திருநெல்வேலி அடுத்த பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி 50 வது ஆண்டு பொன்விழாவையொட்டி விழாகோலம் பூண்டுள்ளது. இன்று 23 தேதி துவங்கி 3 நாட்கள் காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலையில் கலைநிகழ்ச்சிகள்,சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது. பொன்விழாவையொட்டி சித்தம் 50 என்ற மருத்துவ கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வர்மம் மற்றும் யோகம், சித்த மருத்துவ உணவு முறைகள், மனித உறுப்பு கண்காட்சி, 500 மூலிகைகளின் கண்காட்சி உள்ளிட்ட 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
பாளை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 50 வது பொன்விழா கொண்டாட்டம்
ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் போட்டி: பயஸ், போபண்ணா, சானியா மிர்சா தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இரட்டையர் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. பயஸ், போபண்ணா, சானியா மிர்சா ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர். இன்று 2-வது சுற்று மகளிர் ஆட்டத்தில் சானியா மிர்சா, சீன தைபே வீராங்கனை சூ-வெய்-சிய ஆகியோருக்கு கனடா-போலந்து ஜோடியான காப்ரியலா டாப்ரோவ்ஸ்கி, அலிசியா ரொசோல்ஸ்கா ஆகியோர் அதிர்ச்சி அளித்தனர். சானியா ஜோடி 6-7, 4-6 என்று நேர் செட்களில் தோல்வி அடைந்து வெளியேறியது. இருப்பினும் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா-புரூனோ சோரேஸ் இணை வென்றது. ஆடவர் இரட்டையர் போட்டியில் முதல் சுற்றில் நம்பிக்கை அளித்த போபண்ணா-டேனியல் நெஸ்டர் இணை இன்று 2-வது சுற்றில் பெலிசியானோ லோபஸ்-மாக்ஸ் மிரிண்யி இணையிடம் 5-7, 3-6 என்ற நேர் செட்களில் படு தோல்வியடைந்து வெளியேறியது. மற்றொரு ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் லியாண்டர் பயஸ் இவரது தென் ஆப்பிரிக்க சக வீரர் ராவென் கிளாசன் 6-2, 4-6, 1-6 என்ற செட்களில் சைமன் போலெலி ஃபேபியோ ஃபாக்னீனி என்ற ஜோடியிடம் தோல்வியடைந்தது.
2500 நகரங்களில் இலவச அதிவேக வைஃபை சேவை: பி.எஸ்.என்.எல் திட்டம்
புது தில்லி சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் நாடு முழுவதிலும் உள்ள 2500 நகரங்களில் இலவசமாக அதிவேக வை-பை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏர்போர்ட், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் தனியார் நிறுவனங்குகள் இலவச வைஃபை சேவையை வழங்கி வருவது போன்று, 2500 நகரங்களில் இந்தச் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இதை குறிப்பிட்ட நேரம் வரை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுபம் ஸ்ரீவத்ஸவா, இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “அடுத்த நிதி ஆண்டிலிருந்து (2015-2016) நடைமுறைக்கு வரவிருக்கும் இந்தத் திட்டத்தை பி.எஸ்.என்.எல். மட்டுமின்றி அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பில் முன்னாள் பிரதமர்கள் கோட்டை விட்டனர்: பாரிக்கர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்
புதுதில்லி தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் சில முன்னாள் பிரதமர்கள் சமரசம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் யார் என்பதை நான் தெரிவிக்க விரும்பவில்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தில்லியில் நடைபெற்ற இந்தி வார இதழ் ஒன்றின் சிறப்பு பிரதி வெளியிட்டு விழாவில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசியப் பாதுகாப்பு விஷயத்தில் சில முன்னாள் பிரதமர்கள் சமரசம் செய்து கொண்டுள்ளனர். கடல் எல்லை உருவாக்கப்படுவதில் 20 ஆண்டுகளாக போடப்பட்ட திட்டத்தில் முன்னாள் பிரதமர்கள் சிலர் விட்டுக் கொடுத்தனர். இருப்பினும் தங்கள் பெயர் எங்கும் வெளி வராமல் இருக்கும்படி அவர்கள் பார்த்துக் கொண்டனர். இது வருத்தமளிக்கிறது. அவர்கள் யார் என்பதை நான் வெளியில் கூற விரும்பவில்லை என்றார். மனோகர் பாரிக்கரின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி இதுகுறித்துக் கூறுகையில், அந்த முன்னாள் பிரதமர்கள் யார் என்பதனை தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் இந்தப் பேச்சுக்கு பாரிக்கர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.
”இரண்டு சந்திரசேகரர்களும் சங்கரநாராயணன் எனும் ஒருவராகவேதான் இருந்தார்கள்”
“பெரியவாளின் சினமும்-வைத்யமும்”
“பெரியவாளின் சினமும்-வைத்யமும்”
அவர்கள் சொன்ன பதில்
அவர்கள் சொன்ன பதில்:!!!!! என் நண்பர் சாய் ராமசாமியின் அனுபவம் (மலேசியாவில்) எங்கள் ஊரில் இருந்து 40 கிலோ மீட்டர் தள்ளி ஒரு சின்ன ஊர் இருக்கிறது. ஆனால் மலேசியாவின் முக்கியமான தொழிற்சாலைகள் எல்லாம் அங்குதான் இருக்கின்றன. அங்கே ஒரு தமிழ் கடை உள்ளது. 2000 வாக்கில் ஒரு நண்பர் மூலம் தெரியவந்தது. மிகப்பெரிய ஹோட்டல் எல்லாம் கிடையாது. ஒரு பத்து பதினைந்து பேர் அமர்ந்து சாப்பிடலாம். வெளியேதான் உட்கார்ந்து சாப்பிட வேண்டும். மிகச்சிறிய கடை. ஆனால் சாப்பாடு மிகப்பிரமாதமாக இருக்கும். கணவன் மனைவி மட்டுமே அந்த கடையை நிர்வகிக்கிறாகள். பிள்ளைகள் எல்லோரும் படித்து முடித்து வேலையில் இருக்கிறார்கள். இருந்தாலும் கடையை தொடர்ந்து நடத்திவருகிறார்கள். நான் பல முறை கேட்டிருக்கிறேன், “ஏன் நீங்கள் கடையை பெரிது படுத்தக்கூடாது?” என்று. அவர் சொல்லும் ஒரே பதில், “வர வருமானம் போதும் சார்” அவர் மனைவி வைக்கும் சிக்கன் குழம்புக்கும், சிக்கன் வறுவலுக்கும் ஏராளமான வாடிக்கையாளர்கள் உண்டு. அதில் 50 சதவிகிதம் வெளிநாட்டுக்காரர்கள். நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் சென்று விடுவேன். அப்படித்தான் நேற்றும் சென்றிருந்தேன். சாப்பிட்டு முடிக்கையில் அவர்களை பார்த்து நீண்ட நாட்களாக கேட்க நினைத்த கேள்வியை கேட்டேன், “நானும் 13 வருடங்களாக உங்கள் கடையில் சாப்பிட்டு வருகிறேன். அது எப்படி ஒரே டேஸ்டை மெயிண்டைன் செய்கிறீர்கள்? எப்படி உங்களால் முடிகிறது? சமைக்கும் போதே டேஸ்ட் பார்த்து பார்த்து சரி செய்வீர்களா?” அவர்கள் சொன்ன பதில்: “நாங்கள் இருவருமே நான் வெஜ் சாப்பிடுவதில்லை. தீவிரமான வெஜிடேரியன்”!!!??
ஜன.25ல் 5வது தேசிய வாக்காளர் தினம்: தேர்தல் ஆணையம்
புது தில்லி வரும் ஜனவரி 25ம் தேதி 5வது தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாடுகிறது தேர்தல் ஆணையம். இதன் முக்கியக் கருத்தாக, ”எளிமையான பதிவு; எளிமையான திருத்தம்” என்பதை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுதில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பளுதூக்கும் அரங்கில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் தலைமை தாங்குகிறார். 25ம் தேதி தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்ட தினமும்கூட! 1950ம் ஆண்டில் ஜன.25ல் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த தினத்தில், தேர்தல் ஆணையம் வாக்களிக்கத் தகுதியுள்ள இளைய வாக்காளர்களைச் சேர்த்து வாக்காளர்களை அதிகரிக்கச் செய்வது முக்கியக் கொள்கையாக செயல்படுத்தப் படவுள்ளது. மேலும், இந்த தினத்தை தேர்தல் நடவடிக்கைகளில் வாக்காளர்களை ஈடுபடுத்தச் செய்யும் விழிப்புணர்வை ஊட்டுவதற்காகவும் திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
பத்ம விருதுகள் குறித்த சர்ச்சை: உள்துறை அமைச்சகம் மறுப்பு
நாட்டில் பல்துறையில் தொண்டாற்றியவர்களுக்கு வழங்கப் படும் பத்ம விருதுகள் குறித்து இன்று காலை வெளியான தகவல் குறித்து உள்துறை அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பு: 2015ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குறித்து அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த விருதுகள் குறித்த அறிவிப்பு ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும். இந்த விருதுகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக சிலரது பெயர்கள் ஊடகங்களில் வெளியானது ஊகங்களில் அடிப்படையில் வெளியான தவறான தகவல். அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப் படாதவை என்று அமைச்சகம் கூறியுள்ளது.
வடகிழக்கில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டின் வடகிழக்குப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களின் மலைப் பகுதி, பிரம்மபுத்திரா நதியின் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியில், சென்ற வருடம் எடுத்த கணக்கெடுப்புப்படி, புலிகள் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் 148 புலிகள் இருந்ததாகவும், 2014ல் அது 201 ஆக அதிகரித்துள்ளதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. அஸ்ஸாமில்தான் அதிகபட்சமாக 167 புலிகளும், அருணாசலப் பிரதேசத்தில் 28 புலிகளும் உள்ளன. அஸ்ஸாமில் உள்ள காஸிரங்கா தேசிய புலிகள் காப்பகத்தில் 125 புலிகளும் அருணாச்சலில் உள்ள நம்தாபா தேசிய காப்பகத்தில் 4 புலிகளும் உள்ளன என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

