கொரோனா காலத்தில் முடங்கிப் போயிருந்த பஸ் போக்குவரத்தால் வருமானம் இழந்திருந்த நிலையில், பண்டிகை தொடங்கியுள்ள இந்த நிலையில் விட்டதைப் பிடிக்கும் வழியாக, கொள்ளை லாபத்தில் பஸ்களை இயக்க பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லி ஆம்னி பஸ்கள் ஏய்த்துக் கட்டி வருகின்றன.
வருடம் தோறும் பண்டிகைக் காலங்களில் ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை என்பது ஒரு பிரச்னையாகவே உள்ளது. தீபாவளி, பொங்கல் என்று முக்கியப் பண்டிகைகளை தங்களுடைய சொந்த ஊரில் வைத்துக் கொண்டாட வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்குமே இருக்கும்! அந்த ஆசையைக் காசாக்கி வருகின்றனர் தனியார் ஆம்னி பஸ் முதலாளிகள்!
நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிப்பது, என்னதான் அரசுத்துறை ஒவ்வொரு முறை அபாய எச்சரிக்கை கொடுத்தாலும் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தங்கள் இஷ்டத்துக்கு வசூல் வேட்டை நடத்துவது என்று ஆம்னி பஸ்கள் போடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்த முறை கொரோனா கால முடக்கம் வேறு வந்துவிட்டதால், இப்போது ஆம்னி பஸ் கட்டணம் வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகப் புலம்புகின்றனர் பயணிகள்.
கொரோனா அச்சம் காரணமாக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட இந்த ஆண்டு குறைவான பேருந்துகளே தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பிலும் இயக்கப் பட்டு வருகின்றன. கடந்த மாதம் பஸ்களை இயக்குவதற்கு பச்சை சிக்னல் கொடுக்கப் பட்ட பின்னர், தயங்கித் தயங்கி பஸ்களை இயக்கி வந்தனர் ஆம்னி பஸ் முதலாளிகள். காரணம், பொதுமக்களின் போக்குவரத்து பெருமளவில் இல்லாததுதான்.
அதனால், இந்த ஆண்டு குறைந்த அளவே ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்கெனவே நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், இப்போதும்கூட பணியிடங்களுக்குத் திரும்பவில்லை! கல்லூரிகள் இன்னும் இயங்கவில்லை. பெரும்பாலும் அதிக விலையில் டிக்கெட் என்றாலும் கொடுத்து பயணிக்கும் ஐ.டி., துறை பணியாளர்களும் வீடுகளில் இருந்தே பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த ஆண்டு தீபாவளியைப் பொறுத்தவரை ஆம்னி பேருந்து தொழில் பெரும் நஷ்டம்தான் என்கிறது ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம்.
இருப்பினும், தற்போது தனியார் பேருந்து இணையதளங்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேரில் சென்று பயண சீட்டை வாங்குபவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.