
எடப்பாடி காலில் விழுந்த விஜய் என்ற ஹேஷ்டேக் இன்று டிவிட்டர் சமூகத் தளத்தில் ட்ரெண்ட் ஆனது.
நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை பொங்கலுக்கு திரையிட ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. இந்நிலையில் திரை அரங்குகளில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி கோரி முதல்வரை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் விஜய். இந்த திடீர் சந்திப்புதான் இப்போது டிவிட்டர் சமூகத் தளத்தில் பரபரப்பான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்பட பலர் நடிக்க, ‘மாஸ்டர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையமைக்க விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
இந்தப் படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா பிரச்னை காரணத்தால் திரையிடப் படுவது தள்ளிப்போனது. கொரோனா காலகட்டத்தில் உருவான வேறு சில படங்கள், ஆன்லைன் வழியே ஓடிடி தளத்தில் வெளியாகின. இது போல் மாஸ்டர் படமும் ஓடிடி.,யில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், மாஸ்டர் படம் தியேட்டரில்தான் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இதனிடையே, கொரோனா தாக்கம் சற்று குறைந்ததால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டன. அப்போது, தீபாவளியை ஒட்டி தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்டன. ஆனால் ரசிகர்கள் தியேட்டர்களுக்குச் செல்ல ஆர்வம் காட்ட வில்லை. இதனால் முன்னணி நடிகர்களின் படங்கள்கூட தியேட்டர்களில் வெளியாகவில்லை.
இந்நிலையில் அரசின் கட்டுப்பாடுகளின்படி 50 சத இருக்கைகளுடன் படம் வெளியிட்டால் நஷ்டம் ஏற்படும் என்றும், 100 சத இருக்கைகளுடன் படம் வெளியானால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும் என்றும் திரையரங்கு உரிமயாளர்கள் கூறினர். இதை அடுத்து இந்தக் கோரிக்கையுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார் ‘மாஸ்டர்’ நாயகன் விஜய்.
இதை அடுத்து, சமூகவலைதளங்களில் பல விதமான கருத்துக்கள் பரபரப்பாகப் பகிரப்பட்டன.
#எடப்பாடிகாலில்விழுந்தவிஜய் என்ற ஹேஷ்டேக் 50 ஆயிரம் ட்வீட் என ட்ரெண்ட் ஆனது. #MasterPongal #MasterVIJAYEnteringNorth, #MasterUpdate #SaviourOfKollywoodVIJAY என்ற ஹேஷ்டாக்குகளும் பகிரப் பட்டன!