இறுதி நாள் வரை அரசியலில் மீண்டும் அடி எடுத்து வைக்க மாட்டேன்: தமிழருவி மணியன்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
tamilaruvi
tamilaruvi

அரசியல் எதிர்பார்ப்புகளைக் கிளப்பி, அரசியல் பேசி, அரசியல் கட்சி தொடங்காமலேயே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கட்சி அரசியலுக்குள் வராமலேயே இப்போது அரசியல் இனி இல்லை என நடிகர் ரஜினி காந்த் அறிவித்து விட்ட நிலையில், அவருடன் முக்கியப் பொறுப்புகளில் பயணித்த மூத்த அரசியல் கள நிலைச் செயற்பாட்டாளர் தமிழருவி மணியன், தான் இந்த உலகில் இருக்கும் வரை இனி அரசியலுக்கு வரப் போவதில்லை என்று முடிவு எடுத்து உருக்கமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

தமிழருவி மணியன் வெளியிட்ட அறிக்கை…

என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வை தொடங்கினேன். 50 ஆண்டுகளுக்கும் மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது.

இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கை பண்புகளும் பாழடைந்து விட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாக சரிந்துவிட்டது.

சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும் உண்மைக்கும் ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை. நான் ஒருபோதும் அறத்திற்கு புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை.

இன்றும் என் வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில் தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும். மீண்டும் காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற என் கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம்.

இதற்காக மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என் மீது வீசப் படுவதால் என் மனைவி மக்களின் மனங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டன.

மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்தில் இருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது.

எந்தக் கைமாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோத்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடைபெற்றுக் கொள்கிறேன். என் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடி எடுத்து வைக்க மாட்டேன்.

திமுகவில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன் வரமாட்டேன்.

  • தமிழருவி மணியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.