
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமி கோவில் கட்டுமான பணியின் அதிகாரப்பூர்வ நிர்வாக அமைப்பான ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்தக்ஷேத்ரா தொடர்பாக ஓர் ஆலோசனைக் கூட்டம் திருச்சி அரியமங்கலம் ஸ்ரீலட்சுமி நாராயண ஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக பொதுச் செயலாளர் ஸ்ரீ மிலிந்த் பராண்டே, மத்திய இணைச் செயலாளர் Er. கோபாலரத்தினம், #ஆர்எஸ்எஸ் தென், தென் மத்திய க்ஷேத்திர கிராம விகாஸ் பிரமுக் தாணுமாலயன், ஆர்எஸ்எஸ் தென் பாரத செயலாளர் ராஜேந்திரன், விஹெச்பி தென் பாரத அமைப்பாளர் P.M. நாகராஜன், ஆர்எஸ்எஸ் தென் தமிழ்நாடு அமைப்பாளர் ஆறுமுகம், ஆர்எஸ்எஸ் தென்தமிழ்நாடு இணைச் செயலாளர் சுப்பிரமணியன், விஹெச்பி தென்தமிழ்நாடு, மாநிலத் தலைவர் குழைக்காதர், மாநிலச் செயலாளர் ராமசத்தியன், விஹெச்பி துறவியர் பேரவை தமிழ்நாடு அமைப்பாளர் சுதாகர், விஹெச்பி தென்தமிழ்நாடு அமைப்பாளர் சேதுராமன், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் ஹிந்து சமுதாயத்தைத் தொடர்பு கொள்ள, நாடு முழுவதிலும் இருந்து துறவிகளும், பல்வேறு அமைப்புகளும் ஈடுபடவுள்ளன. பல லட்சம் தன்னார்வலர்கள் இப்பணியில் பங்கேற்பார்கள்.
இது தொடர்பாக, மகர சங்கராந்தி 11 முதல் மாசி பௌர்ணமி தினமான 27 பிப்ரவரி வரை மாபெரும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கோவில் கட்டும் பணியில் எவ்வாறு பக்தர்கள் பங்கேற்க முடியும் என்பது குறித்து விளக்குவதுடன், அவர்களிடம் இருந்து நன்கொடைகளும் பெறப்படும். இதன் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் விதத்தில் ரூ. 10, ரூ.100 மற்றும் ரூ. 1,000 மதிப்பிலான கூப்பன்கள் மற்றும் ரசீது புத்தகங்கள் தன்னார்வலர்கள் வசம் இருக்கும்.
இந்த மக்கள் தொடர்பு திட்டத்தின் மூலம், 4 லட்சம் கிராமங்களில் சுமார் 1 கோடி குடும்பங்களை தொடர்பு கொள்ள உத்தேசிக்கப் பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நகர்ப்புறம், கிராமப்புறம், பழங்குடியின மற்றும் மலைப்பகுதிகள் உட்பட சமுதாயத்தின் ஒவ்வோர் அங்கத்தில் இருந்தும் அதிகப்படியான மக்களை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ராவுடன் இணைக்கும் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10000 பஞ்சாயத்துகளிலும் 5000 வார்டுகளிலும் மேலும் 50 லட்சம் குடும்பங்களில் நேரடியாக தொடர்பு கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 90 ஆயிரம் தொண்டர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவார்கள்
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பேரூர் மருதாசல அடிகளார் மற்றும் இதர சைவ வைணவ மடங்களின் பெரியோர்களும் இந்த ஆலய மக்கள் தொடர்பு நிதி சேகரிப்பு இயக்கத்தில் பங்கேற்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஹிந்து சமுதாய மக்களிடமும்
கொண்டு செல்வர் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.