
திமுக.,வின் கூட்டணியில் இந்த முறை சேர்ந்து போட்டியிட்டாலும், நிச்சயம் திமுக.,வின் சின்னமான உதயசூரியனில் போட்டியிடப் போவதில்லை என்று அக்கூட்டணியில் உள்ள மதிமுக., பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் உறுதியுடன் கூறியுள்ளனர்.
கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது, திமுக., கூட்டணியில் மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. ஆனால் அக்கட்சிகளுக்கு தேர்தலின் போது, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக., நிர்பந்தித்தது. முதலில் தங்களது கட்சிச் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று மறுப்பு தெரிவித்த இக்கட்சிகள் பின்னர் போட்டியிட தொகுதிகள் ஒதுக்கப் பட்டதால், இதற்கு சம்மதித்தன.

இந்நிலையில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி பரிசோதனை இன்று தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது என்றும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிடவே மதிமுக விரும்புவதாக அதன் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் நலக் கூட்டணி உருவாக இனி வாய்ப்பே இல்லை என்றார்.