ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் ஸ்ரீநகர் வெள்ளத்தில் மிதக்கிறது. பலத்த மழை காரணமாக பட்காம் மாவட்டத்தில் சதுரா பகுதியில் 2 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சிரார்–இ–சரீப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில், 18 வீடுகள் சேதம் அடைந்தன. பட்காம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 10 வீடுகள் உள்பட 44 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்தச் சம்பவங்களில் 16 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப் படுகிறது. மேலும் பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
காஷ்மீரில் வெள்ள அபாயம்: கடந்தாண்டு நிலை ஏற்படக் கூடாதென உமர் உருக்கம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கன மழை விடாது பெய்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்கு கன மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜீலம் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவைக் கடந்து வெள்ள நீர் ஓடுவதால், கடந்த ஆண்டு ஏற்பட்ட சேதம் போல் மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்று பிரார்த்திப்பதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஜீலம் நதியில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அரசு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று சுமார் 221 குடும்பங்கள் வெள்ள இடங்களில் இருந்து மீட்கப் பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அரசால் அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு ஜம்மு- காஷ்மீர் பேரழிவைச் சந்தித்தது. அந்த பாதிப்பில் இருந்து மீண்டு, மக்கள் இன்னும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் தற்போது மழை மிரட்டி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மத்திய காஷ்மீரில் உள்ள பட்கம் மாவட்டம் சான்டினார் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 8 வீடுகள், 10 மாட்டு கொட்டகைகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. மேலும் 26 வீடுகள் சேதம் அடைந்தன. ஆனால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ஸ்ரீநகரில் ராஜ்பாக் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அந்த சாலை மூடப்பட்டது. தெற்கு காஷ்மீரின் சங்காம் பகுதியிலும் ஆற்றில் நீர் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை இன்று காலை 6 மணி நிலவரப்படி சங்காம் பகுதியில் ஜீலம் ஆற்றில் தண்ணீர் அளவு 22.4 அடி உயரத்துக்குச் சென்றது. ஸ்ரீநகரில் உள்ள ராம் முன்ஷி பாக் பகுதியில் ஜீலம் ஆற்றில் தண்ணீர் அளவு 18′.8 அடி உயரத்துக்குச் சென்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். வெள்ளம் தொடர்பாக பீதி அடைய தேவையில்லை என்று ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு மாநிலத்துக்கு விரைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளம் குறித்து கருத்து தெரிவித்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சந்தித்த பேரழிவுப்போல் இந்த தடவை காஷ்மீர் மக்கள் சந்திக்கக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன். மேலும், அவ்வாறு ஏற்படாது என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு
பப்புவா நியூகினியா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து சுனாமி போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. உயிர்ச் சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இது குறித்து பப்புவ நியூ கினியா தேசிய பேரிடர் மைய இயக்குனர் மார்டின்மோஸ் இது குறித்துக் கூறியபோது, அரை மீட்டர் அளவுக்கு சுமார் ஒன்றரை அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் ரபௌல் கடற்கரை துறைமுகத்தில் எழுந்தன. ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், 40 மைல் ஆழத்தில் கொகோபோ நகருக்கு 30 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது… என்றார். சேத மதிப்பு குறித்த தகவல் உடனே வெளியாகவில்லை இருப்பினும் நிலநடுக்கம் ஏற்பட்ட பப்புவா நியூக்கினியாவியைச் சுற்றி 1000 கிலோ மீட்டருக்குள் சுனாமி ஏற்படலாம் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கைச் செய்தி வெளியிட்டது.
போலீஸ் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு: பீகாரில் 1000 பேர் கைது
பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் வேலைக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கான தேர்வு கடந்த 16 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இரு வாரங்களாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 52 ஆயிரம் பேரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1,068 தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் கடந்த வருடம் தேறியதால், அவர்களை உடல் தகுதித் தேர்வுக்கு அழைத்திருந்தனர். பாடலிபுத்ரம் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் நடைபெற்ற இந்தத் தேர்வில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு வேறு நபர்களை அனுப்பியிருந்தது கண்டறியப்பட்டது. இதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அதிகபட்சமாக கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் சுமார் 200 பேர் ஆள் மாறாட்டத்தி்ல் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீஸாரிடம் கூறிய அவர்கள், “போலீஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்காக தங்களுக்கு பணம் அளித்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபடக் கூறினர்” என்று கூறியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த போலீஸ் அதிகாரி ஒருவர், விசாரணையை தீவிரப்படுத்தும் போது வரும் நாட்களில் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று கூறியுள்ளார். பீகாரில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்களுக்கு அவர்களி்ன் பெற்றோர்கள், உறவினர்கள் காப்பி அடிக்க உதவிய பிரச்னை இன்னும் முடியாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று 4 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை
சென்னை: போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. ஏற்கெனவே குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி மையத்தில் 3 கட்டப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில், போக்குவரத்து கழகங்களில் உள்ள 42 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட 14 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்று வருகின்றது. தமிழக நிதித்துறை கூடுதல் செயலாளர் உமாநாத், போக்குவரத்து கழக செயலாளர் பிரபாகர்ராவ் மற்றும் போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக்குனர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர். 3 கட்ட பேச்சுவார்த்தையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தொழிற் சங்க பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.
கடலோர போலீஸாருக்கான பயிற்சி மையம்: நாட்டில் முதலவதாக ராமேஸ்வரத்தில் அமைகிறது
சென்னை: கடலோர போலீசாருக்கான பயிற்சி மையம் ராமேசுவரத்தில் 237 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இது இந்தியாவிலேயே முதலாவதாக அமையவுள்ள பயிற்சி மையம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரம் ஒலைக்குடா தரவை பகுதியில் கடலோர போலீசாருக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் அளிக்க கடலோர போலீஸ் பயிற்சி மையம் கட்டப்பட உள்ளது. இதற்காக சுமார் 237 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணிகளை மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மாநில அரசு மேற்கொண்டுள்ளது. தமிழக கடலோர போலீசாரின் பாதுகாப்பு வசதிக்காக ஒலைக்குடா கடற்கரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் தொலைத்தொடர்பு மையம் கட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டு அதற்கான இடம் ஒதுக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில் அங்கு கடந்த 1 மாதமாக 24 மணி நேரமும் கடலோர போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி பாதுகாப்புக்காக உச்சிப்புளியில் 2 ரோந்து ஹெலிகாப்டர்களுடன் இந்திய கடற்படைக்கு சொந்தமான விமான தளம், மண்டபத்தில் 10-க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களை கொண்ட கடலோர காவல்படை நிலையம், இதுதவிர ராமேசுவரத்தில் 3 ரோந்து படகுகள் கொண்ட கடற்படை நிலையம் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் கடலோர பகுதி மற்றும் கடற்கரை பகுதி பாதுகாப்புக்காக தேவிபட்டினம், மண்டபம் என இரண்டு இடங்களில் கடலோர காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ரோந்து படகுகளிலும் கடலோர போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
சமையல் எரிவாயு மானிய திட்டத்தில் சேர்வதற்கான கெடு: நாளையுடன் முடிவடைகிறது!
சென்னை: மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் நேரடி மானியத் திட்டத்தை தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி அமல்படுத்தியது. இந்த நேரடி மானிய திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை கருணைக் காலமாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. அதன்படி, நாளையுடன் இந்த கருணைக் காலம் முடிவடைகிறது. கருணைக் காலத்துக்குள் மானிய திட்டத்தில் இணையாதவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை சந்தை விலையில்தான் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என்றும், அவர்கள் மானிய திட்டத்தில் இணைந்த பிறகு மானிய தொகை தகுதியின் அடிப்படையில் அனுமதிக்கப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கருணை காலத்தில் சமையல் கேஸ் நேரடி மானியத்தில் இணைந்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட சிலிண்டர் எண்ணிக்கை அடிப்படையில் வங்கி கணக்கில் மானிய தொகை மொத்தமாக சேர்க்கப்பட்டு விடும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
“ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்”
“ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்” சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன். வேதவித்தகரும் அனுஷ்டாதாவும் நித்யாக்னிஹோத்ரியுமான ஒரு வைதிகர் தரிசனத்துக்கு வந்தார். பெரியவா, அவரைப் பற்றி விசாரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்; அவருடைய வைதிக அநுஷ்டானங்களைக் கொண்டாடினார்கள். அக்னிஹோத்ரி சொன்னார்; “யாகம் பண்ணப் போறேன்..எல்லாம் ஸித்தமா இருக்கு….பலபேர் ஆதரவு கொடுக்கிறா… “யாகப் பசுக்கள் (ஆடுகள்) வாங்கணும்… நிறைய செலவாகும் போலிருக்கு…. பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்… யாகப் பசுக்கள் வாங்க,ஸ்ரீ மடத்திலேர்ந்து த்ரவ்ய ஸஹாயம் செய்யணும்….” யாகம் செய்யப் போவதைக் கேட்டு,தன் ஆசிகளைத் தெரிவித்துக் கொண்டார்கள், பெரியவா. “நல்ல கார்யம். நன்னா நடக்கும்.யாகத்திலே பசு ஹிம்ஸை, அஹிம்ஸை தான்.தர்ம சம்மதம் தான். நான் ஒரு சந்யாஸி, என் தர்மம்-அஹிம்ஸா பரமோ தர்ம;என்பது.அதனால்,சந்யாஸியாகிய நான், யாகப்பசு வாங்கிக் கொடுப்பது தர்மமில்லை-என்று தோன்றுகிறது. ஆகவே யாராவது கிருஹஸ்தர்களிடம் போய். திரவ்ய ஸஹாயம் பெற்று யாகத்திப் பூர்த்தி செய்யுங்கள்.” வந்தவர், ரொம்ப பிடிவாதக்காரர். எப்படியாவது பெரியவாளிடமிருந்து பணம் பெறுவதில் குறியாக இருந்தார். “யக்ஞேஸ்வரன் வைகுண்டத்தில் இல்லை. இதோ சாக்ஷாத்தாக இங்கே இருக்கார்! பெரியவாதான் யக்ஞேஸ்வரன்..” என்றெல்லாம் ஸ்தோத்திரம் செய்தார். “சாஸ்திரிகளே! உங்களால் முடிந்தால் யாகம் செய்யுங்கள். ஆடு வ்ங்குவதற்காக,ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு பைசா கூடக் கொடுக்கமாட்டேன்…யக்ஞம் நடத்தணும் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் ஸஹாயம் செய்திருக்கலாம். நீங்கள் எந்தக் காரியத்தைச் சொல்லிக் கேட்கிறீர்களோ, அதற்கு உதவி செய்வது சந்யாஸ தர்மம் இல்லை” என்று கண்டிப்பாகச் சொன்னார்கள்> வந்தவருக்கு, ஏமாற்றம் தான் என்றாலும், தவறு தன்மேல் என்பதால், ஓரளவு சமாதானத்துடன் சென்றார்-என்று சிஷ்யர்களுக்கு தோன்றிற்று
திருவாரூர் விபத்து: விசாரணைக் கமிஷன் அமைக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் நடந்த கட்டட விபத்து தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட அறிக்கையில், திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள நாகக்குடி என்ற கிராமத்தில் மத்திய பல்கலைக்கழகம் கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகே ஊழியர்களுக்கு 4 அடுக்கு மாடி குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் தரமானதாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில் இன்று (29.3.2015) புதிதாக கட்டப்பட்டு வரும் ஊழியர் குடியிருப்பு கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்துள்ளனர், 16 பேர் இடிபாடுகளுடன் சிக்கி படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்துகிறது. கட்டுமானப் பணிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்கு உரிய வழிமுறைகளையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த போரூர் கட்டிட விபத்தில் 61 பேர் உயிரிழந்த போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்தியது. கட்டிடம் கட்டப்பட்ட இடம், மண்ணின் தன்மை உள்ளிட்டு கட்டிட கட்டுமானத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்பட்டிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த விபத்திற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு காரணமான கட்டிட ஒப்பந்ததாரரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டுமெனவும்; காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சையும், உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இந்த விபத்து குறித்து விசாரிக்கவும், இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுப்பதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் பதவியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது. – என்று கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகரில் வெள்ள அபாய எச்சரிக்கை
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கன மழை கொட்டி வருகிறது. பட்கம் மாவட்டத்தில் அபாய அளவில் வெள்ள நீர் இருப்பதால், அங்கிருந்த 221 குடும்பங்களை மாநில அரசு அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது. இந்நிலையில், ஜீலம் நதியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்து, அபாய அளவைத் தாண்டியிருப்பதால், ஸ்ரீநகரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்ற வருட வெள்ள பாதிப்பில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் இன்னும் முழுதுமாக மீளாத நிலையில், தற்போது மீண்டும் மழைக்காலம் துவங்கியிருப்பதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

