சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் என்றார். தமிழகத்தில் உள்ள 113 அணைகளைப் புனரமைக்க 450.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், விவசாயிகளுக்கு வட்டி மானியம் வழங்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நெல் உற்பத்தி ஊக்கத் தொகைக்கு 200 கோடி ரூபாய் நிதியும் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு 249.09 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
கருப்புப் பெட்டி மீட்பு: விபத்துக்குள்ளான விமானத்தில் 16 பள்ளிச் சிறுவர்கள்
தெற்கு பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் சிதிலமடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த விமானத்தில் ஜெர்மன் பள்ளி ஒன்றைச் சேர்ந்த 16 மாணவர்கள் இருந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. பார்ஸிலோனா நகரிலிருந்து 150 பேருடன் செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட விமானம் ஃபிரான்ஸில் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இதனை பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கேஸிநேவ் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தப் பெட்டி, விமானம் பறக்கும்போது அது பறப்பது குறித்த தொழில்நுட்பத் தகவல்களை பதிவு செய்யும் கருவியா அல்லது கடைசி நேரத்தில் விமானிகளின் காக்பிட்டில் நடக்கும் உரையாடல் ஒலிகளைப் பதிவு செய்யும் கருவியா என்பது தெளிவாகவில்லை. இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானம் தூள் தூளாகச் சிதறியுள்ளதாகவும், விமானத்தின் சிதறிய பாகங்கள் சுமார் 2 கி.மீ. தொலைவுகு சிதறியிருப்பதையும் கண்டறிந்துள்ளனர். விமானத்தின் எந்தவொரு பகுதியும் இதுவரை முழுமையாகக் கிடைக்கவில்லை. விமானத்தில் பயணித்த 150 பேரும் உயிரிழந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலை ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்தார். இந்தக் கோர விபத்து தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக அவர் கூறினார். விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட, புதன்கிழமை இன்று அவர் அங்கு செல்லத் திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக, ஜெர்மனியைச் சேர்ந்த “ஜெர்மன்விங்ஸ்’ நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-320 ரக விமானம், ஸ்பெயினின் பார்ஸிலோனா நகரிலிருந்து, ஜெர்மனியின் டுஸல்டாஃர்ப் நகரை நோக்கி செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது. அந்த விமானத்தில் 144 பயணிகளும், விமானிகள் உள்பட 6 ஊழியர்களும் இருந்தனர். பயணிகளில் 67 பேர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள். ஸ்பெயின், துருக்கியைச் சேர்ந்தவர்களும் அந்த விமானத்தில் இருந்தனர். இந்நிலையில், உள்ளூர் நேரப்படி 10.47 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 3.17 மணி) அந்த விமானத்திலிருந்து அவசர உதவி கேட்டு அழைப்பு வந்தது. இதையடுத்து, அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. தென்கிழக்கு பிரான்ஸின் பார்ஸிலோனெட் மலைப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் நொறுங்கியதாகத் தெரிகிறது. விமானம் பிரான்ஸ் பகுதியிலுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விழுந்து நொறுங்கியது தெரிய வந்ததை அடுத்து, அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
படிக்காமல் டிவி பார்த்ததால் கண்டிப்பு: மாணவி விஷம் அருந்தி தற்கொலை
திருவாரூர்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பாடம் படிக்காமல் டிவி பார்த்ததை குடும்பத்தார் கண்டித்ததால் 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். மருதூர் தெற்கு அண்டியப்பன்காடு பகுதியைச் சேர்ந்த முத்துராமன் எனபவரின் மகள் வள்ளி(14). இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை நேற்று பகல் வீட்டில் அவர் டிவி பார்த்துக் கொண்டிருந்தாராம். படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்ததை அவரது சகோதர் கண்டித்தாராம். இதனால் மனம் வெறுத்த அந்த மாணவி விஷம் அருந்தியுள்ளார். ஆபத்தான நிலையில் அந்த மாணவி திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி புதன்கிழமை இன்று உயிரிழந்தார்.
வேலை கேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பேர் கைது
விருதுநகர்: வேலைகேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்த இளம் பெண்ணையும் மீட்டு பெற்றோரிடம் சூலக்கரை போலீஸார் செவ்வாய்கிழமை ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தையைச் சேர்ந்த கணேசன் என்பவரின் 22 வயது மகளுக்கு சூலக்கரையைச் சேர்ந்த ஆறுமுகத்துடன் திருமணம் நடந்தது. பின்னர் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் பெற்றோரின் வீட்டிலேயே அவர் இருந்தாராம். இந்நிலையில் இவர் திடீரென கடந்த பிப்.15-ல் மாயமானார். இது குறித்து சூலக்கரை போலீஸில் தந்தை கணேசன் புகார் செய்ததை அடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அவரது செல்போனில் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சி செய்ததில் ஒருமுறை சிக்னல் கிடைக்கவே, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோவில்பட்டியில் இருந்து அவர் பேசியது தெரிந்தது. அப்போது, மாயமான பெண்ணின் செல்பேசி மற்றொரு பெண்ணிடம் இருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. அவரிடம் போலீஸார் விசாரித்ததில் பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். மாயமான பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் இருந்ததாகவும், அவரைச் சந்திக்கவே கடந்த 15-ம் தேதி வீட்டில் இருந்த 5 சவரன் நகை, பணத்துடன் சென்றதும் தெரியவந்தது. அந்த இளைஞரைச் சந்திக்க முடியாத நிலையில் கோவில்பட்டிக்கு வந்த அந்தப் பெண், பாண்டி என்பவரைச் சந்தித்துள்ளார். அவரை அணுகி வேலை கேட்டதும், அவர் அப்பெண்ணை அதே பகுதியில் அந்தோணிராஜ் (55), மாரியம்மாள் (50) ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார். இருவரும் செண்பகவல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பார்வதியிடம் ஒப்படைத்தனர். அவர் இளம்பெண்ணிடம் இருந்த பணம், நகை மற்றும் செல்பேசி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டதுடன், வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். சில நாள்களுக்கு பின் கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைக்குச் சேர்த்துவிட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, சூலக்கரை காவல் ஆய்வாளர் எஸ்.அன்னராஜ் தலைமையில் போலீஸார் விரைந்து சென்று அப்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வேலைகேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்தோணிராஜ், மாரியம்மாள் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பாண்டி, பார்வதி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது தான் ஒருவனுக்கு பெருமை
- எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது தான் ஒருவனுக்கு பெருமை.
கோபத்தால் மனிதன் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்கிறான். சாந்த குணமே உயர்ந்தது.
போட்டி எண்ணம் இருக்கும் வரையில் மனிதனுக்கு மனநிறைவு உண்டாகாது.
எளிமையும், உழைப்பும் மனதிற்கு நிம்மதியளிக்கும் அருமருந்துகள் என்றால் மிகையில்லை.
- பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ண வேண்டாம். தர்மத்தை உடனே செய்து விடுங்கள்.
-காஞ்சிப்பெரியவர்
நவி மும்பை தேவாலய தாக்குதல்: 4 பேர் கைது
மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் கே.எல்.பிரசாத் தெரிவித்தார். நவிமும்பையில் உள்ள புனித ஜார்ஜ் கத்தோலிக்க தேவாலயம் மீது கடந்த சனிக்கிழமை மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பினர். இந்த தாக்குதலில் தேவாலத்தின் கண்ணாடிகள் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில், எதிர்க்கட்சிகளின் எழுப்பிய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, இதில் தொடர்புடைய குற்றவாளிகளை 48 மணிநேரத்துக்குள் கைது செய்யும்படி போலீஸாருக்கு முதல்வர் தேவேந்தர பட்னவிஸ் திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தார்.
வேலூர் சாலைவிபத்தில் இளைஞர் பலியான சம்பவம்: துரை முருகன் மீதான வழக்கை திரும்பப் பெற கருணாநிதி கோரிக்கை
சென்னை: வேலூர் சாலை விபத்தில் இளைஞர் மரணமடைந்த சம்பவத்தில், தவறுக்கு நியாயம் கேட்டவர்கள் மீதே வழக்கா? என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கார்ணாம்பட்டைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் உதயசூரியன் ஆகிய இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற போது, வேலூர் மாவட்ட ஆட்சியரின் கார், காட்பாடி – திருவலம் நான்கு வழிச் சாலையில் கோரந்தாங்கல் என்ற இடத்தில், அவர்கள் மீது மோதியதில், 25 வயதே ஆன ராஜ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். உதயசூரியன் என்பவர் கை, கால் உடைந்து மருத்துவ மனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் சம்பந்தப்பட்ட காரிலே பயணம் செய்த வேலூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக அந்த இடத்தை விட்டு விரைந்து சென்றுவிட்டதோடு, விபத்து நடந்ததற்கான தடயங்களை அழித்திடும் நோக்கில் விபத்தே நடைபெறாதது போன்றதொரு தோற்றத்தையும் காவல் துறையினரின் துணையோடு செயற்கையாக ஏற்படுத்தியிருக்கிறார். இந்தச் சாலை விபத்து – மரணம் – படுகாயம் -நடந்த சம்பவத்தைக் கண்டித்து, அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினரும், தலைமைக் கழக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆர். காந்தி, ஏ.பி. நந்தகுமார், மாவட்ட அவைத் தலைவர், தி.அ. முகமது சகி, மாநகரக் கழகச் செயலாளர் ப. கார்த்திகேயன் மற்றும் கழகத்தினர் விபத்துக்குக் காரணமான மாவட்ட ஆட்சித் தலைவரைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அனைவரும் மறியலை கைவிட்டுக் கலைந்து சென்றிருக்கிறார்கள். அந்தக் காரை மாவட்ட ஆட்சித் தலைவரே விபத்து நடந்த போது ஓட்டி வந்ததாகவும், ஆனால் விபத்து நேர்ந்து ஒருவர் மரணமும், மற்றொருவர் படுகாயங்களும் அடைந்த நிகழ்வுகளுக்குப் பிறகு அந்தப் பழியை தன்னுடைய ஓட்டுனர் மீது சுமத்தியிருப்பதாகவும், அந்த நேரத்தில் கலெக்டர் விபத்து நடந்த இடத்திற்கு பக்கத்திலே உள்ள “கிளப்” ஒன்றுக்குச் சென்றுவிட்டு வந்ததாகவும், ஆனால் அவற்றையெல்லாம் மறைப்பதற்கான முயற்சிகள் வெகுவேகமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வருகின்றன. விபத்துக்குக் காரணமாக இருந்த காரை ஓட்டி வந்தவர் மீது வழக்கே பதிவு செய்யப்படவில்லை என்பதிலிருந்தே ஓரளவு உண்மை தெரிகிறது. உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தீர விசாரித்து அறிவித்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்குத்தான் உண்டு. சம்பந்தப்பட்டவர்கள் மீது இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய காவல் துறையினர் தற்போது, நடவடிக்கை கோரி சாலை மறியலில் ஈடுபட்டு துரைமுருகன் உள்ளிட்ட 179 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்; காவல் துறையினரின் இந்த நடவடிக்கை யாரும் எதிர்பாராததாகும். ஒரு கோர விபத்து நடந்து, அதிலே ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து, மற்றொருவர் படுகாயமடைந்து கிடக்கும்போது, மாவட்ட ஆட்சியர் உடனே காரிலிருந்து இறங்கி, அவர்களுக்கு முதலுதவி செய்திட வேண்டிய பொறுப்பையும், கடமையையும் மறந்து நடந்து கொண்டிருக்கிறார். இதுபற்றித் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் துரைமுருகன் மாவட்ட ஆட்சியரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, “அது ஒரு சாதாரண விபத்து” என்று அலட்சியமாகக் கூறியிருக்கிறார். 25 வயதான ஒரு வாலிபன் உயிரிழந்தது மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சாதாரண விபத்தாகத் தோன்றியிருக்கிறது. எனவே எப்போதும் போல அ.தி.மு.க. அரசு அலட்சியமாக இல்லாமல், மாவட்ட ஆட்சியர் மீதே குற்றம் சாட்டப்பட்டிருப்பதால் அவரை உடனடியாக மாறுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உட்படுத்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் தவறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை கோரி சம்பவத்தைக் கண்டித்தும், நியாயம் கேட்டும் அமைதியாக மறியல் செய்தவர்கள் மீது பழிவாங்கும் மனப்பான்மையோடு வழக்கு தொடுத்திருப்பதைத் திரும்பப் பெற வேண்டும்! – என்று கூறியிருக்கிறார்.
வெளிநடப்புக்குக் காரணம் என்ன?: அவையில் வழங்க இருந்த அறிக்கையை வெளியிட்டு ஸ்டாலின் விளக்கம்
சென்னை: இன்று தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், திமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தாங்கள் ஏன் வெளிநடப்பு செய்தோம் என்றும், தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது பேரவையில் வழங்க இருந்த அறிக்கையையும் திமுக சட்டமன்றக் குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், 2015-2016ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கலாகும் நிலையில், அ.தி.மு.க. அரசின் நிதி நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை தமிழ்நாட்டின் ஏடுகள் பல, கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து எழுதி வருகின்றன. சீர் குலைந்து விட்ட நிர்வாகம், சிதைந்து விட்ட நிதி மேலாண்மை ஆகியவற்றினால், அ.தி.மு.க. அரசின் நிதி நிலை, நெருக்கடிவலையில் சிக்குண்டு விட்டது; ஆழமான கடன்களில் மூழ்கித் திவாலாகும் கட்டத்தை எட்டி விட்டது. மின்சார வாரியத்தின் கடன் மட்டும் 72 ஆயிரம் கோடி ரூபாய்; போக்குவரத்துக் கழகங்களில் நிதி இழப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய்; பொதுத் துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து மொத்தக் கடன் 4 இலட்சம் கோடி ரூபாய். செயலற்ற அரசு என்பதால், அ.தி.மு.க. அரசு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிவகைகளைத் தேடும் திறனின்றித் திண்டாடுகிறது. தமிழகத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசின் நிதி ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டது. உலக வங்கியோ, ஆசிய வளர்ச்சி வங்கியோ தமிழக அரசுக்கு நிதியேதும் வழங்கிடத் தயக்கம் காட்டுகின்றன. தொழில் உற்பத்தி வளர்ச்சியில் தமிழகத்திற்குக் கிடைத்திருப்பது, கடைசி இடமான 18வது இடம். தமிழ் நாட்டின் உற்பத்தி வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், தி.மு.க. ஆட்சியில் 2009-2010இல் 29.18 சதவிகிதம். அ.தி.மு.க. ஆட்சியில் 2012-2013இல் 1.31 சதவிகிதம். வேளாண்மை வளர்ச்சியோ மைனஸ் 12 சதவிகிதமே! இந்த நிதி ஆண்டுக்கான (2014-15) பற்றாக்குறை 25 ஆயிரத்து 714 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இது அடுத்த (2015-2016) நிதி ஆண்டில் 28 ஆயிரத்து 579 கோடியாக உயரப் போகிறது. இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க என்ன செய்யப் போகிறார்கள்? பற்றாக்குறையை உயர்த்தி – கடன்தொகையையும் உயர்த்தி – தொழில் வளர்ச்சியிலும், உற்பத்தி வளர்ச்சியிலும் தமிழகத்தைக் கடைசி இடத்திற்குக் கொண்டு வந்துள்ள அ.தி.மு.க. அரசு – ஊழல் பட்டியலில் மட்டும் அனைத்து இந்தியாவிலேயே முதல் இடத்தை எட்டியிருக்கிறது. முட்டை வாங்குவதிலும், பருப்பு வாங்குவதிலும் ஊழல் – நெடுஞ்சாலைப் பணிகளிலே ஊழல் – மாநகராட்சி களிலே மண்டிக் கிடக்கும் ஊழல் – ஆவின் பாலில் ஊழல் – மின்சாரம் வாங்குவதிலே கோடி கோடியாக ஊழல் – அரசுப் பணிகளுக்கு டெண்டர் விடுவதிலே ஊழல் என்று அனைத்துத் துறைகளிலும் பல்லாயிரம் பல்லாயிரம் கோடி ரூபாய் லஞ்சம், ஊழல்! திருமண நிதி உதவித் திட்டத்திலிருந்து, இலவசப் பசு வரை, நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஏழைப் பயனாளிகள் வழங்க வேண்டிய லஞ்சம்; அரசுத் துறைகளில் பதவி உயர்வுக்கும், மாறுதலுக்கும் கொடுக்க வேண்டிய லஞ்சம்; பட்டியலிடப்பட்டு ஏடுகளில் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க. அரசின் அடி முதல் நுனி வரை லஞ்சம் – ஊழல் புரையோடிப் புற்று நோயாகப் பரவிவிட்டது. ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கு அஞ்சி, அரசின் நேர்மையான அதிகாரிகள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டு சாகிறார்கள். தமிழகத்தில் 85 இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்துக் கிடக்கும் நிலையில்; அரசுத் துறைகளில் நான்கு இலட்சம் காலிப் பணியிடங்கள்! அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு முறை கூட அரசு ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேச முன் வரவில்லை. ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் அலுவலர்கள், வேறு வழியின்றிப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். கடுந்தேளாகக் கொட்டும் கடன்கள்; கட்டுப்பாட்டுக்குள் இல்லாத சட்டம் – ஒழுங்கு; கரை புரண்டோடும் லஞ்சம் – ஊழல்; பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுச் செயலிழந்து விட்ட நிர்வாகம்; விவசாயிகள், மீனவர், நெசவாளர் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாத பெரும் பின்னடைவுகள்; குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்ட ஜனநாயக மரபுகள்; எனத் தமிழகத்தை இருள் சூழ்ந்திருக்கும் இந்த வேளையில், நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பித்திடும் தார்மீகத் தகுதியை அ.தி.மு.க. அரசு இழந்து விட்டது. விளம்பரத்திற்காக வைக்கப்படும் கவைக்குதவாத வெறும் காகித அறிக்கையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம். – என்று தெரிவித்துள்ளார்.
ஏப்.15ல் 2ஜி வழக்கின் இறுதி வாதம்: சி.பி.ஐ. தனி நீதிமன்றம்
புது தில்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி இறுதி வாதம் தொடங்கும் என்று சி.பி.ஐ. தனி நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கனிமொழியின் கோரிக்கையின்படி, அவர் கலைஞர் டி.வி.யின் இயக்குனர் பதவியில் இருந்து விலகியதற்கான கடித நகலை நீதிமன்ற உத்தரவின்பேரில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அதிகாரி நவில் கபூர் நேற்று சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். சாட்சி விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் இறுதி வாதம் வரும் ஏப்,15 ஆம் தேதி தொடங்கும் என்று நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்து அதற்கான உத்தரவை பிறப்பித்தார். முன்னதாக, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., சித்தார்த் பெகுரா, ஆர்.கே. சொந்தாலியா உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தில்லி சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. சி.பி.ஐ. தரப்பில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, கார்ப்பரேட் நிறுவனங்களின் தரகர் நீரா ராடியா, முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி.யின் முன்னாள் இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 29 பேர்களின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன.
தமிழக பட்ஜெட் தாக்கல்
சென்னை: தமிழக அரசின் 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். இதில், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

