
காருக்குள் ஹெல்மெட் அணிந்து செல்பவரின் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அலிகார் நகரத்தை சேர்ந்தவர் பியூஷ் வர்ஷினே. இவர் காரோட்டி செல்லும் போது தலைக்கவசம் அணிந்த படி ஓட்டும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து உள்ளூர் ஊடகங்கள் அவரிடம் கேட்டபோது, அவர் கூறிய பதில் அதிர்ச்சி அடைய வைத்தது.
“சென்ற மாதம் 27-ஆம் தேதியன்று காரில் சென்று கொண்டிருந்தேன். அன்று இரவு வீடு திரும்பியவுடன் எனக்கு ஒரு செல்லான் குறுஞ்செய்தி மூலமாக வந்தது. அதாவது, என்னுடைய கார் பதிவு எண்ணில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது. தலைக்கவசம் அணியாததால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை கண்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தலைக்கவசம் அணியாததால் அதிகாரிகள் என்னிடமிருந்து 500 ரூபாய் பறித்துக்கொண்டனர். இனிமேல் இதுபோன்ற தவறு நிகழாமல் இருப்பதற்காக தலைக்கவசம் அணிந்து சென்றேன்” என்று கூறினார்.
இது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறு காரின் பதிவு எண்ணைக் கொண்டு தலைக்கவசம் அணிவதற்கு அபராதம் விதிக்கப்படும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.