பேஸ்புக் காதல்! ஏற்காத பெண்ணின் பெற்றோர்! நல்ல வாழ்க்கை அமைந்ததால் ஏற்ற பையனின் உறவினர்கள்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்
karur facebook love turned marriage - 2026

பேஸ்புக் மூலம் இளைஞர் ஒருவரைக் காதலித்த பெண், நேரில் சந்தித்தபோது அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும், அதையும் மீறி, மனசு ஒத்துப் போனதென்று பிடிவாதம் பிடித்து அந்த இளைஞரையே திருமணம் செய்து கொண்டார். இவர்களின் இந்தக் காதல் பிடிப்பு, கரூர் பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான பெண் பவித்ரா டி.பார்ம் படித்துக் கொண்டிருந்தபோது, பேஸ்புக்கில் விக்னேஷ்வரன் என்ற இளைஞருடன் நட்பு முறையில் பழகியுள்ளார். விக்னேஷ்வரன் பி.சி.ஏ. படித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். பவித்ராவுடன் நண்பராகப் பழகிய விக்னேஸ்வரனுக்கு, நாளடைவில் பவித்ராவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, இருவருக்குள்ளும் அது காதலாகக் கிளைத்துள்ளது.

இதனிடையே, விக்னேஷ்வரன் குறித்து வேறு எதுவும் தெரியாத நிலையில், திடீரென ஒரு நாள் விக்னேஷ்வரன் சுமார் 4 அடி மட்டுமே உயரம் கொண்ட குள்ள உருவம் கொண்டவர் என்பது பவித்ராவுக்கு தெரியவந்தது. இருப்பினும் பவித்ரா அது குறித்து கவலைப் படவில்லை. கொஞ்சமும் தயக்கம் கொள்ளாத பவித்ரா, நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம், எனவே இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று உறுதிபடக் கூறியுள்ளார்!

இதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தொடர்ந்து, பவித்ரா தனது எதிர்கால திருமண வாழ்க்கை முடிவு குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பவித்ராவின் பெற்றோர், உனக்கும் விக்னேஷ்வரனுக்கும் எந்த விதத்திலும் பொருத்தம் கிடையாது, எனவே உங்கள் திருமண வாழ்க்கை குறித்த முடிவினை எங்களால் ஏற்க முடியாது என்று கூறியுள்ளனர்.

இருப்பினும், வழக்கமான சினிமா காதலர்கள் வழியில், பவித்ரா அதிரடி முடிவெடுத்தார். பெற்றோர், உற்றார் உறவினர் என அனைவரையும் உதறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நண்பர்கள், விக்னேஷ்வரனின் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால், இவர்களின் திருமணத்துக்கு பவித்ராவின் வீட்டினர் ஆட்சேபம் தெரிவித்து வந்ததால், இருவரும் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து இவர்கள் இருவரின் பெற்றோரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பவித்ராவின் பெற்றோர் உறுதியுடன், தாங்கள் இந்தத் திருமணத்தை ஏற்க முடியாது என்று கூறினர். பின்னர், எங்களுக்கு இப்படி ஒரு மகளே இல்லை, அவள் எங்கள் மகளே இல்லை என்று தலைமுழுகிவிட்டோம் என பெரும் வருத்தத்துடன் அங்கிருந்து சென்றனர்.

இருப்பினும், விக்னேஷ்வரனுக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததால், மகிழ்ச்சியடைந்த விக்னேஷ்வரன் குடும்பத்தினர் மணமகளை அழைத்துக் கொண்டு தங்கள் இருப்பிடம் சென்றனர். இது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.