வெடி இப்படி போடுங்க! அப்படி போடாதீங்க! அறிவுறுத்தும் மாசு கட்டுப்பாடு வாரியம்!

Published:

crakers - 2026

தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் உரிய இடத்தில் கூட்டாக ஒரே இடத்தில் பட்டாசு வெடிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் பொழுது, என்ன செய்யலாம் செய்யக் கூடாது என்பது குறித்து விஷயங்களையும் வெளியிட்டுள்ளது.

பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனால் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை செயலர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் துறை செயலர், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அரசு அலுவலர்களைக் கொண்டு வெவ்வேறு குழுக்கள் அமைத்து உச்சநீதிமன்ற ஆணையின்படி நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொது மக்கள் கீழ்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைபிடிக்க வேண்டியவை

  1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
  2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை

  1. அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம்.
  2. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  3. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

Related articles

Recent articles

spot_img