- திமுக துணைப் பொதுச்செயலாளராக அந்தியூர் ப.செல்வராஜ் நியமனம்!
- வி.பி. துரைசாமியிடம் இருந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிப்பு!
- தமிழக பாஜக தலைவர் முருகனை சந்தித்த நிலையில் நடவடிக்கை!
- வி.பி.துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் நியமனம்:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
பாஜக., தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை பொதுச்செயலருமான வி.பி.துரைசாமி பதவிப் பறிப்புக்கு ஆளாகியிருக்கிறார். அவருக்கு பதிலாக, அந்தியூர் செல்வராஜை திமுக துணை பொதுச் செயலாளராக நியமித்துள்ளார் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்!
வி.பி.துரைசாமி, திமுகவில் 1989-91 வரையும், 2006-11 வரையும் துணை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். திமுகவின் முக்கியப் பொறுப்பான துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தார். ராசிபுரத்தைச் சேர்ந்தவரான வி.பி.துரைசாமி தமது ஊரைச் சேர்ந்த முருகன் பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றதை வரவேற்று வாழ்த்து தெரிவிக்க தமது மகனுடன் கமலாலயம் சென்றார்.
இது கட்சிக்குள் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. அண்மைக் காலமாகவே விபி துரைசாமி கட்சி மீது அதிருப்தியில் இருந்தார் என்று கூறப் படுகிறது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தாம் விரும்பிய இடத்தில் இவருக்கு சீட் ஒதுக்கப் படவில்லை. இதனால் மன வருத்தம் ஏற்பட்டு, கட்சி நடவடிக்கைகளில் இருந்து சற்றே ஒதுங்கியிருந்தார். பின்னரும், அண்மைய மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் சீட் கேட்டிருந்தும் அவருக்கு ஒதுக்கப் படவில்லை. அவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜுக்கு சீட் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இவர் பாஜக தலைவர் முருகனைச் சந்தித்தது திமுக கட்சிக்குள் பிரச்னையை ஏற்படுத்தியது. ஆயினும், இன்று செய்தியாளர்களிடம் பேசிய விபி.துரைசாமி கட்சித் தலைமை குறித்த விமர்சனத்துடன், பாஜக தலைவர் முருகனைச் சந்தித்தது குறித்து நியாயப்படுத்தியும் பேசியிருந்தார்.
ஏற்கெனவே தாம் ஒரு சர்வாதிகாரி என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி வந்த ஸ்டாலின், தம்மைக் குறித்த எந்த விமர்சனத்தை எவர் முன்வைத்தாலும், உடனே ஜனநாயக முறைப்படி அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றுவது வழக்கம். இந்நிலையில், வி.பி.துரைசாமியின் பதவியை மட்டும் பறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.
மாநிலங்களவை வேட்பாளராக எப்படி இவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜுக்கு வழங்கப் பட்டதோ, அதே போல், கட்சிப் பதவியும் பறிக்கப் பட்டு, அண்மையில் மாநிலங்களவை உறுப்பினரான முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜுக்கு வழங்கப் பட்டுள்ளது.
தனது பதவிப் பறிப்பு குறித்து கருத்து தெரிவித்த வி.பி.துரைசாமி, என் பதவி பறிப்பை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். பதவி பறிப்பு செய்தி எனக்கு எந்தவித ஆச்சர்யமும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலினுக்கு நன்றி என்றும், பதவி பறிப்பு விவகாரத்தில், ஆச்சரியப்படுவதற்கில்லை, என்ன தவறு செய்தேன்? என்று விளக்கம் கேட்கப்படவில்லை என்று கூறினார் வி.பி. துரைசாமி