Home Blog Page 6163

கொம்பன் பிரச்னைக்காக புதிய தமிழகம் அவையில் இருந்து வெளிநடப்பு

சென்னை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கொம்பன் பட பிரச்னை தொடர்பாக சட்டமன்றத்தில் பேச அனுமதி கேட்டார். அவைத்தலைவர் அனுமதி வழங்காததால் வெளிநடப்பு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கொம்பன் படக் காட்சிகள் தென் மாவட்டங்களில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தணிக்கை குழுவில் மனு கொடுக்கச் சென்றனர். அதை அவர்கள் ஏற்கவில்லை. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவதற்காக சபையில் பேச அனுமதி கேட்டேன். அதற்கு அனுமதி தரவில்லை. எனவே வெளிநடப்பு செய்தேன்… என்றார்.

சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க., கம்யூனிஸ்டு., பா.ம.க வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து இன்று திமுகல், கம்யூ., பாமக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சட்டப்பேரவையில் இன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கட்டடம் இடிந்த விபத்து தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதன்பின்னர் மு.க.ஸ்டாலின் எழுந்து, இன்னும் 2 நாள்தான் அவை நடவடிக்கைகள் உள்ளன. எனவே தி.மு.க. கொடுத்துள்ள கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். அது பரிசீலனையில் உள்ளது என்று அவைத்தலைவர் தெரிவித்தார். அப்போது துரை முருகன் எழுந்து வேலூர் அருகே மாவட்ட ஆட்சியர் கார் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான பிரச்னை குறித்துப் பேசத் தொடங்கினார். அவைத்தலைவர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், தற்போது அவையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. நாங்கள் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு, குடிநீர் பிரச்னை, ரேஷன் கடையில் பருப்பு தட்டுப்பாடு, விவசாய அதிகாரி தற்கொலை, வேலூரில் கலெக்டர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்து போன்ற பல்வேறு கவன ஈர்ப்பு தீர்மானங்களைக் கொடுத்திருக்கிறோம். அது பற்றி பேச அனுமதி கேட்டால் அது ஆய்வில் இருக்கிறது என்று அவர் கூறுகிறார். இன்னும் 2 நாள்தான் அவை இருக்கிறது. எனவே, இது பற்றி பேச அனுமதி தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம் என்றார். நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரும் பிரசனை தொடர்பாக் மார்க்சிஸ்ட்டும் வெளிநடப்பு செய்தது. பாமகவின் கணேஷ் குமார் எம்.எல்.ஏ.வும் இதே பிரச்னைக்காக வெளிநடப்பு செய்தார்.

சீருடைக் குழப்பம்: சச்சின் மெழுகுசிலை சிட்னி அருங்காட்சியகத்தில் இருந்து அகற்றம்

sachin-wax-statue-sydney சிட்னி: இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மெழுகுச் சிலை சிட்னி அருங்காட்சியகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. சீருடைக் குழப்பமே அதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. பிரபலஸ்தர்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியத்தில் பல துறைகளைச் சேர்ந்த இந்திய பிரபலங்ளின் சிலைகளும் உள்ளன. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சிலையும் இங்கு வைக்கப்பட்டது. சிட்னி நகருக்கு சுற்றுலா செல்லும் பலரும் சச்சினின் முழு உருவ மெழுகுச் சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்தனர். இந்நிலையில், சச்சினின் 40 ஆவது வயதுக்கு சில தினங்களுக்கு முன்னர் அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், அந்தச் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த சீருடைதான். அந்த சிலைக்கு உலகக் கோப்பை T20 போட்டியின்போது வீரர்கள் அணிந்திருந்த சீருடை அணிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சச்சின் T 20 போட்டியில் விளையாடியாடவில்லையாம். இந்த விவரம் அமைப்பாளர்களுக்குத் தெரிய வந்ததை அடுத்து, அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பாங்காக் நகருக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேடம் டுஸாட்ஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர.

வந்தார்; கையெழுத்து போட்டார்; பேரவைக்குள் புகாமல் வெளியே சென்றார்: அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!

சென்னை: சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று திடீரென சட்டப் பேரவை வளாகத்துக்குள் வந்தார். முற்பகல் 11.25க்கு தலைமைச் செயலகத்தில் அவர் 10-ஆம் எண் கேட் வழியாக சட்டசபை லாபியில் இருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். பிறகு சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் வெளியில் வந்து காரில் ஏறி விருட்டென்று சென்று விட்டார். இதனிடையே 4-ஆம் எண் கேட் அருகே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் பக்கம்கூட எட்டிப் பார்க்காமல் கட்சித் தலைவர் விஜயகாந்த் சென்றுவிட்டதால், அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர். கட்சி எம்.எல்.ஏ.க்களைக் கூடப் பார்க்காமல் விஜயகாந்த் சென்று விட்டாரே என்று ஆதங்கப்பட்டனர். இந்நிலையில் சுமார் 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் தலைமைச் செயலகத்துக்கு வந்தார் விஜயகாந்த். என்ன தோன்றியதோ… தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அருகில் காரில் வந்து இறங்கினார். அவர்களிடம், ஏன் இன்னும் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்…. எழுந்து வாருங்கள். நாம் போகலாம்’ என்று கட்டளையிட்டார். அதைத் தொடர்ந்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு எழுந்து சென்றனர். பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசினார் விஜயகாந்த்… அப்போது, அவைத்தலைவர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து தே.மு.தி.க.வுக்காக வாக்களித்த மக்களை அசிங்கப்படுத்துகிறார். அ.தி.மு.க. அரசு, தேர்ந்து எடுக்கப்பட்ட எங்கள் எம்.எல்.ஏ.க்களை திட்டமிட்டு அசிங்கப்படுத்துகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியெல்லாம் நடைபெறுவதில்லை. தமிழ்நாட்டில் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக சட்டசபையிலேயே முதலமைச்சர் சொல்கிறார். இது கண்டிக்கத் தக்கது…. என்று காட்டமாகக் கூறிச் சென்றார். இதையடுத்து தே.மு.தி.க. எம்.ல்.ஏ.க்கள் தங்களது தர்ணா போராட்டத்தை விலக்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

உலகின் மிகப் பெரும் கட்சியானது பாஜக : உறுப்பினர் எண்ணிக்கை 8.80 கோடியை தாண்டியது

புது தில்லி: பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை 8.80 கோடியை தாண்டியது. இதை அடுத்து பாஜக., உலகிலேயே மிகப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜக.,வை உலகிலேயே மிகப் பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று அதன் தேசியத் தலைவர் அமித்ஷா திட்டமிட்டார். இதைத் தொடர்ந்து நாடெங்கும் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. உறுப்பினர் சேர்க்கையை எளிமைப்படுத்த செல்போன்களில் மிஸ்டு கால் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானோர் பா.ஜ.க. உறுப்பினர்களாக சேர்ந்தனர். மேலும், இணைய தளம் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. மோடியின் செல்வாக்கால் லட்சக்கணக்கானோர் பா.ஜ.க.வில் உறுப்பினர்களாக இணைந்தனர். இதன் காரணமாக பா.ஜ.க.வில் தற்போது 8 கோடியே 80 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் மூலம் அக்கட்சி உலகிலேயே மிகப்பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதுவரை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக சீனாவின் கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. அக்கட்சியில் 8 கோடியே 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதை பின்னுக்குத் தள்ளி பா.ஜ.க. முதல் இடத்துக்கு வந்துள்ளது. உ.பி.யில் அதிகபட்சமாக ஒரு கோடியே 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். குஜராத், மத்திய பிரதேசம் மாநிலங்களில் தலா 80 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழ்நாட்டில் அது  எதிர்பார்த்த அளவுக்கு உறுப்பினர்களை சேர்க்க இயலவில்லை.

உங்க படம் வெளியானா சாதிக் கலவரம் வராம தடுக்க முடியுமா?: நீதிபதி கேள்வி

komban மதுரை: உங்க கொம்பன் படம் வெளியானால் சாதிக் கலவரம் வராமல் தடுக்க முடியுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்‘ பட கதைக்கும் தலைப்புக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிடுவதாக இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார். வரும் 2ம் தேதி இந்தப் படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால், படத்தை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக இதை எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதையடுத்து இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணசாமி தரப்பு, “இந்தப் படம் வெளியானால் தென்மாவட்டங்களில் நிச்சயம் சாதிக் கலவரம் ஏற்படும்,” என்று தெரிவித்தார். அரசு தரப்பு வழக்கறிஞரோ, “அப்படி எதுவும் நிகழாது” என்றார். உடனே நீதிபதி தமிழ்வாணன், “சாதிக் கலவரம் வராது என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா?” என்று அரசு வழக்கறிஞரிடமும், காவல் துறையினரிடமும் கேட்டார். இந்தக் கேள்விக்கு உடனே பதிலளிக்க வேண்டும். பிற்பகல் நீங்கள் பதில் அளித்த பிறகு தீர்ப்பு கூறப்படும் என்றார். இந்நிலையில், இன்று பிற்பகலுக்குப் பின்னர் படம் வெளியாக தடை விதிக்கப்படுமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

கும்பகோணம் டூ ஷீர்டி: சாய் பக்த இளைஞரின் பாதயாத்திரை

kumbakonam-to-shirdi1 ஷீர்டி சாப் பாபா பக்தரான இளைஞர் மணிகண்டன், கும்பகோணம் பகுதியிலிருந்து பாதயாத்திரையாக ஷீர்டிக்கு நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார். சுமார் 700 கி.மீ. தொலைவு வரை தற்போது நடந்தே கடந்துள்ள இவர், பெங்களூருவைக் கடந்து தும்கூர் சென்று கொண்டிருக்கிறார். இவர் குறித்த தகவல் அறிந்து சாய் அன்பர்கள் அவருடன் கைபேசியில் (9842641939) பேசி பாராட்டி உற்சாகப் படுத்தியுள்ளனர்.

அத்வானி, அமிதாப் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண்: வழங்கினார் பிரணாப்

புது தில்லி: எல்.கே. அத்வானி, அமிதாப் பச்சன் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார் மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் எல்.கே. அத்வானி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று விருதுகள் வழங்கப்பட்டது. அத்வானி, அமிதாப் பச்சன், பிரகாஷ் சிங் பாதல், பேராசிரியர் மல்லூர் ராமசாமி ஸ்ரீனிவாசன் உள்பட 9 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பத்ம விபூஷண் விருது வழங்கினார். முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, சுதா ரகுநாதன், பில்கேட்ஸ் உள்ளிட்ட 20 பேருக்கு பத்மபூஷண் விருதையும், அசோக் பாகவத், சஞ்சய் லீலா பன்சாலி, ராகுல் ஜெயின், தமிழகத்தைச் சேர்ந்த ராஜாராமன் உள்ளிட்ட 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதையும் வழங்கினார். சுதந்திர போராட்ட வீரரும் காசி பல்கலைக் கழக நிறுவுனருமான பண்டிட் மதன்மோகன் மாளவியா சார்பில் அவரது குடும்பத்தினரிடம் பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழிசையா? தனிப்பட்ட வகையில் அவரைத் தெரியாது: குஷ்பு

சென்னை: தாம்பரத்தை தாண்டி தாமரையை யாருக்கும் தெரியாது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பேற்ற பின்னர் குஷ்பு ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதற்கு குஷ்புவுக்கு தமிழிசை விளக்கம் அளித்தார். தற்போது, ஒரு தனியார் தொலைக்காட்சியில் அவரிடம் இது குறித்துக் கேட்டபோது, தமிழிசை சௌந்தர்ராஜன் என்பவர் பாஜக தமிழகத் தலைவர் என்று தெரியும். ஆனால் அவரை தனிப்பட்ட வகையில் அவரைத் தெரியாது. ஆனால், அவர் என்னைப் பறி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார் என்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஈ.வி.கே.எஸ் நகைச்சுவை: குலுங்கிச் சிரித்த குஷ்பு

சென்னை:kushpoo சென்னை சத்தியமூர்த்தி பவனில் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாட்ஷா பதவியேற்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நடிகை குஷ்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நமது செய்தித் தொடர்பாளர் குஷ்பு நன்கு ரசிக்கத் தெரிந்தவர். அவரும் நன்றாக விசில் அடிக்கத் தெரிந்தவர்தான் என்று குறிப்பிட்டார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இவ்வாறு நகைச்சுவையாக அவரைப் பற்றிக் குறிப்பிட்டதும், கூட்டத்தில் விசில் சத்தம் பறந்தது. அதைப் பார்த்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் குஷ்பு. அவரின் சிரிப்பை அங்குள்ளோர் அதிகம் ரசித்தனர்.