பானிபட் கருவில் இருக்கும் பெண் குழந்தையைக் கொல்வது பாவச்செயல்; பெண் குழந்தைகளை வாழ விடுங்கள் என, ஒவ்வொருவரிடமும் நான் பிட்சை கேட்கிறேன்,” என, பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக கூறினார். ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும், 100 மாவட்டங்களில், ‘பெண் குழந்தைகளை காப்போம்; கற்க வைப்போம்’ என்ற பெயரிலான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தை, அரியானா மாநிலத்தில் நேற்று துவக்கி வைத்த, பிரதமர் மோடி பேசியது:
கருவில் இருக்கும் சிசு, ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து, பெண் குழந்தையானால், அதை அழிக்கும் பாவச் செயலை செய்யும் டாக்டர்கள், இந்த சமுதாயத்திற்கு துரோகம் செய்கின்றனர். இத்தகைய குற்றங்கள், 21ம் நூற்றாண்டிலும் தொடர்கிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதன்படி, மனதால் நாம், 18ம் நூற்றாண்டுக்கு பின்தங்கியுள்ளோம். அப்போதாவது, பிறந்த பெண் குழந்தைகளை சில ஆண்டுகளாவது வளர்த்த பிறகு தான் கொன்றனர். இப்போது கருவிலேயே கொல்வது மிகவும் கொடூரமானது. இந்த நிலை மாற வேண்டும். இந்த நாட்டின் பிரதமரான நான், உங்கள் ஒவ்வொருவரிடம், ‘பெண் குழந்தைகளை வாழ விடுங்கள்’ என, பிட்சை கேட்கிறேன். பெண் குழந்தைகளை அழிப்பது ஒரு விதமான மனநோய். இது, அரியானாவில் மட்டுமின்றி, நாடு முழுவதும் இருக்கிறது என்றார்.