
- ஜகா வாங்கிய ரஜினி!
- அரசியல் கட்சில்லாம் சரிப்பட்டு வராதாம்!
- தொண்டர்கள் பெருத்த ஏமாற்றம்!
அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று கைவிரித்தார் நடிகர் ரஜினிகாந்த். தன்னை நம்பி இருக்கும் தொண்டர்களை தான் ஏமாற்ற விரும்பவில்லை என்று கூறி தனது உடல் நிலையைக் காரணம் காட்டி தனது அரசியல் கட்சி தொடங்கும் முடிவை நிறுத்தி வைத்தார் ரஜினி!
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் கட்சி தொடங்கவில்லை, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டிருப்பதாவது….
நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக அரசியலுக்கு வருவதாகவும், கட்சி தொடக்கம், கொடி உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்து வரும் டிச.,31ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் அதிகார பூர்வமாக அறிவித்தார். இதனிடையே நடிகர் ரஜினிகாந்தின் கட்சி பதிவு வேலைகள் தேர்தல் ஆணையத்தில் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அவரது கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி என்றும் சமூக தளங்களில் உலா வந்தது
அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்து தனது முடிவு எதுவானாலும் அதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதாகவும் மற்ற ஊடகங்களில் வரும் எந்த தகவலையும் நம்பவேண்டாம் என்றும் ரஜினிகாந்த் தனது தொண்டர்களுக்கு அறிவித்திருந்தார் இந்நிலையில் இன்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனது அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டார் அதன்படி தான் அதிகாரபூர்வமாக கட்சி அரசியலுக்கு வரவில்லை என்றும் தன்னை நம்பியிருக்கும் தொண்டர்களை ஏமாற்ற தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்
முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரஜினியிடம், கட்டாயம் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்நிலையில், தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என தனது கட்சி கொடி கொள்கைகள் குறித்து அறிவிப்பதாகச் சொன்ன டிச.31க்கு இரு நாட்கள் முன்பு, இன்று (டிச.,29) அறிவித்துள்ளார்.
இப்போது இல்லை என்றால் இனி எப்போதுமே இல்லை என்ற கோஷத்துடன் அரசியல் மாற்றத்திற்கு தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்த நடிகர் ரஜினிகாந்த், 2020ஆம் ஆண்டு பலரை கொன்று விட்டது போல 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரஜினி அரசியலுக்கு வருவார் தங்களை எல்லாம் மீட்டெடுத்து நல்ல வழியை காட்டுவார் என்று நம்பி இருந்த தமிழக மக்கள் பலரின் நம்பிக்கையும் கூட இந்த 2020 ஆம் ஆண்டு கொன்றுவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
ரஜினி தனது டிவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பு:
என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம். ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரியவந்தது. உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கும் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தார்.
எனக்கு கொரோனா நெகடிவ் வந்தது. ஆனால் எனக்கு ரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு ரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது. அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது.
என் உடல்நிலையைக் கருதி படத்தின் தயாரிப்பாளர், மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல் நிலை. இதை ஆண்டவன் எனக்குக் கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன்.
நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது.
இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள். நான் மக்களை சந்தித்து கூட்டங்களைக் கூட்டி, பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன்.
நான் அரசியலுக்கு வருவேன் என சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நான்கு பேர் நான்கு விதமாக என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்.
மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்கள் உடல் நலத்தை கவனியுங்கள் அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்புக்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்பாதித்த மரியாதைக்குரிய அர்ஜுன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்
தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன்
நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை
உண்மையையும் வெளிப்படைத் தன்மையையும் விரும்பும் என் நலத்தில் அக்கறை யான என் மேல் அன்பு கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களும் தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
என்று நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் அவருடன் கூட்டணி வைத்து தேர்தல் அரசியலில் களம் இறங்குவார் என்று மு க அழகிரி குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது திமுகவுக்கு மாற்றாக ஆன்மீக அரசியல் பேசிவந்த ரஜினியும் மு க அழகிரியும் திமுகவுக்கு பெரிய நெருக்கடியை கொடுப்பார்கள் என்றும் கூறப்பட்டது
திமுகவுக்கு அரசியல் ஆலோசகராக செயல்படும் பிரசாந்த் கிஷோர் தனது கருத்தாக ரஜினியின் அரசியல் பிரவேசம் திமுகவுக்கு பெரிய நெருக்கடி என்று குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியானது இதனால் ரஜினி அரசியல் கட்சி தொடங்க கூடாது என்பதில் திமுக உறுதியாக இருந்தது
படப்பிடிப்பு என்பதை காரணம் காட்டி ஹைதராபாத்துக்கு சன் பிக்சர்ஸ் அழைத்துச் சென்று அங்கே என்ன நடந்தது என்ன அரசியல் திரைமறைவு வேலைகள் நடந்தன என்று பல்வேறு யூகங்கள் இப்போது சமூக தளங்களில் உலா வருகின்றன
காரணம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை…. தமிழகத்தில் சிஸ்டம் கெட்டு கிடக்கு… மாற்றுவோம் எல்லாவற்றையும் மாற்றுவோம் என்று அரசியல் முழக்கமிட்ட ரஜினி தனது உடல்நிலை சரியாக வரவில்லை என்பதை காரணம்காட்டி தற்போது ஜகா வாங்கியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்
ரஜினியின் இந்த முடிவால் ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி யாத்திரை தொடங்கி பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டுவரும் பாஜகவுக்கு சற்று நிம்மதி. அதேபோல் தனது ஓட்டு வங்கியில் பெருமளவு இழப்பை சந்திக்க நேரிடும் தங்களது வெற்றி பாதிக்கப்படும் என்று கணித்து களமிறங்கிய திமுக ரஜினியின் இந்த முடிவால் ஓரளவு வெற்றி பெற்றிருப்பதாகவே கருதப்படுகிறது