Home Blog Page 6188

தமிழக பட்ஜெட் தாக்கல்: வழக்கம் போல் அம்மா புகழ்; திமுக வெளிநடப்பு!

assembly-budget-2015-16 சென்னை: முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்லவம் 2015 – 2016ம் ஆண்டுக்கான நிதிநிலையறிக்கை உரையை தொடங்கினார். எதிர்க்கட்சிகள் அமளி: திமுக உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். மேலும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தேமுதிக உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்லாம் அம்மா மயம்! தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் உரையாற்றியபோது, முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை ஒவ்வொரு திட்டங்களின் போதும் பாராட்டிப் பேசினார். அம்மா அவர்களின் அரசு என்ற வார்த்தை அதில் கட்டாயம் இடம்பெற்றது. அவ்வாறு அவர் பாராட்டிப் பேசிய போது எட்டாம் அதிசயம்… ஒன்பதாம் வள்ளல் எங்கள் அம்மா என்றார். கடந்து வந்த பாதை: 2015 -16 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். இது நடப்பு அதிமுக அரசில் நிதியமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ள 5வது பட்ஜெட்டாகும். அதேசமயம், 2வது முறையாக முதல்வராகியுள்ள அவர் தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட். ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு, கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. 2011 – 12ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் 2011ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012- 13, 2013- 14 ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் அந்தந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன. 2014- 15ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 4 பட்ஜெட்டுகளையும் நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அவர் நிதியமைச்சர் மற்றும் முதல்வர் பொறுப்பில் இருந்து தாக்கல் செய்தார். முதல்வர் ஒருவர் தமிழகத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது 2000மாவது ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். 2000- 2001ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அப்போதைய முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்தார். 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார்.

இன்று சீனா செல்கிறார் மைத்ரீபால சிறீசேன

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா 4 நாள் அரசு முறைப் பயணமாக இன்று சீனா செல்கிறார். அவருடன் அமைசர்கள் மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட 20 பிரதிநிதிகளும் சீனா செல்கின்றனர். அதிபர் பதவியேற்ற பின்னர், மைத்ரீபால சிறீசேன சீனா செல்வது இதுவே முதல் முறை.

7 முறை முட்டி மோதிய நியூசிலாந்து அரையிறுதிகளில் கடந்து வந்த பாதை

south africa- new zealand கடந்த உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை முட்டி மோதி, கடைசியில் நியூசிலாந்து அணி தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இத்தனை முறை இல்லாமல், இந்த முறை தென்னாப்பிரிக்கா செய்த சிறு சிறு தவறுகள், அந்த அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த ஆறு அரையிறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து அடைந்த தோல்விப் பட்டியல்…. 1975ல் ஓவலில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து 158 ரன் எடுத்தது. அது மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அப்போது கிரீனிட்ஜ், காளிசரன் இருவரும் இணைந்து 125 ரன் சேர்த்தனர். 1979ல் ஒல்ட் ட்ராபோர்ட்டில், நியூசிலாந்து இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. நியூசிலாந்து 212/9 எடுத்தது. இங்கிலாந்து 221/8. 9 ரன் வித்தியாசத்தில் தோல்வி. 1992ல் ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தானிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து 262/7. பாகிஸ்தான் 264/6. 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி. 1999ல் ஓல்ட் ட்ராபோர்டில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தானிடம் வெற்றியை இழந்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 1 விக்கெட்டே இழந்து, 242 ரன் குவித்தது. அன்வர் 113 ரன்னும் வஜஹ்துல்லா 84 ரன்னும் குவித்தனர். 2007ல் கிங்ஸ்டனில் நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து 208 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. 2011ல் கொழும்புவில் நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து 217 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை 220/5 எடுத்து வெற்றி பெற்றது. இப்போது, 2015ல் முதல் முறையாக அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது நியூசிலாந்து அணி. இதில், முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 281 ரன் குவித்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து 299 ரன் எடுத்து வெற்றி வாகை சூடியது. இந்த முறை நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவை வெற்றிகொள்ள, தென்னாப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்து அணிக்காக விளையாடிய எலியட் அடித்த சிக்ஸர் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பலாத்காரத்தால் கருவுற்ற 10ஆம் வகுப்பு மாணவியின் கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி

சென்னை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கருவுற்ற 10ஆம் வகுப்பு மாணவியின் கருவைக் கலைக்க அரசு மருத்துவர்களுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் 16 வயதான 10ஆம் வகுப்பு மாணவி, அவரது வீட்டுக்கு வந்து சென்ற ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால், அந்தச் சிறுமிக்கு கரு உண்டானது. தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாத நிலையில் அந்தச் சிறுமி வீட்டில் உள்ளார். அந்த மாணவியின் வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்கவேண்டும் என்று அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்தும், அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று சென்னையைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர், கருவைக் கலைப்பது குறித்து ஆய்வு செய்த அரசு மருத்துவர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் ஆர்.விஜயகுமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறை கடந்த 11 ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. கருக் கலைப்பு சட்டப்படி, பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஒப்புதல் வழங்கினால் அந்தக் கருவை கலைக்கலாம். இது குறித்து அரசு மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி, கருவைக் கலைக்க ஒப்புதல் அளித்து விட்டனர். அதற்குள், மனுதாரர் நீதிமன்றத்தை நாடிவிட்டார்” என்றார். இதையடுத்து, “சிறுமியின் கருவைக் கலைக்க பெற்றோரும், அந்தச் சிறுமியும் சம்மதம் தெரிவித்துள்ளதால், அந்தக் கருவை மருத்துவர்கள் உடனடியாகக் கலைக்க வேண்டும்” என்று கூறினார் நீதிபதி. இதற்கு முன்னர், கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பகையைத் தீர்க்க 13 வயதுச் சிறுமியை சசிகுமார் என்ற இளைஞர் பலாத்காரம் செய்தார். இதையடுத்து, அதன்மூலம் ஏற்பட்ட கருவைக் கலைக்க வேண்டும் என்று கோரி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிலும் சிறுமியின் வயிற்றில் உள்ள கருவைக் கலைக்க கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

நிலம் கையகப்படுத்தல் தொடர்பில் ஜெயலலிதா விடுத்த அறிக்கை தவறு: கருணாநிதி

  செkarunanidhiன்னை: நிலம் கையகப் படுத்தல் தொடர்பில், தனியாருக்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்தவில்லை என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை முற்றிலும் தவறானது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி–பதில் வடிவிலான அறிக்கை: கேள்வி:– மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விடுத்த அறிக்கையில், உடன்குடி மின் திட்டத்தில், “குறையுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை ஏற்றுக்கொள்வதற்கு சட்டத்தில் வழியில்லை. மேலும் குறையுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை ஏற்றுக்கொண்டால், பணி கிடைக்காதவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையாணைப் பெற்று இந்த திட்டமே முடங்கிவிட ஏதுவாகும்” என்றெல்லாம் கூறியிருந்தாரே?. பதில்:– நீதிமன்றத்திற்கு பிரச்சினை சென்று விடக்கூடும் என்பதால்தான் அந்த திட்டத்தின் டெண்டரையே ரத்து செய்ததாக மின்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். தற்போது டெண்டர் கிடைக்காதவர், இந்த அரசை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்கிறாரே, அதற்கு அமைச்சர் என்ன கூறுவார்?. அதனால்தான் நான் என்னுடைய பதிலில் “குறையுள்ள டெண்டர் என்றால், உடனடியாக ரத்து செய்திருக்க வேண்டியதுதானே, 2 ஆண்டு காலம் அதை வைத்திருந்து விட்டு தற்போது ரத்து செய்தது எதற்காக?” என்று கேட்டிருந்தேன். அமைச்சர் தரப்பில் தவறு இல்லை என்றால், நான் என்னுடைய முதல் அறிக்கையில் கேட்டவாறு விசாரணை கமிஷனை அமைத்திருந்தால், உண்மை ஊருக்கு தெரிந்திருக்கும். வழக்கும் வந்திருக்காது அல்லவா?. தற்போது சீன நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில், இந்த திட்டப்பணிகளுக்காக 5 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். ஒப்பந்தப்புள்ளியில் தாங்கள்தான் குறைவான தொகையை குறிப்பிட்டிருந்ததாகவும், அனைத்து தகுதிகளும் இருந்ததாகவும், ஆனால் ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ததற்கான காரணம் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். தற்போது டெண்டரை ரத்து செய்தது ஏன் என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேள்வி:– முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதாவை அதிமுக அரசு ஆதரித்ததை நியாயப்படுத்தி விடுத்த அறிக்கையில், தனியாருக்காக தமிழகத்தில் எந்த பகுதி விவசாய நிலத்தையும் கையகப்படுத்தவில்லை என்று தெரிவித்திருக்கிறாரே?. பதில்:– ஜெயலலிதாவின் அறிக்கையைப் பார்த்து விட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் டி.செங்குட்டுவன், தமிழக அரசின், தொழில் துறை சார்பில் 27–5–2014 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண். 51 ன் நகல் ஒன்றினை எனக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில், இந்த சிப்காட் வளாகத்திற்குள் தொடங்கப்படும் தொழில்களில் பெரும்பாலானவை தனியாரால் தொடங்கப்படும் தொழில்கள்தான். எனவே தனியாருக்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்தவில்லை என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை முற்றிலும் தவறானது என்பதற்கு இந்த அரசாணையும் தக்க சான்றாகும்.

கடலில் விழுந்து விபத்து: கடற்படை விமானிகள் 2 பேர் மாயம்

பனாஜி, தெற்கு கோவா கடல் பகுதியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று புதன்கிழமை இன்று காலை விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த 2 விமானிகள் மாயமாகியுள்ளனர். கோவாவின் கர்வார் பகுதியில் 10 மைல் தொலைவில் தாழப் பறந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 3 பேர் இருந்தனர். அதில் இருந்த கமாண்டர் ஜோஷி, அங்கிருந்த மீனவர்களால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு பேரைக் காணவில்லை. மாயமான கடற்படை அதிகாரிகளின் நிலை குறித்து தகவல் இல்லை. அவகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 6-க்கும் மேற்பட்ட கப்பல் மற்றும் விமானப்படை விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இன்று மீண்டும் கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரி சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. புதுச்சேரி சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 13ம் தேதி புதுவை துணை நிலை ஆளுநர் உரையுடன் துவங்கியது. பின்னர் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து அவை இன்று மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் புதுச்சேரியின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட் எந்த தினத்தில் தாக்கல் செய்யப்படும் என்பது குறித்த முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.

பங்குனி உத்திர திருவிழா: சபரிமலையில் கொடியேற்றத்துடன் தொடக்கம்

Sabarimala-Sannidhanam செங்கோட்டை: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோவிலில் புண்யாகவாசனம்- தூய்மைப் பணி நிறைவேற்றப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. புதன்கிழமை இன்று காலை 5.30 மணி அளவில் மீண்டும் கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெற்றன. காலை 9.40க்கு கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. இந்தத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

நியூசிலாந்துடனான மோதலில் தென்னாப்பிரிக்கா செய்த முக்கிய 3 தவறுகள்!

ஆக்லாந்து: தென்னாப்பிரிக்க அணி பெரும்பாலான உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டும், கடைசிக் கட்டத்தில் ஏதாவது தவறு செய்து இறுதிப் போட்டிக்கு வராமல் போய் விடுகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துடனான அரையிறுதிப் போட்டியிலும் இவ்வாறே ஆனது. ஆனால், 43 ஓவர்களில் 298 ரன் என்ற இலக்கை நியூசிலாந்து அணி விரட்டிய விதம், தென்னாப்பிரிக்கா தனது பீல்டிங்கில் கோட்டை விட்டதையே காட்டுகிறது. உலகின் மிகச் சிறந்த பீல்டிங் அணி என்று பெயரெடுத்த தென்னாப்பிரிக்க அணியினர் கடைசிக் கட்டத்தில் தங்களது பலமான பீல்டிங்கில் எப்படி கோட்டை விட்டனர்? ஆச்சரியம்தான்! southafrica-newzealand32 வது ஓவரில் ஆண்டர்சனுக்கு வாய்ப்பளித்தனர். அப்போது கோரி ஆண்டர்சன் 33 ரன் எடுத்திருந்தார். எலியட் பாயிண்ட் திசையில் பந்தை அடித்திருந்தார். அப்போது அவர் தனது இணையை மீண்டும் ரன்னர் திசைக்கு திருப்பி அனுப்பினார். உலகின் மிகச் சிறந்த பீல்டர் என்று பெயரெடுத்த தென்னாப்பிரிக்க கேப்டன் டி விலியர்ஸ் பந்தை எடுத்து எறிந்த விதமும், அப்போது விக்கெட் கீப்பர் அதைப் பிடிக்காமல் பெயிலை தாகர்த்து விட்டு, ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்ட விதமும், ஆண்டர்ஸனை 58 ரன் அடிக்க உதவியது. எலியட்டும் ஆண்டர்சனும் சேர்ந்து 103 ரன் குவித்தனர். 41 வது ஓவரில் எலியட்டுக்கு வாய்ப்பளித்தனர். தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குண்டான் டி கோக், எலியட் ரன் எடுக்க ஓடி வந்தபோது, ரிலே ரொசோவ் வீசிய பந்தை கையில் சேகரிக்கத் தவறினார். அப்போது மிகவும் ரிஸ்க் எடுத்து இரண்டாவது ரன் ஓடினார் எலியட். அந்த வாய்ப்பை வீணடித்ததன் மூலம், எலியட் 66 ரன்னில் ஆட்டம் இழந்திருந்தால் நியூசிலாந்து 272க்கு 6 விக்கெட்டில் இருந்திருக்கும். 42 வது ஓவரில் எலியட் கேட்ச் வாய்ப்பு நழுவியது. தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலியட், 75 பந்தில் 84 ரன் எடுத்து அசத்தினார். முன்னதாக மார்னெ மோர்கல் வீசிய பந்தை பேட்டில் எட்ஜ் கொடுத்து கேட்ச் ஆகும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது, மாற்று வீரராக களத்தில் இருந்த பர்ஹன் பெஹர்டியன், டுமினி இருவரும் முட்டி மோதி, நல்ல கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டனர். அந்தக் கேட்ச் பிடிக்கப் பட்டிருந்தால், நியூசிலாந்து 284 ரன்னில் நின்றிருக்கும். 14 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றிருக்கும். south africa- new zealand

பெரியவா தேடிச் சென்ற பாட்டி !!!

10357599_860696523975514_1831596007967451521_n பெரியவா தேடிச் சென்ற பாட்டி !!! (மறு பதிவு) ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து “சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார் “எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………” “ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து. “வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு! பிடிப்பு இருக்கட்டும்…..ன்னு குடுத்தாராம்! சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு. “சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………” “ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா” என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்! “இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு. “இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….” “அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா? பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார். பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது……. “என்னது இது?” “காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….” “கலெக்டருக்கு குடுத்தாச்சா?” “குடுத்துட்டோம். பெரியவா” “இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார். “குடுத்தாச்சு. பெரியவா……” “ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?” ருத்ர முகம்! “இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர். “………கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” குண்டுகளாக துளைத்தன! பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர். ஆம். தவறுதானே? “எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார். “நீ எங்கே குடியிருக்கே?” “வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….” “அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…” “அங்க சுப்புராமன் இருக்கார்……” பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி! “சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?” “இல்லை……….” “மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு” “ஆமா பெரியவா நல்ல நாள்தான்” “அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ” பெரியவா சங்கல்பம் நிறைவேறியது! இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார். பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..” உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள். இரைந்து…….”சர்வேஸ்வர……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும். தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுகு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.