சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாட்ஷா பதவியேற்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நடிகை குஷ்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நமது செய்தித் தொடர்பாளர் குஷ்பு நன்கு ரசிக்கத் தெரிந்தவர். அவரும் நன்றாக விசில் அடிக்கத் தெரிந்தவர்தான் என்று குறிப்பிட்டார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இவ்வாறு நகைச்சுவையாக அவரைப் பற்றிக் குறிப்பிட்டதும், கூட்டத்தில் விசில் சத்தம் பறந்தது. அதைப் பார்த்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் குஷ்பு. அவரின் சிரிப்பை அங்குள்ளோர் அதிகம் ரசித்தனர்.
ஈ.வி.கே.எஸ் நகைச்சுவை: குலுங்கிச் சிரித்த குஷ்பு
“என்னை ஒன்றும் செய்யாதே!”
“என்னை ஒன்றும் செய்யாதே” சிரியாவில் கேமராவை பார்த்து துப்பாக்கி என்று பயந்து இரு கைகளையும் தூக்கி விம்மிய சிறுமி. உலகையே உலுக்கிய புகைப்படம் இது. இணையத்தில் வைரல் போன்று பரவி வருகிறது இந்தப் படம். இந்தப் படத்தில் உள்ள அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகத்தில் பயம். அழுகை வெடிக்கும் நிலை. கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை….. இந்தக் காட்சியை வெளியிட்ட புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான். சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டுப் பழகிய இந்தக் குழந்தை, படம் பிடிக்க கேமராவை சரி செய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது இணைய தளத்தில் பலரையும் பரிதாபப்பட வைத்துள்ளது..
photojournalist took this photo 4 Syrian child, thought he has a weapon not a camera so she Gave up ! #Surrended pic.twitter.com/bm1hOWQWJY — Nadia AbuShaban (@NadiaAbuShaban) March 24, 2015
வேலூர் சாலை விபத்து குறித்து சட்டப் பேரவையில் முதல்வர் விளக்கம்
சென்னை தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றப் பேரவையில், வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஆற்றிய உரையின்போது விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கம்: கடந்த 22.3.2015 அன்று வேலூர் மாவட்டம், கார்ணம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த உதயசூரியன் என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர் ராஜ்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் காட்பாடி-சென்னை சாலையில் தங்கள் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, இரவு சுமார் 9.30 மணியளவில் எதிர்பாராத விதமாக, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வந்த கார் ஒன்றின்மீது மோதியதில், தானும், வாகனத்தை ஓட்டிய ராஜ்குமாரும் கீழே விழுந்ததில், காயங்கள் ஏற்பட்டதாகவும், ராஜ்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும், தான் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் காட்பாடி காவல் துறையினரிடம் அளித்த புகாரின் பேரில், காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், சம்பவத்தன்று ராஜ்குமாருக்கு துணி எடுக்க இருவரும் அன்று மாலையில் அதே வாகனத்தில் காட்பாடி புறப்பட்டுச் சென்று இரவு சுமார் 9.30 மணியளவில் தங்கள் கிராமத்தை நோக்கி இருவரும் இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர். அப்போது வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், தனது அரசு வாகனத்தில் வாகன ஓட்டுநர் மோகன் வாகனத்தை ஓட்ட, தனது உதவியாளர்கள் இருவருடன் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, கார்ணம்பட்டு கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த ராஜ்குமாரின் இருசக்கர வாகனம் மாவட்ட ஆட்சியரின் கார் மீது மோதியுள்ளது. இதில், ராஜ்குமார் காயமடைந்து சம்பவ இடத்தில் இறந்துள்ளார். பின்னால் அமர்ந்திருந்த உதயசூரியனுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக மாவட்ட ஆட்சியர், விபத்து குறித்து மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதற்கிடையில் தகவலறிந்து காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். காயமடைந்த உதயசூரியனை உடனடியாக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்ததுடன், இறந்த ராஜ்குமாரின் பிரேதத்தை மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கிருந்து வேலூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இறந்த ராஜ்குமாரும், காயமடைந்த உதயசூரியனும் விபத்து நடந்தபோது குடிபோதையில் இருந்துள்ளனர் எனத் தெரிய வருகிறது. இவ்வழக்கில், 23.3.2015 அன்று ராஜ்குமாரின் பிரேதத்தின் மீது வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் பிரேதத்தை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர். ராஜ்குமாரின் தாயார் வளர்மதி, கார்ணம்பட்டு கிராம பஞ்சாயத்து தலைவியாக இருந்து வருகிறார். இந்நிலையில், துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கார்ணம்பட்டு சென்ற திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் மற்றும் திமுகவினர், மாவட்ட ஆட்சியரின் வாகன ஓட்டுநரைக் கைது செய்யக் கோரி திடீரென கார்ணம்பட்டு இரயில்வே மேம்பாலத்தின் மீது சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடம் சென்றவுடன், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று, பின்னர் காட்பாடி – வேலூர் சாலையில் சித்தூர் பேருயது நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் புலன் விசாரணை அடிப்படையில் ஒட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். திமுகவினர் இரண்டு இடங்களில் சாலை மறியல் செய்து, போக்குவரத்திற்குத் தடை ஏற்படுத்தியதற்காக திருவலம் மற்றும் காட்பாடி காவல் நிலையங்களில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகள் புலன் விசாரணையில் இருந்து வருகின்றன. சாலை விபத்து குறித்த வழக்கில் புலன் விசாரணை அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- என்று கூறியுள்ளார்.
கவலைப் படாதீர்கள்; கட்சி ஆரோக்கியமாக உள்ளது: கேஜ்ரிவால்
புது தில்லி: யாரும் கவலைப்பட வேண்டாம், ஆம் ஆத்மி கட்சி ஆரோக்கியமாகத்தான் உள்ளது. நாங்கள் அதனை கவனமுடன் பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார் அரவிந்த் கேஜ்ரிவார். ஆம் ஆத்மி கட்சியினருக்கு இடையில் சச்சரவுகள் தோன்றி ஒவ்வொருவராக வெளியேறிவரும் நிலையில், கட்சியினரை சமாதானப் படுத்தும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழக அரசு இணையத்தில் ஜெயலலிதா பெயர் இடம் பெற்றிருக்கக் காரணம் யார்?: கருணாநிதி
தமிழக அரசின் செய்தி–மக்கள் தொடர்புத் துறையின் இணையதளத்தில் முதலமைச்சர் பொறுப்பில் ஜெயலலிதா பெயர் இடம் பெற்றிருப்பதற்கு யார் காரணம் என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறிய பிறகு, தங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது, ஜெயலலிதாவுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், நீதிமன்றம் எந்த நிபந்தனை விதித்தாலும் ஏற்கத் தயார் என்றும், ஜாமீனில் விடுவித்தால் போதும் என்றும் உச்சநீதிமன்றத்தில் உறுதி கொடுத்ததோடு, ஜாமீன் கிடைத்த பிறகு, நாரிமன் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முயன்று பார்க்க நேரம் கிடைக்காத நிலையில், ஜெயலலிதா என்னென்ன நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். தமிழக அரசின் செய்தி–மக்கள் தொடர்புத்துறையின் இணையதளத்தில் இன்றைய தினத்தில் தமிழக அமைச்சரவையில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் தமிழக முதலமைச்சர் யார் என்பதற்கு ஜெயலலிதா, தமிழ்நாடு முதலமைச்சர் என்றும்; ஓ.பன்னீர்செல்வம், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் என்றும் தான் இன்றளவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
திருவாரூர் கட்டட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர்
திருவாரூரில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, சட்டப் பேரவையில் எதிர்க் கட்சிகளின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நடந்த விபத்து தொடர்பாக சன்னாநல்லூர் வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், நன்னிலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவன மேலாளர் மற்றும் களப் பொறியாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். மேலும், இந்த விபத்தில் பலியான இருவர் ஒடிசா மாநிலத்தையும், ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலத்தையும் சேர்ந்தவர்கள், இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 16 பேருக்கும், தலா ரூ. 50 ஆயிரம் நிவாராணத் தொகை வழங்கப்படும். என தெரிவித்தார்.
லிங்கா’ நஷ்ட ஈடு விவகாரம்: விநியோகஸ்தர்கள் அதிருப்தி
சென்னை: ‘லிங்கா’ நஷ்ட ஈடு விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர் – மன்னன், வட-தென்ஆற்காடு விநியோகஸ்தர் – கிருஷ்ணகுமார், நெல்லை விநியோகஸ்தர் – ரூபன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ‘லிங்கா’ படத்தினை வெளியிட்ட வகையில் செங்கல்பட்டு ஏரியாவிற்கு ஏழரை கோடி ரூபாயும், ஆற்காடு ஏரியாவிற்கு நான்கு கோடி ரூபாயும், நெல்லை ஏரியாவிற்கு இரண்டரை கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அறிவுறுத்தலுக்கு பிறகு படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பனிரெண்டரை கோடி ரூபாயை நஷ்ட ஈடாக தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். நஷ்டம் என்று கூறி நிவாரணம் பெற்றுத்தர சங்கங்களை அணுகிய போது யாருமே ஆதரவு தராததால் தான் அறவழியில் போராட்டங்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் தற்போது ரஜினிகாந்த் பணம் தருகிறார் என்றவுடன் பங்கு போட்டுத் தருவதாகக் கூறி சங்கங்கள் மூக்கை நுழைப்பதன் மர்மம் எங்களுக்கு புரியவில்லை. இந்த படத்தை வெளியிட்ட வகையில் நஷ்டம் அடைந்திருப்பது வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் மட்டுமே. அவரர்களை கலந்து பேசாமல் திருப்பூர் சுப்பிரமணி என்பவர் தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வருவது வருத்தப்பட வைக்கிறது. பணத்தை கொடுத்து படத்தை வாங்கிய எங்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பங்கு போட்டுத் தருமாறு இவரை அழைத்தது யார் என்பதை இவர் முதலில் அறிவிக்க வேண்டும். கட்டப் பஞ்சாயத்து செய்வதை திருப்பூரோடு நிறுத்திக்கொண்டால் இந்தப் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படும் என்பதை படத்தயாரிப்பாளர் புரிந்துகொள்ள வேண்டும். “தலைவலியும் நோவும் தனக்கு வந்தால் தான் தெரியும்” என்பார்கள். இந்த திருப்பூர் சுப்பிரமணி, ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்களை திரையிட்டு கோடி கோடியாய் சம்பாதித்தவர். ஆனால் ‘பாபா’ படத்தில் இழப்பு என்றவுடன் அசலுடன் லாபமும் கேட்டுப்பெற்றவர். ஆனால் லிங்கா விசயத்தில் வினியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஏற்கவேண்டும் என்று இவர் கூறுவது “சாத்தான் வேதம் ஓதுவதை போல் உள்ளது”. நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் கணக்கு வழக்குகளை கேட்டுப் பெற சொல்லியிருப்பதாகக் கூறி கணக்கு வழக்குகளை பெற்றுக் கொண்ட பின்பு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாரிப்பாளர் இவரை ஏன் அழைக்கவில்லை என்பதையும் இவர் விளக்க வேண்டும். தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் அல்ல என்பதை சுப்பிரமணியன் தெரிந்து கொள்ள வேண்டும். வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பாளராக தன்னை நினைத்து செயலாற்றி வினியோகஸ்தர்களுக்கு அநீதி இழைப்பதை திருப்பூர் சுப்பிரமணி நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட ரீதியாக கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம். படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், லிங்கா வினியோகஸ்தர்களை வைத்துக்கொண்டு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் பணத்தை ஏரியா வாரியாக பிரித்துக் கொடுத்தால்தான் இந்த பிரச்சனை முடியும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இடையில் சினிமாவில் கிடைத்த செல்வாக்கை வைத்துக்கொண்டு திருப்பூர் சுப்பிரமணி போன்றவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்தால் போராட்டங்கள் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். பல கோடியையும் இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் வினியோகஸ்தர்களை காக்கும்படி தயாரிப்பாளரை கேட்டுக்கொள்கிறொம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருவாரூர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: கருணாநிதி வலியுறுத்தல்
திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை விருந்தினர் மாளிகை கட்டட கட்டுமானப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார், அதில், இந்தச் சம்பவத்தின் உயிரிழந்த 5 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பிலும், அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய மாநில அரசுகள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் வீதமும், காயமடைந்தவர்களுக்கு அவர்களின் பாதிப்புக்கு உகந்தவாறும் உடனடியாக நிவாரணமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வேலை வாங்கி தருவதாக மோசடி: ரயில்வே ஊழியர் கைது
சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த ரயில்வே ஊழியரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்… திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மு.தர்மராஜி. இவரது மகன் தாமரைச்செல்வன். இவருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரின் மகன் ஸ்ரீராமன் கூறியுள்ளார். அதற்காக ரூ. 3.5 லட்சத்தை ஸ்ரீராமனிடம் தர்மராஜி கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கித் தரவில்லையாம். மேலும் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து ஸ்ரீராமன் தன்னை மோசடி செய்து விட்டதாக தர்மராஜி போலீஸில் புகார் அளித்தார். இந்த நிலையில், ஸ்ரீராமனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். விசாரணையில் ஸ்ரீராமன் ரயில்வே துறையில் கிரேடு 1 தொழில்நுட்ப ஊழியராக 25 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. மேலும் விசாரணையில் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர் பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படை மீண்டும் தாக்குதல்
தலைமன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை சனிக்கிழமி அன்று, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். ராமேசுவரம் மீனவர்கள் சனிக்கிழமை 662 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு, தலைமன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 7 சிறிய கப்பல்களில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 100-க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். மீனவர்கள் வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர். பின்னர் மீனவர்களை எச்சரித்து விரட்டியடித்தனர். பகல் முழுதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் அந்தப் பகுதியில் இருந்து சென்றதும் கடலில் வெட்டி வீசப்பட்ட வலைகளை சேகரித்து ஞாயிறு காலை மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

