spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்திருப்பாவைதிருப்பாவை - 17: அம்பரமே தண்ணீரே (பாடலும் விளக்கமும்)

திருப்பாவை – 17: அம்பரமே தண்ணீரே (பாடலும் விளக்கமும்)

- Advertisement -
thiruppavai pasuram 17
andal vaibhavam 2

ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை பாசுரம் 17

விளக்கவுரை: வேதா டி.ஸ்ரீதரன்

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்(கு) எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்கா(து) எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய். (17)

பொருள்

குடிமக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் எங்கள் தலைவனே, நந்தகோபனே, எழுந்திருப்பாயாக! எங்கள் குலக்கொழுந்தே, குலவிளக்கே, யசோதையே, உறக்கம் கலைவாயாக! இந்தப் படைப்பு முழுவதும் விரவிப் பரவி நிற்கும் பரம்பொருளே, துயில் எழுவாய். பலராமா, உன் பொற்பதங்களைத் தொழுது வணங்குகிறோம், நீயும், உன் தம்பியும் உறக்கம் நீங்கி எழுவீர்களாக!

அருஞ்சொற்பொருள்

அம்பரம் – ஆகாயம், ஆடை

தண்ணீர் – தண்ணீர், நீர்நிலைகள், மழை

சோறு – உணவு, அன்னதானம்

அறம் செய்யும் – தானம் செய்யும்; தர்ம பரிபாலனம் செய்யும்

அனார் – ஒத்த, போன்ற

கொம்பனார் – பூங்கொம்பு போன்ற (எங்களுக்கு)

கொழுந்து – செடியின் மென்மையான தளிர்ப் பகுதி

குலவிளக்கு – ஆயர்குலத்தை மேன்மைப் படுத்துவதற்காக வந்தவளே

அறிவுறாய் – துயில் எழுவாயாக

ஊடு அறுத்து – இடைவெளி இல்லாமல் செய்து (எங்கும் நிறைந்து)

உம்பர் கோமான் – அமரர் தலைவன்

பலதேவன் – பலராமன்

உம்பி – பலராமனின் தம்பியாகிய கிருஷ்ணன்

உறங்கேல் – விழித்தெழுவீர்களாக

கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே –

பெண்ணாய்ப் பிறந்தவர்க்கெல்லாம் தலையாய்ப் பிறந்தவளே (நாரீணாம் உத்தமா வதூ) என்பது உரையாசிரியர்கள் தரும் விளக்கம்.

மொழி அழகு

அம்பரம் ஊடறுத்து –

வாமன அவதாரத்தின்போது பகவான் முதல் அடியால் மண்ணை அளந்தான். எனவே, அவன் ஓங்கி உலகளந்த உத்தமன். உத்தமன் என்றால் ‘மேம்பட்ட அனைத்தையும் விட மேம்பட்டவன்’ என்று பொருள். பிரம்மாண்டமான இந்த சராசரத்தை ஒரே அடியால் அளக்குமளவு உத்தமமான (பிரம்மாண்டத்தையும் விட பிரம்மாண்டமான) வடிவம் தாங்கினானாம் பெருமான்.

இரண்டாம் அடியால் ஆகாசத்தை அளந்தான். அவன் திருவடி, ஆகாசத்தை இடைவெளி இல்லாமல் (ஊடு – இடையே; அறுத்து – இல்லாமல் செய்து) மொத்தமாக அளந்ததாம்.

***

கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே அறிவுறாய் –

செடியின் அடிப்பாகத்துக்கு ஒரு கேடு வந்தாலும் கொழுந்து வாட்டமடையும். அதேபோல, ஆயர்பாடியில் யாருக்கு எந்தக் குறை வந்தாலும் யசோதையின் உள்ளம் தாங்காதாம்.

அறிவுறாய் என்ற சொல்லுக்கு ஆழ்ந்த உறக்க நிலையில் இருந்து விழிப்பு நிலைக்கு வா (அதாவது, உறக்கம் கலைந்து விழித்தெழுவாயாக) என்று பொருள்.

அதேநேரத்தில், தாங்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தொண்டு செய்யும் ஏக்கத்தில் வந்திருக்கிறோம் என்பதை அவள் அறிய வேண்டும் என்பதற்காகவும் அறிவுறாய் (அறிவாயாக) என்கின்றனர் கோபியர்.

ஆன்மிகம், தத்துவம்

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் –

நந்தகோபனின் புகழைப் பாடுகிறாள் ஆண்டாள். இந்தியப் பண்பாட்டில் புகழ் அல்லது கீர்த்தி என்பது முக்கியமான அம்சம்.

புகழ் என்பது என்ன?

‘நல்லது, நல்லது’ என்று மற்றவர்களால் பாராட்டப்படுவதற்குக் காரணமான பண்பட்ட செயல்களால் விளைவதே புகழ்.

மற்றவர்கள் யார்?

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு. எனவே, மேம்பட்ட, பண்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களால் பாராட்டப்படும் செயல்களே புகழுக்குக் காரணம்.

மேம்பட்ட வாழ்க்கை என்றால் என்ன?

தர்மப்படி வாழ்வதே மேம்பட்ட வாழ்க்கை. அவ்விதம் வாழ்பவர்களே மேலோர்.

தர்மம் என்றால் என்ன?

இந்தப் படைப்பு முழுவதையும் தாங்கி நிற்பது எதுவோ, அதுவே தர்மம். படைப்பு முழுவதும் தர்மத்தின் நியதிக்குக் கட்டுப்பட்டே இயங்குகிறது. அனைத்து ஜடப் பொருட்களும், அனைத்து ஜீவன்களும் இயற்கையாகவே தர்மத்தின் நியதிக்கு உட்பட்டுச் செயல்படுகின்றன.

மனிதனும் தர்மத்தின் நியதிக்கு உட்பட்டவன்தான். ஆயினும், இவனுக்குப் பகுத்து அறியும் அறிவு உண்டு. ‘இந்தப் படைப்பு என்பது என்ன? இது எதனால் இயங்குகிறது? இதற்குக் காரணமானவன் யார்? இந்த வாழ்க்கையின் நோக்கம் என்ன?’ என்பதைத் தனது அறிவின் மூலம் அறிந்து, அதற்கேற்றபடி தனது தனிப்பட்ட வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும், சமுதாய வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள வேண்டியதே இவனது தர்மம்.

இறைவனின் படைப்பு என்கிற வேடிக்கை விநோதத்துக்குச் சிகரம் வைத்தாற்போன்று திகழ்வது மனித ஜீவன் – அதிலும் குறிப்பாக இவனது அறிவு. இந்த அறிவின் மூலம், ‘படைத்தவனை அறிவதே தனது வாழ்வின் இலக்கு’ என்பதை மனிதன் அறிய வேண்டும். அது அவனைக் கடைத்தேற்றும். இதுதான் அறிவின் பிரயோஜனம்.

அதேநேரத்தில், இந்த அறிவின் பயனாக மனிதனுக்குச் சுய இச்சையும் ஏற்படுகிறது. இது அறிவுத் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. அறிவின் மூலம் படைத்தவனை அறிந்து அவனை அடைவதற்கேற்ற விதத்தில் – அதாவது, தனது இயல்பான தர்மத்தின்படி – வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டிய மனிதன், இச்சையின் காரணமாக, வாழ்வின் நோக்கத்துக்குப் புறம்பான வழிகளில் – தர்ம விரோதமான வழிகளில் – இறங்குகிறான். நாளாவட்டத்தில், தனது தர்மம் என்ன என்பதே தெரியாத நிலையை அடைகிறான். இதனால், ஒட்டுமொத்த சமுதாயத்திலும் தர்மம் பற்றிய குழப்பம் மேலோங்குகிறது. இதன் விளைவாக, சமுதாயத்தின் இயக்கம் சீர்குலைகிறது.

தனக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இந்தப் படைப்பைத் தோன்றச் செய்த பரந்தாமன் என்கிற மாயாவி, வெறும் மாயக்கூத்தன் மட்டுமல்ல, மகா கருணை மிக்கவனும்தான். எனவே, மனிதர்களுக்கு அவர்களது இயற்கையான தர்மத்தை நினைவூட்டும் பொருட்டுத் தனது பிரதிநிதிகளாக ரிஷிகள் பரம்பரையை ஏற்படுத்தினான். மனிதன் தர்மத்தின் அடிப்படையில் வாழ்வதற்கான வழிவகைகளை இவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள். இவையே சாஸ்திரங்கள் எனப்படுகின்றன. சாஸ்திரங்கள் பற்றிய அறிவு வழிவழி பரம்பரையாக ஒவ்வொரு தனிமனிதனையும் சென்றடையும் விதத்தில் கல்வி முறைகளையும் இவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள்.

ரிஷிகள் ஏற்படுத்திய இந்தப் பாரம்பரியத்தில் தர்மம் என்பது சாஸ்திர அறிவைப் பெறுவதும் அதன்படி வாழ முயல்வதும்தான்.

ஒருவன் சாஸ்திரப்படி வாழ்கிறானா இல்லையா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

அதை அளவிடுவதற்கான அளவுகோல்தான் கீர்த்தி அல்லது புகழ். சாஸ்திரப்படி வாழ்பவனை மேலோர் பாராட்டுவர். இதுவே கீர்த்தி. ஒரு மனிதன் மேலோரால் மதிக்கப்படுகிறான் என்றால் அவன் முறையாக வாழ்கிறான் என்பது பொருள்.

மனித மனம் விநோதமானது. அது மனிதனைப் புலனின்பங்களில் நாட்டமுறச் செய்கிறது. அதேநேரத்தில் புகழுக்கும் ஆசைப்படச் செய்கிறது. ஒவ்வொருவனும் புகழுடன் வாழவே விரும்புகிறான். இந்தப் புகழ் என்பது அவனுக்கு தர்ம நாட்டத்தைத் தருகிறது.

இதனால்தான் பெரியவர்கள் நீண்ட ஆயுள் (சிரஞ்சீவித்துவம்), செழுமையான வாழ்க்கை (சௌபாக்கியத்துவம்), புகழ் (யசஸ்) முதலியவற்றைப் பெற்று வாழுமாறு நம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.

இங்கே ஆண்டாள் நந்தகோபனின் கீர்த்தியைப் பாடுகிறாள்.

தர்மத்தைக் கடைப்பிடிப்பதும் காத்து நிற்பதும் ஒவ்வொருவரின் கடமை என்றாலும் அது அரசனுக்கு விசேஷமான கடமையாகும். குடிமக்கள் அனைவரையும் கருணையுடன் பரிபாலிப்பதே அரச கடமை. உலகம் முழுவதும் மழை பொழிவது மேகத்தின் இயல்பாக இருப்பதைப் போலவே, குடிகள் அனைவரின் மீதும் கருணை பொழிந்து அவர்களைப் போஷிப்பது அரசனின் இயல்பு. இந்தக் கருணைக்குக் காரணம் கிடையாது. இது அ-வ்யாஜ கருணா (காரணம் ஏதும் இல்லாத கருணை) எனப்படும்.

தர்ம வழி நிற்கும் நல்லோரைக் காப்பது அவன் கடமை. அறச் செயல்களை ஊக்குவிப்பதன் மூலமும், அறவழி நிற்பவர்களைப் போற்றுவதன் மூலமும் சமுதாயத்தில் தர்மத்தை நிலைநாட்டுவது அவன் தர்மம். இதற்கு அடிப்படையும் அவனது கருணையே. இது அறக்கருணை எனப்படுகிறது.

தர்ம வழிகளுக்குப் புறம்பே செல்லும் தீயோரைத் தண்டித்து நல்வழிப்படுத்துவதும், இயலாத பட்சத்தில் தீமையை அடியோடு அழித்தொழிப்பதும் அவனது கடமையே. இது நல்லோர்மீது காட்டப்படும் கருணையால் விளைவது மட்டுமல்ல. தீயோரை மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறையால் ஏற்படுவதும்தான். இதில் தண்டனையும் போர்களும் உள்ளடக்கம். எனவே, இது ஹிம்சை வழி. இதற்கு அடிப்படையாக அமைவதும் அவனது கருணையே. இது மறக்கருணை எனப்படும்.

அரசன் என்பவன் ஏதோ அரண்மனைக்குள் உட்கார்ந்து கொண்டு, ”மந்திரியே, மாதம் மும்மாரி பொழிகிறதா?” என்று ஜம்பமாக விசாரணை செய்பவன் அல்ல. அவன் சமுதாயத்தின் ஒவ்வொரு மட்டத்தில் இருக்கும் ஜனங்களையும் சென்று பார்த்து அவர்களின் அற வாழ்க்கைக்கான தேவைகளையும், அவர்களுக்கு உள்ள குறைகளையும் விசாரித்துத் தெரிந்து கொண்டு உரிய குறைதீர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது, தனது ஆளுகைக்குக் கட்டுப்பட்டு இருக்கும் ஜன சமுதாயத்தின் மட்டத்துக்கு இறங்கிச் சென்று அவர்கள் குறைகளைத் தீர்த்து வைத்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு கீழே இறங்கி வந்து தீனர்களைக் காப்பாற்றுவது அரசனின்  கடமை. வற்றாத கருணை அல்லது இரக்கத்தினால் இறங்கி வருவது என்பது அவதரிப்பது (அவதாரம் = இறங்கி வருதல்) எனப்படும்.

அவ்யாஜ கருணையும், அறக்கருணையும், மறக்கருணையும், அவதரிப்பதும் பகவானின் இயல்பு. அரசனும் ஆண்டவனைப் போன்றே கருணையுடன் செயல்பட்டு அறத்தைக் காத்து நிற்பதால் அவன் ஆண்டவனின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறான்.

எனவே, அரசனாகிய நந்தகோபனை எம்பெருமான் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

நந்தகோபனின் சக தர்மிணி யசோதை. அவன் ஆற்றும் அறச்செயல்கள் அனைத்திலும் அவளுக்குச் சம பங்கு உண்டு, பொறுப்பும் உண்டு. எனவே, அவள் எம்பெருமாட்டி.

அறஞ்செய்யும் –

நந்தகோபன் அறவழி நிற்பவன் என்று அவனது புகழைப் பாடுகிறாள் ஆண்டாள்.

உண்மையான புகழ் என்பதே அறவழி நிற்பதுதான். காரணம், புகழ் என்பது சாஸ்திர விதிகளைக் கடைப்பிடிப்பதால் மட்டுமே கிடைக்கிறது.

அறஞ்செய்யும் –

நந்தகோபன் பெரும் தானங்கள் செய்பவன்.

ஏற்பது இகழ்ச்சி என்பது பால பாடம். எனினும், தானம் கொடுப்பது மட்டுமல்ல, பெறுவதும் மேன்மையே.

ஓர் அரசன் மிகப் பெரிய அளவில் தானம் செய்பவன் என்றால், அவன் ராஜ்யத்தில் வறுமை அதிகம் நிலவுகிறது என்று பொருள் அல்ல. தானம் என்பது வறுமையின் வெளிப்பாடு அல்ல. அது செழிப்பின் வெளிப்பாடு.

செல்வம் நிரம்பப் பெற்றவன் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து மனிதர்களுக்கும் தானம் செய்யக் கடமைப்பட்டவன்.

தானம் என்பது பணிந்து கொடுக்கப்படுவது. அதை ஏற்பது கௌரவம். தானம் கொடுப்பவன், தானம் பெறுபவரைப் பணிந்து வணங்கி மட்டுமே தானம் தர வேண்டும்.

தானம் என்பது ஈடுபாட்டுடன் தரப்படுவது. ஏனோதானோவென்று செய்யப்படுவது அல்ல.

நூறு கைகளால் உழைத்துப் பொருளீட்ட வேண்டும் என்று சொல்லிய நம் முன்னோர்கள், ஆயிரம் கைகளால் அதை தானம் செய்ய வேண்டும் என்று விதித்தனர்.

அம்பரமே –

ஏராளமான உடைகள்.

மனிதருக்கு அடக்கம் இன்றியமையாத பண்பு. அடக்கம் என்பது புலனடக்கத்தையும் குறிக்கும். புலனடக்கத்துக்கு ஆடை அவசியம்.

மானமுள்ளவன் மனிதன். மானத்தைக் காப்பது ஆடை.

எனவே, நந்தகோபன் ஆட்சியில் குடிகள் புலனடக்கமும் மானமும் மிக்கவர்களாக வாழ்ந்தனர் என்பது இதன் பொருள்.

தண்ணீரே –

நீரின்றி அமையாது உலகு.

நந்தகோபன் நீரைப் பெருமளவு தானம் செய்தான். அதாவது, அவன் ஆட்சியில் நீர் மேலாண்மை சிறப்பாக இருந்தது. ஊருணிகள், கிணறுகள், ஏரிகள், கண்மாய்கள், கால்வாய்கள் முதலானவற்றை ஏற்படுத்தி, தேசத்தில் குடிநீரும், விவசாயத் தேவைக்கான பாசன நீரும் மிகுதியாகக் கிடைக்கச் செய்தான்.

சோறே –

நந்தகோபன் பெருமளவு அன்னதானம் செய்தான்.

இல்லறத்தானின் முக்கியக் கடமை பிறருக்கு உணவிடுதல். அரசன் என்பவன் பெரிய இல்லறத்தான். எனவே, அவன் நாட்டில் உள்ள குடிகள் அனைவரின் உணவுத் தேவைக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

இல்லங்களில் நடைபெறும் அன்னதானம் தவிர, கோயில்களிலும் சத்திரங்களிலும் அன்னதானம் நடைபெற ஏற்பாடு செய்வதும் அரசனின் கடமை.

துறவிகள் ஓரிடத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது. அவர்கள் எப்போதும் சஞ்சாரம் செய்துகொண்டே இருக்க வேண்டும். தீர்த்த யாத்திரை செல்பவர்கள் பெருந்தொலைவு நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். திரைகடலோடியும் திரவியம் தேட வேண்டிய வியாபாரிகளும் ஊர் விட்டு ஊர் போய்க்கொண்டே இருக்க வேண்டியது அவசியம். இவர்கள் அனைவரது உணவுத் தேவையையும் இல்லறத்தார் செய்யும் அன்னதானத்தால் மட்டும் நிறைவு செய்துவிட முடியாது. கோயில்களிலும் சத்திரங்களிலும் நடைபெற்ற அன்னதானம்தான் இவர்கள் அனைவரின் உணவுத் தேவையையும் நிறைவு செய்தது.

நந்தகோபன் ஆட்சியில் அன்னதானம் மிகுதியாக நடைபெற்றது. எனவே, நாட்டு மக்கள் நல்ல உணவு கிடைக்கப் பெற்று திருப்தியுடன் வாழ்ந்தனர். மேலும், ஆன்ம தேடலில் திளைத்த துறவியரும், புனித யாத்திரை மேற்கொண்ட பக்தர்களும் ஏராளமாக இருந்தனர். இதனால், நாட்டில் பக்தியும் பண்பும் மிகுதியாக இருந்தது. வியாபாரிகளும் மிகுந்து இருந்தனர். எனவே, செல்வம் மிகுதியாக இருந்தது.

அறஞ்செய்யும் –

நந்தகோபன் ஏராளமான யாகங்களைச் செய்தான்.

நாட்டில் யாகங்கள் குறைவின்றி நடக்கச் செய்வது அரசனின் தலையாய கடமையாகும்.

அம்பரமே தண்ணீரே சோறே – ஆகாயம், மழை, உணவு உற்பத்தி

யாகத்தினால் மழை என்பது வேதம் தரும் வாக்குறுதி.

யாகத்தினால் வானவர்கள் ப்ரீதி அடைகிறார்கள். இதனால், குறைவின்றி மழை பெய்கிறது. உணவு உற்பத்தி செழிப்பாக அமைகிறது.

உணவை வீணடிக்காமல் இரு என்றும், உணவை இழிவாகப் பேசாதே என்றும், வீடு தேடிவரும் அதிதிக்கு உணவிடத் தவறாதே என்றும் சொல்லும் தைத்திரீய உபநிஷத், உணவை மிகுதியாக உற்பத்தி செய் என்றும் கட்டளை போடுகிறது.

எனவே, நந்தகோபன் யாகங்களைக் குறைவில்லாமலும், ஏராளமாகவும் செய்தான், அதனால், அவன் ஆட்சியில் மழை குறைவின்றிப் பெய்தது, உணவு உற்பத்தி மிகுதியாக இருந்தது, மக்கள் சுபிட்சமாக வாழ்ந்தனர் என்பது இதன் விளக்கம்.

அறஞ்செய்யும் –

நந்தகோபன் தர்மம் வழுவாது ஆட்சி நடத்தினான்.

அரசன் அறவழி நிற்கவில்லையெனில் அந்த தேசத்தில் சுபிட்சம் இருக்காது. அரசன் செய்யும் பாவங்கள் அவனை பாதிப்பதுடன் நில்லாது அவனது குடிகளையும் பாதிக்கும். குறிப்பாக, நாட்டில் மழை பொய்த்து விடும் அல்லது வெள்ளம் பெருக்கெடுக்கும்.

அரசன் தர்மப்படி ஆட்சி நடத்தினால், தேவையான அளவு மழைப்பொழிவு இருக்கும். இதனால், நாடு செழிக்கும்.

துஷ்டஹ, புஷ்டஹ, ஹ்ருஷ்டஹ, மாநீதஹ என்பது ராமாயணத்தில் ராம ராஜ்யத்தையும், மகாபாரதத்தில் யுதிஷ்டிரன் ஆட்சியையும் வர்ணிக்கும் பகுதிகளில் அடிக்கடி இடம்பெறும் பதங்கள். இந்த ஆட்சிகளில் குடிமக்கள் திருப்தி உள்ளவர்களாகவும், நல்ல உடல் வலிமை மிக்கவர்களாகவும், உடல்நலம் கொண்டவர்களாகவும், மானமுள்ளவர்களாகவும் விளங்கினர் என்பது இதன் பொருள்.

நந்தகோபனின் ஆட்சியும் ராம ராஜ்யம் போலவே இருந்தது என்பதையே அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் என்பதன் மூலம் குறிப்பால் உணர்த்துகிறாள் ஆண்டாள்.

andal srivilliputhur
aandal 2

***

செம்பொற்கழலடிச் செல்வன் பலதேவன் –

கிருஷ்ணன் பின்னே பிறக்க, முன்னே பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமான் என்பது உரையாசிரியர் தரும் விளக்கம்.

ராமனுக்குப் பின்னே பிறந்து அவனுக்குக் கைங்கரியம் செய்தவன் லக்ஷ்மணன். பலராமனோ, கிருஷ்ணனுக்கு முன்னே பிறந்தவன். லக்ஷ்மணன், பலராமன் இருவருமே ஆதிசேஷனின் அம்சம். லக்ஷ்மணன் ராமாவதாரத்தின்போது ஊன், உறக்கம் இன்றி ராம கைங்கரியத்தில் ஈடுபட்டவன். அப்படிப்பட்ட நீ, இந்த அவதாரத்தில் உறங்கிக் கிடக்கிறாயே என்று சொல்லி அவனைத் துயில் எழுப்புகிறார்களாம் கோபியர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe