
பிக்பாஸ் தொடரை நடத்துபவரா எங்களை கேள்வி கேட்பது என்று கமல் குறித்து ஆவேசத்துடன் பதிலளித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
எம்.ஜி.ஆர்., குறித்து யார் சொந்தம் கொண்டாடினாலும், அதிமுக.,வினருக்கு கோபம் மூக்குக்கு மேல் வந்துவிடும். வேல் யாத்திரையில் எம்ஜிஆர்., படம் போட்டு பெயரை உச்சரித்ததற்காக கூட்டணிக் கட்சியான பாஜக.,வையே கடுமையாக விமர்சித்தனர் அதிமுக.,வினர். ஆன்மிகவாதியான எம்.ஜி.ஆர்.,க்கு மரியாதை செய்யும் விதமாக காவித் துண்டு போர்த்திய போது, அது அவமரியாதை என்று சீறினர் அதிமுக.,வினர்.
இப்படி எம்.ஜி.ஆர்.,க்கு தாங்களே சோல் ப்ராப்ரைட்டர்ஷிப் என்று செயல்படும் அதிமுக.,வினர், இப்போது எம்.ஜி.ஆர்., மடியில் தவந்த குழந்தை நான் என்று கமல் கூறும்போது பார்த்த்க் கொண்டு சும்மா இருப்பார்களா?! கமல்ஹாசனை அக்குவேறு ஆணிவேறாக பிய்த்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இப்போது லேட்டஸ்டாக சேர்ந்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
குடும்பங்கள் பார்க்க முடியாத வகையில் உள்ள பிக்பாஸ் தொடரை நடத்தி வரும் கமல்ஹாசனா எங்களைப் பார்த்து கேள்வி கேட்பது என்று கமல்ஹாசன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
அரியலூருக்கு வந்திருந்த எடப்பாடி பழனிசாமி, ரூ. 36.73 கோடி மதிப்பிலான 33 நிறைவுபெற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தும், புதிய 14 திட்டப் பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டினார். தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் நடந்து வரும் கொரோனா வைரஸ் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் பிரசாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், வயதான காலத்தில் ஓய்வு பெற்று 70 வயதில் அரசியலுக்கு வந்திருக்கிறார் கமல்ஹாசன். இந்த வயதில் அவர் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சியில் வேறு நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் குடும்பமும் கெடும். அதைப் பார்க்கும் குழந்தைகளும் கெடுவார்கள். அப்படிப்பட்டவர் அரசியலுக்கு வந்தால் என்னவாகும். அவர் போய் எங்களைக் கேள்வி கேட்பதா? என்று பதிலளித்தார்.
மேலும் அது தொடர்பில் அவர் முன் வைத்த கருத்துகள் மிகவும் சாதாரணமாகக் கடந்து போய்விடக் கூடிய கருத்துகள் அல்ல என்பது இன்றைய காரசார விவாதம் ஆகியிருக்கிறது.
“தொலைக்காட்சிகளில் விவசாயிகளுக்கான திட்டங்களைக் காட்டுங்கள், குழந்தைகளுக்கான திட்டங்களைக் காட்டுங்கள். நல்ல விஷயங்களைக் காட்டுங்கள். ஆனால் பிக்பாஸ் என்ற தனியார் நிகழ்ச்சி எப்படி நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.” என்று ஒரு பிடி பிடித்தார்.
எம்ஜிஆர்., குறித்துப் பேசுகிறார் கமல்ஹாசன். ஆனால் எம்ஜிஆர்., எவ்வளவு நல்ல கருத்துகளை தனது படங்கள் மூலம் வெளிப்படுத்தினார். எத்தனை நல்ல பாடல்களில் நடித்திருக்கிறார். அப்படியா செய்தார் கமல்ஹாசன்? அவர் நடத்தும் பிக்பாஸ் தொடரைப் பார்த்தாலே போதும்… அந்தக் குடும்பம் காலி” என்று ஆவேசத்துடன் கூறினார்.