
“சாதித்த தீக்ஷிதர்கள், சிரித்த நடராஜர், ஆனந்தத்தில் அடியார்கள்”
– சிவதீபன் –
தில்லை கோயில் தோன்றியதில் இருந்து நடைபெற்ற தரிசனத் திருவிழாக்கள் எல்லாவற்றையும் விட அடியேன் அறிந்தவரை, இந்த “2020 மார்கழி திருவாதிரை தரிசனம் மிக முக்கியமானதும் சிறப்பு வாய்ந்ததுமாகவும் உதாரணமாகவும் நிகழ்ந்துள்ளது”
ஊரெல்லாம் கொரோனா பூச்சாண்டியை காட்டி காட்டி இந்து கோயில் விழாக்கள் பண்டிகைகளுக்கு மட்டும் முட்டுகட்டைகளை போட்டுவந்த அதிகார சக்திகளுக்கு இறைவன் கொடுத்த பாடமாகவும் இந்த திருவிழா நிறைவேறியுள்ளது!!
“உங்கள் அதிகாரமும் அதன் பலமும் தற்காலிகமானது அதற்கே இத்தனை வல்லமை காட்டுகிறீர்களே!! நான்தான் இந்த பிரபஞ்சத்தையே காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடுகிறேன் எனில் எனக்கு எத்தனை வல்லமை இருக்கும் என்று ஸ்ரீசபாநாயகர் காட்டிய திருவிழா இது!!”
எட்டாந் திருநாள் வரை இயல்பாக சென்ற நிலையில் ஒன்பதாம் திருநாளுக்கும் பத்தாம் திருநாளுக்கும் மட்டும் பாஸ்முறை அனுமதி அவசியம், உள்ளூர் மாவட்ட காரர்களே அனுமதிக்கப் படுவார்கள், பேரிகாட் போட்டு ரதவீதியை மறைப்போம்!!, என்றெல்லாம் போட்ட தடை உத்தரவுகளால் அன்பர்கள் நெஞ்சம் கலங்கியது!!
நீதிமன்ற வழக்காடலில் “வழிபாட்டு உரிமைகளிலும் தனி மனித உரிமைகளிலும் மத்திய அரசாங்கமே தளர்வுகள் அளித்த நிலையில் நீதிமன்றமும் தலையிட முடியாது, அனைத்து மாவட்டத்து பக்தர்களும் தரிசிக்கலாம் என்று நீதியரசர்களே பச்சை கொடி காட்டிய போதும் சிவப்பு கொடி காட்டியது மாவட்ட நிர்வாகம்”
பச்சையான நீதிமன்ற அவமதிப்பு என்று தெரிந்தும் அதனை பொருட்படுத்தாமல் தன் பிடியில் உடும்பாய் நின்றது மாவட்ட நிர்வாகம், விளைவு!?
“எட்டாந் திருநாள் இரவு அடியார்களும் பக்தர்களும் சிதம்பரத்து வாசிகளும் தேரடியில் குழுமி தர்ணாவில் ஈடுபட்டனர், தீக்ஷிதர்களும் அவர்களது இல்லத்தரசிகளும் வீதியில் வந்து அமர்ந்து உரிமை குரல் கொடுத்தார்கள்!!”
ஒற்றை ஒற்றை குரல்களாக தனித்தனியே ஒலித்த போது கண்டு கொள்ளாத நிர்வாகம் “ஓராயிரமாய் ஓங்கி ஒற்றுமையாய் ஒலித்த போது ஓடிவந்து நின்றது!!”
நள்ளிரவு வரை நீடித்த பேச்சு வார்த்தையில் “பாஸ்முறை இல்லை அனைவரும் தரிசிக்கலாம்!!” என்று அதிகாரிகள் எழுதி தந்து சென்றனர் கூட்டம் கலைந்தது ஆனால் அதனை உண்மையாக நம்பலாமா!? அதிகாரிகள் மேலிடங்களால ஆட்டி வைக்கப்படும் பொம்மைகள் தானே “நேத்துபேச்சு இராவோட போச்சு” என்றபடி காலையில் வந்து பாஸ் இருந்தால் தேரிழுக்கலாம் என்று கூறினால் என்ன செய்வது!? என்று தீக்ஷிதர்கள் கூடிப்பேசி ஒரு முடிவு எடுத்தனர்
காலை 5 மணிக்குள் பாஸ்முறை இரத்து அனைத்து பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் தேரிழுக்கலாம் என்று அறிவிப்பு வந்தால் ஒழிய, சுவாமி தேருக்கு வரமாட்டார் நேரே இராஜசபைக்கு போவார் என்று உறுதியேற்றிருந்தனர் அவர்கள்!!
“சென்ற ஆனித் திருமஞ்சனத்தில் நடந்தது போல கண்டவரும் வந்து கதவடைப்பார், அதனை ஒருமுறை விட்டதை போல மறுமுறை விடமுடியாது என்று உருமி பொருமினர் தீக்ஷிதர்கள்”,
“ஏன் சுவாமி தேருக்கு வரவில்லை என்று நீதிமன்றம் கேட்கும் பொழுது அதிகாரிகள் பதில் கூறவேண்டிய லாவகமான சூழ்நிலையை தீக்ஷிதர்கள் ஏற்படுத்த முயன்றனர்!!”
காலை யாத்ராதானம் 05-5.30 என்ற படி சுவாமி சித்சபையில் இருந்து கனகசபைக்கு இறங்கிவிட்டார், சுவாமியின் யாத்ராதானத்திற்கு முன்பு கனகசபை கதவிடுக்குகள் வழியாக உள்ளே பெரிய தீப்பந்தம் எரிவதை காணமுடியும், கீழே இறங்கிய சுவாமிக்கு நிறைவாக சில அலங்கரங்கள் செய்வார்கள் என்பதற்கு இது சாட்சி, வழக்கமாக ஒருமணி நேரத்திற்குள் இது நிறைவாகி சுவாமி வெளியே வருவது வழக்கம்!!
அதனால், “சுவாமி வரப்போறார்!! சுவாமி வரப்போறார்!! என்று ஆயிரமாயிரம் கண்கள் பரிதவித்து காத்து கிடந்தன, தில்லைக்கே உரிய விசேசே தீவிட்டிகளும் வந்தடைந்தன, இதோ!!இதோ!! சபை திறக்கப் போகிறது என்று காத்திருந்த கண்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது”
வழக்கமாக அரைமணிநேரத்திற்குள் சுவாமி புறப்படுவாரே!? ஏன்!! என்னாச்சு!! என்று அன்பர்கள் தவிக்க தொடங்கியிருந்தனர், சபையில் இருந்து இறங்கும் இடங்களில் தீக்ஷிதர்கள் சிலர் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தனர், பல தீக்ஷிதர்களின் கண்கள் அனுக்கன் திருவாயில் வழியாக தேவசபையை நோக்கி பதற்றமாக கவனித்தன
கூடியிருந்தோர் என்ன நடக்கிறது!? ஏன் இன்னும் சாமி வரல என்று குழம்பி தவித்து வியர்வை கசகசப்பில் வாடினர், ஒருவாறாக என்னதான் நடக்கிறது என்று செய்திகள் கசிந்தன
“பாஸ் முறை இல்லை, சுவாமி தேருக்கு வந்தபிறகு மக்கள் அனைவரும் ஒன்றுகூடிதான் தேரிழுப்பார்கள் அதற்கு உத்திரவாதம் தரனும், அனைவரும் சாமி தரிசனம் செய்ய எந்தவித தடையும் போலீசோ நிர்வாகமோ செய்யவேகூடாது!! இதனை அதிகாரிகள் ஏற்றால் சுவாமி வருவார் இல்லை என்றால் நீங்கள் ஒத்து கொள்ளாத வரை சுவாமி வரப்போவதில்லை!! என்று விடாப்பிடியாகவும் ஒற்றுமையாகவும் தீக்ஷிதர்கள் நின்றனர் என்ற செய்தி வந்தது”
ஆஹா!! இதற்காக இன்னும் எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் பரவாயில்லை என்று அன்பர்களும் கூட்டத்தில் கசங்கி காத்திருந்தனர்,
“வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு” என்ற பழமொழிக்கு ஏற்ப அதிகாரிகளின் வல்லமையும் அவர்களை இயக்கும் வல்லமையும் இந்த “நடராஜ பக்தி என்ற வல்லமைக்கு முன்பு செல்லாமல் போனது!! அனைவரும் தரிசிக்கலாம் என்று அதிகாரிகள் வேறுவழியின்றி ஒத்து கொண்டனர் அன்பர்கள் “ஹோ!!” என்று பேரரவம் செய்து ஆர்ப்பரித்தனர் தீக்ஷிதர்கள் பலர் கண்ணீர் பெருக்கி உணர்வு வயப் பட்டார்கள்!!”
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!! என்றபடி கதவுகள் திறந்தன “மந்திர புன்னகையை அளவிலாமல் சிந்தியபடியே ஸ்ரீஆனந்த தாண்டவ நடராஜராஜமுர்த்தியு் அவரது தர்மபத்தினியும் வெளியே வந்தார்கள்!!”
கண்ணீர் மழை பெருக்கெடுத்தது அந்த இன்பத்தை என்னால்தான் கடத்திவிட முடியுமா!? என்று தெரியவில்லை, சிலவற்றை உணர வார்த்தைகளும் தேவைஇல்லை
சுவாமி வழக்கத்தை விட அதிகமாகவே சிரித்து கொண்டிருந்தார், “அவருக்கு இது ஒரு போதை!!, இப்படித்தான் நடக்கும் தேரில் அன்பர்கள் இழுக்கத்தான் வலம் வரப்போகிறார் என்று அவருக்கு தெரியாதா!? தெரியும்!! ஆனாலும் யார் யார் அழுகிறார்!? யார்யார் தொழுகிறார்!? யார்யார் ஏங்கி பரிதவிக்கிறார்!? என்று சூழ்நிலைகளை உண்டாக்கி இயங்கவைத்து பெருகும் அன்பை சுவைப்பது அவருக்கு வாடிக்கை!!”
அதனால் சிரிப்பு இந்த முறை அதிகமோ அதிகம்!! “கூத்தும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ!?” என்பது போல இருந்தது அந்த சிரிப்பு!!
அவரது நாடகத்திற்கு தாங்கள் ஒரு கருவி என்று உணராத அதிகாரிகள் மெலிதாக இருள் கவிந்த முகத்துடன் வலம் வந்தனர், வெளியில் பேரிகாடுகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர்
தில்லைவாழ் அந்தணர்கள் முகத்திலும் அன்பர்கள் அடியார்கள் முகத்திலும் ஒற்றுமையின் பலமும் பக்தியின் பலமும் ஆனந்தமாக வெளிப்பட்டது!!
பிரகார வலம் வரும்போது சிதம்பரத்து ஆண்களும் பெண்களும், அம்மா தாயே!! சிவகாமீ ஜெகதம்பிகே!! என்று கண்ணீர் விட்டு கையுர்த்தி இறைஞ்சி அழுதனர் அன்னையும் அருட்பிரகாத்தை வாரி வழங்கியபடி வந்த மணாளனின் கரம் கோர்த்து ஆட்டம் போட்டாள்!!
எத்தனை திருவிழா வந்தாலும் இந்த திருவிழா அனுபவம் என்பது தனிரகம்தான், பெருமைகள் அனைத்தும் பக்தர்களுக்காக நின்ற தீக்ஷிதர்களையும் தீக்ஷிதர்களுக்காக நின்ற பக்தர்களையும் சேரும்!!
“என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்றுளார் அடியார் அவர் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம்!!”
திருச்சிற்றம்பலம்