையானவர்தானே. வயதில் மிக இளையவர்கள் என்றாலும் பேரன்போடு டிகேசி நடத்துவாராம். அடிப்படையில் திகசி மென்மையான மனிதரென்றாலும் விமர்சனம் என்று வந்துவிட்டால் கறார் தன்மை வந்துவிடும். கூடவே இருந்த வல்லிக்கண்ணனையும் விடவில்லை. ஜெயகாந்தனையும் விடவில்லை. நேர்மையாக அளவிட்டுச் சென்றுகொண்டே இருந்தார். விமர்சகர்கள் என்றாலே கசப்போடு பார்க்கும் போக்குதானே இருக்கிறது. காலம் கடக்கக் கடக்கத்தான் உலகம் விமர்சகர்களின் அளப்பரிய பணியைப் புரிந்துகொள்ளும். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி 20000 த்திற்கும் மேற்பட்ட இலக்கியத்தரம் வாய்ந்த கடிதங்களை எழுதியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அப்படியாக இலக்கியத்தரம் வாய்ந்த கடிதங்களை வெறும் அஞ்சலட்டைகளிலேயே எழுதிக்குவித்தவர்கள் திகசியும் வல்லிக்கண்ணனும். தனது விமர்சனக் கட்டுரைகளின் வாயிலாக தி.க.சி.என்றென்றும் தனது பணியை ஆற்றிக்கொண்டே இருக்கிறார். இளைய தலைமுறையினர் தி.க.சி.யைச் சிக்கெனப் பிடித்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன். இந்த முழுமையான தொகுப்பை ’நம்மை விமர்சிக்கவில்லையே…. வேறு யார்யாரையோதானே விமர்சித்திருக்கிறார்’ என்ற எண்ணத்திலேனும் படித்துவிடவேண்டும். படித்துமுடிக்கும்போது இந்த நூல் நம்மைச் செதுக்கி முடித்திருக்கும். ஒரு சிறந்த எழுத்தாளர் பிறந்திருப்பார். இந்நூலின் வாயிலாக தி.க.சி. என்றும் நம்மோடிருப்பார் நம்மைச் செதுக்கிக்கொண்டும்..!

‘ஸ்ரீ பாலாஜி மகிமை’ : குறுந்தகடு வெளியிட்டார் ஆளுநர் ரோசய்யா

sri-balaji-mahimai தமிழக கவர்னர் டாக்டர்.ரோசய்யா வெளியிட்ட ‘ஸ்ரீ பாலாஜி மகிமை’ இசை ‘ஸ்ரீ பாலாஜி மகிமை’ படத்தின் இசை வெளியீடு, கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர் டாக்டர்.ரோசய்யா அவர்களால் முதல் சிடி வெளியிட நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள், இப்படத்தில் பாடல் பாடிய உன்னி கிருஷ்ணன், சரிகம சென்னை மேலாளர் ஆனந்த், சின்னி ஜெயந்த், ரங்கநாயகலு மற்றும் இப்படத்தில் பணியாற்றவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். எம்.ஜி.எஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.வி. கோபால் ராம் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ஸ்பெஷல் எஃபெக்ட், பின்னணி இசைச் சேர்ப்பு உள்ளிட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. மே மாதம் படம் திரைக்கு வரும் விதத்தில் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் சாய் கிரண் ‘ஸ்ரீ பாலாஜி’ கடவுளாகவும், படத்தின் இயக்குனர் கோபால் ராம் பக்தராக முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். மற்றும் டெல்லி கணேஷ், வையாபுரி, விச்சு, விஜய்பாலாஜி, தமிழ்மணி, ஸ்ரீவித்யா, டப்பிங் ஜானகி, சங்கீதா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கடவுள் கொடுக்கும் வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அதனைத் தவறான வழியில் பயன்படுத்தும் மனிதன் தவறு செய்யும் போது கடவுள் நேரில் வந்து செய்யும் அற்புதங்களையும் சமுதாயத்திற்குத் தேவையான நல்ல விஷயங்களை அறிவுறுத்துவதையும் சுவைபடச் சொல்லும் படமாக ‘ஸ்ரீ பாலாஜி மகிமை’ இருக்கும் என்கிறார் இயக்குனர் கோபால் ராம். இதன் படப்பிடிப்பு சென்னை, ஊத்துக்கோட்டை, திருப்பதியில் நடைபெற்றது.இரண்டு இசையமைப்பாளர்கள் பார்த்தசாரதி மற்றும் ராஜ்பாஸ்கர் இணைந்து இசைமழை பொழிந்திருக்கிறார்கள். பாடல்களை பன்னீர் செல்வம் எழுதியிருக்கிறார்.இப்பாடல்களை உன்னி கிருஷ்ணன், சாகேத் , பானு, சமீரா ஆகியோர்  பாடியுள்ளனர். தொழிற்நுட்ப  கலைஞர்கள் கதை – திரைக்கதை – இயக்கம்  – எம்..வி. கோபால் ராம், ஒளிப்பதிவு – ராம் யோகா இசை –  பார்த்தசாரதி , ராஜ்பாஸ்கர், பாடல்கள் – பன்னீர் செல்வம் மக்கள் தொடர்பு: S.செல்வரகு தயாரிப்பு : எம்.ஜி.எஸ் பிலிம்ஸ்

தோல்விக்குக் காரணமான அழுக்குகள் கட்சியை விட்டு விலக வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு கட்சியை அவதூறாகப் பேசுபவர்கள் காங்கிரஸில் இருந்து விலக வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார். அகில இந்திய கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் 20-ஆவது மாநில மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்… கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பாராத அளவுக்கு தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்விக்குக் காரணம் கட்சியில் இருந்த சிலரே. அவர்களே, காங்கிரஸ் தோற்கும் என்பது எங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்று செல்கிறார்கள். அந்த சில அழுக்குகள் கட்சியில் இருந்ததால்தான் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. அவர்கள் கட்சியை விட்டு வெளியே சென்றாலேயே காங்கிரஸ் வெல்லும். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு மாதம் ஒரு முறை தமிழகத்திற்கு வந்து கட்சியைப் பற்றி அவதூறாகப் பேசி வருகிறார்கள். இது போன்று அவதூறாகப் பேசுபவர்களுக்குத்தான், ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. ஆனால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைப்பர்கள் பலர் இருக்கிறார்கள். கட்சியில் இருந்து கொண்டு கட்சியைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்கள், கட்சியில் இருந்து விலகி எங்குச் செல்ல வேண்டுமோ அங்கே போய் சேர்ந்து கொள்ளட்டும். மதம், மொழி என பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் ஒரே அன்னையின் குழந்தைகளாய் இருந்து வரும் நிலையில், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த நினைக்கிறது மோடி தலையிலான பாஜக அரசு. பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசின் மக்கள் விரோத மனப்பான்மை இரண்டு, மூன்று ஆண்டுகளில் மக்களுக்கு தெரிய வரும் என நினைத்திருந்த நிலையில் 10 மாதங்களிலேயே தெரியத் தொடங்கிவிட்டது… என்று பேசினார்.

இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால் சாம்பியன்

இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். தில்லியில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த ரட்சனோக் இண்டோனனை 21-16, 21-14 ஆகிய நேர் செட்களில் தோற்கடித்து அவர் சாம்பியன் பட்டத்தை வென்றார். உலக அளவிலான பேட்மின்டன் தரவரிசையில் சாய்னா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கது.

விபத்துக்குள்ளான ஜெர்மன் விமானி பார்வைக் கோளாறால் அவதிப்பட்டாரா?

பாரீஸ்: அண்மையில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அந்தத் துணை விமானி வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கவில்லை என்றும், அவருக்கு பார்வைக் கோளாறு இருந்துள்ளதால், இது ஒரு விபத்தாகவே இருக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் துணை விமானி பார்வைக் கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வீட்டில் சோதனை நடத்தியபோது அவருக்கு இருந்த பிரச்னை இருந்துள்ளது தெரிய வந்தது. லுபிட்ஸுக்கு கண் நோய் இருந்த விஷயத்தை அவர் ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார். அந்த நோய்க்காக அவர் டுசல்டார்ப் நகரில் உள்ள யுனிக்லினிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால், இந்த விமான விபத்து குறித்து குழப்பமான நிலையே நீடிக்கிறது.

ஏமனில் இருந்து இந்தியர்களை அழைத்துவர விமானம்: மத்திய அரசு

புது தில்லி: ஏமனில் கிளர்ச்சியாளர்கள் மீதான வான்வழித் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அங்குள்ள இந்தியர்களை அழைத்துவர விமானம் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏமனில் 3500-4000 இந்தியர்கள் இருப்பதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருத்தீன் தெரிவித்துள்ளார். இதற்காக தான் ஏமன் செல்லவிருப்பதை நேற்று டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட அவர், அவர்களை அழைத்து வர விமானத்தை அனுப்புவதையும், இந்தியக் குழு அவர்களை பாதுகாப்பாக அழைத்துவர உடன் இருப்பதையும் தெரிவித்துள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம்- மோடியின் வானொலி உரை பொய்: ஜெய்ராம் ரமேஷ்

jairam-rameshசென்னை: நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு தாங்கள் அளித்த ஆதரவை அதிமுக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இது குறித்து மோடி ஆற்றிய வானொலி உரை பொய் என்று கூறியுள்ளார். நிலம் கையகப் படுத்தும் மசோதாவை எதிர்த்து, நாடு முழுவதும் விவசாயிகளிடம் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பிரசாரம் செய்து வருகிறார். இந்தக் காரணத்துக்காக, ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த ஜெய்ராம் ரமேஷ் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப் படுத்தும் சட்டத் திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி முழுமையாக எதிர்க்கிறது. மக்களவையில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி விட்டனர். மாநிலங்களவையில் நிறைவேற்ற உள்ளனர். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றன. பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் எதிர்க்கிறது. எனவே, மாநிலங்களவையில் இந்தச் சட்டம் நிறைவேறாது. விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் நிலத்தைக் கையகப்படுத்துவது, கையகப் படுத்தப் படும் நிலம் 5 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தால், மீண்டும் விவசாயிகளிடம் தர மறுப்பது, நிலம் கையகப்படுத்துவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு சுற்றுப்புற தாக்கங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்ற பிரிவை நீக்கியது உள்ளிட்ட காரணங்களால் இந்தச் சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது. 2013ல் காங்கிரஸ் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எல்லாக் கட்சிகளும் ஆதரித்தன. ஆனால் இப்போது ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை அதன் பாதிப்புகளை உணர்ந்து எல்லாக் கட்சிகளும் எதிர்க்கின்றன. அதிமுக இந்தச் சட்டத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சட்டத்துக்குக் கொடுத்த ஆதரவைத் திரும்பப் பெற வேண்டும். மாநிலங்களவையில் இதனை அதிமுக எதிர்க்க வேண்டும். மோடி இந்தச் சட்டத் திருத்தத்தில் உள்ள உண்மை நிலையை முற்றிலுமாக மறைக்கிறார். அவர் வானொலியில் இது குறித்துக் கூறிய கருத்துகள் அனைத்தும் பொய்யானவை என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

புதிய மாளிகையில் குடியேறினார் ராஜ்நாத்சிங்

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடந்த 19 ஆண்டுகளாக தில்லி அசோகா ரோட்டில் உள்ள பங்களாவில் வசித்து வந்தார். மத்திய அமைச்சரான பிறகு அவருக்கு அரசு சார்பில் தில்லி அக்பர் ரோட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி வசித்து வந்த பங்களா ஒதுக்கப்பட்டது. நடிகர் சிரஞ்சீவி கடந்த ஜனவரி மாதம் பங்களாவை காலி செய்ததை அடுத்து ராஜ்நாத்சிங் கடந்த வெள்ளிக்கிழமை அங்கு குடியேறினார். நாடாளுமன்ற அவைத்தலைவர் சுமித்ரா மகாஜனின் வீட்டின் அருகே இந்த பங்களா அமைந்துள்ளது. மேலும், மூத்த ராணுவ அதிகாரிகள், நீதிபதிகளின் பங்களாக்களும் அருகில் உள்ளன.  ராஜ்நாத் சிங் புதிதாகக் குடியேறியுள்ள பங்களாவில் பெரிய அளவில் புல்வெளிகள், தனி அலுவலகம், பார்வையாளர் கூடம், பாதுகாப்பு அறை ஆகியவை உள்ளன.