தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை நடத்த தடை விதித்த நிலையில் தடையை மீறி யாத்திரை நடத்த முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பாஜக., நவ.06 தொடங்கி, டிச.06 வரை ஒரு மாத கால வேல் யாத்திரை நடத்துவதாக அறிவித்தது. இந் நிலையில், கொரோனா பரவல் காரணம் என்று கூறி, இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்க மறுத்தது தமிழக அரசு. இதனைஅடுத்து, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் சென்னையிலிருந்து காரில் திருத்தணி கிளம்பிச் சென்ற பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், திருவள்ளூர் மாவட்ட எல்லையான நசரத்பேட்டையில் நிறுத்தப் பட்டார். பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட அவருடன் வந்த தொண்டர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். பின்னர், ஐந்து கார்கள் மட்டும் பின் தொடர திருத்தணி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
திருத்தணியில் தரிசனத்துக்குப் பின்னர், எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை தொடங்க பாஜக.,வினர் முயற்சித்தனர். இதை அடுத்து, போலீஸாருக்கும் பாஜக.,வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து தடையை மீறி யாத்திரை செல்ல முயன்றதாகக் கூறி, பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக.,வினரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர். எல்.முருகனுடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.
இதனிடையே, வேல் யாத்திரைக்கு தடை மற்றும், தமிழக தலைவர் எல்.முருகன் கைது ஆகியவற்றைக் கண்டித்து, பல்வேறு இடங்களிலும் பாஜக.,வினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.