400 வருட கால சாபம் முடிந்தது; மைசூர் அரச குடும்பத்துக்கு ஆண் வாரிசு வந்தது!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்

மைசூரு உடையார் மன்னர் குடும்பத்துக்கு ஆண் வாரிசு பிறந்தது. இதன் மூலம் 400 ஆண்டுகால சாபம் தீர்ந்தது எனப்படுகிறது. பட்டத்து இளவரசி திரிஷிகா குமாரி புதன்கிழமை நள்ளிரவு ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்து, சாபத்தை முடித்துவைத்தாராம்!

மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்த உடையார் மன்னர் குடும்பத்தின் 27ஆவது வாரிசான பட்டத்து இளவரசர் யதுவீர் கிருஷ்ண தத்த சாமராஜ் உடையாருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பட்டத்து இளவரசி திரிஷிகா குமாரிக்கும் 2016இல் திருமணம் நடைபெற்றது. பின்னர், மைசூரில் உள்ள அரண்மனையில் அக்.1ஆம் தேதி திரிஷிகாகுமாரிக்கு வளைகாப்பு சீமந்தம் நடத்தப்பட்டது.

யதுவீர் கிருஷ்ணதத்த உடையார் மற்றும் திரிஷிகா குமாரி இருவரும் பெங்களூரில் உள்ள அரண்மனையில் வசித்து வருகின்றனர். திரிஷிகா குமாரிக்கு புதன்கிழமை பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெங்களூரு இந்திரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திரிஷிகா குமாரி அனுமதிக்கப்பட்டார். புதன் கிழமை நள்ளிரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மைசூரு உடையார் மன்னர் குடும்பத்துக்கு சட்டப்படியான அதிகாரங்கள் இல்லை என்றாலும், மைசூரு, மண்டியா, சாமராஜ்நகர் மாவட்டங்களை உள்ளடக்கிய பழைய மைசூரு மாகாணத்தில் உள்ள மக்கள் மன்னர் குடும்பத்தின் மீது தற்போதும் மரியாதை கொண்டுள்ளனர்.

இந்தக் குடும்பத்தில் ஆண்வாரிசுகள் உருவாகாமல் போன சரித்திரம் மனத்தை கனப் படுத்துவதாக அமைந்ததுதான். 1610ல் மைசூரு மாகாணத்தை ஆண்டு வந்த ராஜா உடையார், விஜயநகரப் பேரரசின் அங்கமாக விளங்கிய ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மீது போர் தொடுத்தார். அங்கு தளபதியாக இருந்த ஸ்ரீரங்க ராயாவின் மனைவி அலமேலு அம்மாள், ரங்கநாயகி தாயாரின் தீவிர பக்தை. இந்தப் போரில் தோல்வியடைந்த பின் ரங்கநாயகி தாயாருக்கு சூட்டிவந்த ஆபரணங்களுடன் தலைக்காடுவில் தஞ்சம் அடைந்திருந்தார் அலமேலு அம்மாள். அப்போது அங்கே சென்ற ராஜா உடையார், அலமேலு அம்மாளிடம் இருந்து ஆபரணங்களைப் பறித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அலமேலு அம்மாள், ராஜா உடையாரின் வம்சம் அழியக் கடவது (குழந்தைப் பாக்கியம் இருக்கக்கூடாது) என்று சாபமிட்டுவிட்டு, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாராம்.

அதன் பிறகு, பதவி வகித்த மன்னர்களில் யாரும் ராஜா உடையாரின் நேரடி வாரிசு கிடையாது. தத்து எடுத்து பட்டத்து இளவரசர்களாக முடிசூடப்பட்டு, பின்னர் மன்னர்களாக பதவி வகித்து வந்துள்ளனர். மைசூரில் 1940 முதல் 1947ம் ஆண்டு வரை ஆண்ட மன்னர் ஜெயசாம ராஜேந்திர உடையாருக்கு மகனாக ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் 1953 பிப்.20-ஆம் தேதி பிறந்தார். இவருக்கும் பிரேமா தேவிக்கும் திருமணம் நடந்தது. ஆனால், இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் மறைவுக்கு பிறகு யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தத்தெடுக்கப்பட்டார். தற்போது, யதுவீர் கிருஷ்ண தத்த சாமராஜ் உடையாருக்கும் திரிஷிகா குமாரிக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் 400 ஆண்டுகால சாபத்துக்கு முடிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.