
தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் தமிழக மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாயாகக் கொடுப்பதுதான் தமிழக அரசியல் என்று, ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் திமுக.,வினர் தொடங்கி வைத்த திருமங்கலம் ஃபார்முலா குறித்து, பா.ஜ.க மாநில துணை தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து உரையாற்றிய அவர், 2000 ரூபாயை நம்பி 5 ஆண்டு வாழ்க்கையை அடகு வைத்து விடாதீர்கள் என்று பேசினார்.
பா.ஜ.க வுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனில் தலைக்கு மேல் சீரியல் லைட் வைத்திருக்கும் தலைவர்கள், காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள்தான் அரசியல்வாதிகளாக வாய்ப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
அண்ணாமலையின் இந்தப் பேச்சு, தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நாளில் இருந்ததால், இது சர்ச்சை ஆக்கப் பட்டது. பொங்கல் பரிசு ரூ.2500 வழங்குவதைத்தான் அண்ணாமலை விமர்சித்தார் என்று ஆளும் கூட்டணிக் கட்சியான அதிமுக.,வுடன் முடிச்சு போட்டு சமூக ஊடகங்களிலும் சன் டிவி.,மற்றும் திமுக.,வின் ஊடகங்களிலும் பரப்பப் பட்டது.
இந்நிலையில் தனது பேச்சு சர்ச்சை ஆவதை அடுத்து, ஓட்டுக்கு பணம் கொடுப்பதையே தான் குறிப்பிட்டதாகவும், தமிழக அரசின் பொங்கல் பரிசு அறிவிப்பை வரவேற்பதாகவும் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டார்.
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு குறித்து ஊடகங்கள் என்னை மேற்கோள் காட்டுவது பற்றி ஆச்சரியப்படும் நண்பர்களே, அசல் காட்சியை இங்கே பாருங்கள். பத்திரிகை சந்திப்புகள் அனைத்திலும் நானே அவர்களின் இலக்கு. 200 ரூபாய் கூலிகளையும் , சில்லறை அடிமைகளையும் கண்டு அசர வேண்டாம். நாம் வெல்வது உறுதி
-என்று அண்ணாமலை பதிவிட்டிருந்த போதும், திமுக.,வின் அரசியல் சார்பு ஊடகங்கள் அண்ணாமலையைக் குறிவைத்து இயங்கின. இதன் ஒரு பகுதியாக, இதே விவகாரத்தை அதிமுக., அமைச்சர்களிடம் கேள்வியாகக் கேட்டு, அவர்களிடம் பதில் பெற்று தூபம் போடும் வேலைகளில் திமுக., ஊடகவியலாளர்கள் களம் இறங்கினர்.
அவர்களின் வலையில் சிக்கினார் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம். விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில்தான் பொங்கல் பணம் ரூ.2,500 குடும்ப அட்டைக்கு வழங்கப் படுவது என்று பாஜக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாரே என்று திமுக., ஊடகத்தினர் கேட்டபோது, மத்திய பாஜக அரசு ரூ.6 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு எந்த பணத்தில் இருந்து வழங்குகிறார்கள்? என பதில் கேள்வி எழுப்பினார் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்.
இந்நிலையில் கே.அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். அறிக்கை போன்று அவர் வெளியிட்ட அந்த விளக்கம்…
கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் ஒரு கட்சியை சார்ந்த ஊடகங்கள் நான் பேசிய அனைத்து விஷயங்களையும் திரித்து சமூக தளத்தில் நமது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த சத்தியத்திற்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை ஜனநாயகத்தில் ஊடகத்தின் முக்கியமான வேலை என்று ஒன்று இருக்கிறது. அது மக்களுக்கு உண்மையை உள்ளவாறு எடுத்துரைத்து சரியான நேரத்தில் அதை கொண்டு சேர்ப்பது. தமிழக ஊடகங்கள் இதுவரை அதை சரியாக செய்து வந்தன இப்பொழுதுதான் அவர்களில் சிலர் சில காலமாக இப்படி தர்மத்திற்கு எதிராக வேலை செய்து வருகிறார்கள்.
அதனால் நாளை முதல் நான் கலந்து கொள்ளும் அனைத்து ஊடக நிகழ்ச்சிகளும் என்னுடைய முகநூல் டுவிட்டர் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பில் வரும் நம்முடைய நண்பர்களும் உண்மையை மட்டுமே விரும்பும் தமிழர்கள் அனைவரும் பொது மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் நான் தரும் பேட்டிகளை என்னுடைய முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொள்ளலாம்
சீப்பை ஒளித்து விட்டு கல்யாணத்தை நிறுத்த கயவர்கள் சிலர் முயற்சிப்பதை போல வார்த்தைகளை தெரிவித்து கூட்டணி குழப்பத்தை ஏற்படுத்த முயல்பவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் சத்தியம் வெல்லும் என்று கே.அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்
திமுக., ஊடகவியலாளர்கள் முன்னர் தேமுதிக., தலைவர் விஜயகாந்த்தை துரத்தித் துரத்தி கேள்வி என்ற பெயரில் அவரது பொறுமையை சோதித்து அதனால் அவரது கோபத்தைத் தூண்டிவிட்டு, அதை வைத்தே அவரை அசிங்கப்படுத்தியதும் நாடறிந்த ஒன்று! இப்போது அதே உத்தியை பாஜக., துணைத் தலைவர் கே.அண்ணாமலை மீது திமுக., ஊடகவியலாளர்கள் மேற்கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன!