இணையப் பயன்பாட்டு டேட்டா சேவை வழங்குவதில் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் புதிய வரவு, தொலைத் தொடர்பு டேட்டா கட்டண விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் வரும் 12 முதல் 18 மாதங்களில் டேட்டா பயன்பாட்டு கட்டணங்கள் 40 சதம் வரை குறையும் என்றும் அகன்ற அலைக்கற்றை மற்றும் நெட்வொர்க் சேவை வழங்கும் யுடிஸ்டார்காம் தெரிவித்துள்ளது. மொபைல், பிராட்பேண்ட், நெட்வொர்க் சொல்யூஷன் வழங்கும் எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல், ரிலையன்ஸ், எஸ் எஸ் டி எல் உள்ளிட்ட நிறுவனங்களை வாடிக்கையாளராகக் கொண்டுள்ள இந்நிறுவனம், இந்தியாவில் தன் சேவைகளை விரிவுபடுத்தவுள்ளது. இந்தியாவில் அகன்ற அலைவரிசை வழங்குவதில் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் கட்டணம் குறையும் என்று கூறியுள்ள இந்நிறுவனத்துக்கு இந்தியாதான் வருவாய் ஈட்டித் தரும் இரண்டாவது பெரிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
யோகா ராம்தேவுக்கு பத்ம விருதா?: காங்கிரஸ் எதிர்ப்பு
புதுதில்லி பத்ம விருதுகள் பெறுவோர் குறித்த பெயர்ப் பட்டியலை விரைவில் மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இதில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், யோகா ராம்தேவுக்கு பத்ம விருது அளிக்கப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராம்தேவுக்கு விருது வழங்குவது அத்வானியை அவமதிப்பதாகும் என அக்கட்சி கூறியுள்ளது.
தாத்தா கொலை: பேரனுக்கு வலை
அம்பாசமுத்திரம் அம்பாசமுத்திரம் அருகே தாத்தாவை வெட்டிக் கொன்ற பேரனை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை அடுத்த வாகைக்குளத்தில் அணைக்கரை முத்து என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக அவரது பேரன் அருள் என்பவரை ஆழ்வார்குறிச்சி போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
தில்லியில் உபேர் கேப்ஸ் மீண்டும் சேவையைத் தொடங்குகிறது!
புது தில்லி அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் உபேர் டாக்ஸி தனது சேவையை தில்லியில் மீண்டும் துவங்கவுள்ளது. அது, இந்தியாவின் தலைநகரான தில்லியில் தனது சேவையை மீண்டும் துவக்கும் வகையில், ரேடியோ டாக்ஸி உரிமத்துக்கு விண்ணப்பித்துள்ளது. முன்னதாக ஒரு பெண் பயணியை உபேர் கேப்ஸ் கார் ஓட்டுநர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததை அடுத்து அதன் சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 உயர்வு
சென்னை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 3 அதிகரித்து ரூ. 2,666 என்ற அளவிலும், சவரன் ஒன்றுக்கு ரூ. 24 உயர்ந்து ரூ. 21,328 என்ற அளவிலும் உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 3 அதிகரித்து ரூ. 2,851 என்ற அளவில் உள்ளது. சில்லரை வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ. 43.40 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ.285 உயர்ந்து ரூ. 40,580 என்ற அளவிலும் உள்ளது.
பீகாரில் ஆரா நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி
பாட்னா பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் ஆரா சிவில் நீதிமன்றம் முன்னர் நாட்டு வெடிகுண்டு வெடித்தது.. இதில், ஒரு பெண் உள்பட 2 பேர் பலியாயினர், 7 பேர் காயம் அடைந்தனர். இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து உயிரிழந்த இருவரில் ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிள். வெள்ளிக்கிழமை இன்று மதியம் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக போலீஸார் கூறினர்.
யோகா ராம்தேவ், நடிகர்கள் அமிதாப், ரஜினிக்கு பத்ம விருதுகள்?
யோகா மாஸ்டர் ராம்தேவ், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட 148 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு துறைகளில் நாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. இதன்படி, இந்த ஆண்டு 148 பேருக்கு பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் ஆகிய இருவரின் பெயர்களும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. யோகா மாஸ்டர் ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், நடிகர்கள் திலிப்குமார், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், திரைப்பட இயக்குநர் பன்சாலி உள்ளிட்டோரும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. விளையாட்டுத் துறை சேர்ந்த ஹாக்கி அணி கேப்டன் சர்தாரா சிங், பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து, செஸ் கிராண்ட் மாஸ்டர் கிருஷ்ணன் சசிகிரண், மல்யுத்த வீரர் சுஷில்குமார், இஸ்ரோ விஞ்ஞானிகள் அருணன், ஷிவ்குமார் ஆகியோருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி மன்னர் மரணம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு!
சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் மறைவை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்ற பிற எண்ணெய் வள நாடுகளின் கோரிக்கையை சவுதி அரேபியா ஏற்கவில்லை. இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர் சரிவில் இருந்து வந்தது. இந்நிலையில், மன்னரின் மரணத்தை தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பான சவுதி அரேபியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கலாம் என்று சந்தைகளில் யூகம் எழுந்துள்ளது. இதையடுத்தே கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3.1 சதவிகிதமும் ஆசிய சந்தையில் 1.58 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
ஒபாமாவுடன் மோடியின் ரேடியோ நிகழ்ச்சி – மன் கி பாத்
புதுதில்லி இந்தியா வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 27ம் தேதி, பிரதமர் மோடியுடன் சேர்ந்து, ரேடியோவில் பேசுகிறார். கடந்த மே மாதம் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, அக்டோபர் முதல், ‘மன் கீ பாத்’ என்ற பெயரில், தன் மனதில் தோன்றும் எண்ணத்தை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதற்காக, ரேடியோவில் பேசி வருகிறார்; அதை, நாடு முழுவதும் உள்ள, ‘ஆல் இந்தியா ரேடியோ’ நிலையங்கள் ஒலிபரப்பி வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் என்ன விஷயங்களை மோடி பேச வேண்டும் என, பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம்; மோடியின் இணைய தளத்தில் அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க, 25ம் தேதி இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா, 27ம் தேதி, மோடியுடன் இணைந்து ரேடியோவில் பேச உள்ளார். இந்தத் தகவலை, பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். ‘டுவிட்டர்’ இணையதளத்தில் மோடி, ’27ம் தேதி நடைபெற உள்ள சிறப்பு மன் கீ பாத் ரேடியோ நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, அதிபர் ஒபாமாவுடன் நானும் பேசுகிறேன்’ என, தெரிவித்துள்ளார்.
Exclusive: India-US nuclear deal won’t be operationalised during Prez Obama’s visit https://t.co/0LQ8jWNcDN pic.twitter.com/Qdf08rCt5R — Firstpost (@firstpostin) January 23, 2015
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் புதிய உச்சம்
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் இன்று அதிக பட்ச அளவாக 29364 புள்ளிகள் என்ற நிலையில் புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 8800 புள்ளிகளுக்கு மேலாகச் சென்று 8855 என்ற புள்ளிகளில் வர்த்தகம் துவங்கியது.
Sensex opens at record high of 29364 points, NIfty above 8800 points at 8855 #marketopen #breaking pic.twitter.com/dHG6UmkpxD — FirstBiz (@FirstpostBiz) January 23, 2015

