
கருட சேவை உற்சவத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்திற்குட்பட்ட திருநாங்கூரில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களின் கருடசேவை உற்சவம் நடத்திட மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்திட வேண்டும்.
108 திவ்ய தேச பெருமாள் கோயில்களில் 11 திவ்ய தேச திருக்கோயில்கள் அமைந்துள்ள புண்ணிய பூமியான திருநாங்கூரில் பாரம்பரியமாக
கருட சேவை உற்சவம் தை மாத அமாவாசைக்கு அடுத்த நாள் நடைபெறுவது வழக்கம்.
திருநாங்கூரில் உள்ள திருக்கோயில் தெய்வங்களான அருள்மிகு நாராயண பெருமாள், குடமாடும் கூத்தர் பெருமாள்,
செம்பொன்னரங்க பெருமாள்,
பள்ளி கொண்ட பெருமாள்,
அண்ணன் பெருமாள், புருஷோத்தம பெருமாள், வரதராஜ பெருமாள், வைகுந்த நாத பெருமாள்,
மாதவன் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய பெருமாள் சுவாமிகள் அங்குள்ள
மணி மாடக்கோயில் முன் எழுந்தருளும் போது திருமங்கை ஆழ்வாரையும் எழுந்தருளச்செய்து பட்டாச்சார்யார்களால் பாசுரங்கள் பாடப்பட்டு மகா தீபாராதனை செய்து சுவாமிகளின் வீதியுலா வெகுச் சிறப்பாக பக்தி பரவசத்துடன் நடைபெறும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கருடசேவை உற்சவம் இந்த ஆண்டு வருகிற பிப்ரவரி மாதம் 12ம் தேதி வெள்ளிக்கிழமையன்று நடத்தப்பட வேண்டும். ஆண்டுதோறும் ஒரு மாதத்திற்கு முன்பே விழாவிற்கான ஏற்பாடுகள் உற்சவ கமிட்டியினரால் செய்யப்படும்.
ஆனால், இந்த ஆண்டு இன்றைய தேதி வரையில் உற்சவத்திற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாதது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் உற்சவத்தை தவிர்க்க நினைப்பதாக அறிகிறோம்.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின்
இணை ஆணையர் அவர்களிடம் பேசியபோது வருகிற 27.01.2021 புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் உரிய முடிவெடுப்பதாக கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பொது விஷயங்களில் அனுமதியளித்ததோடு கோயில் தொடர்பான விழாக்களை நடத்திக் கொள்ள எந்த விதமான தடையும் இல்லை எனக் கூறியுள்ளது.
மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் குறிப்பாக முஸ்லிம், கிறிஸ்தவ விழாக்கள், ஜல்லி கட்டு, பேருந்துகள் மற்றும் திரையரங்குகள் இயக்கம் என மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்ட சூழலில் பாரம்பரிய விழாவை நடத்தாமல் தவிர்க்க நினைப்பது தவறான முன்னுதாரணமாகி விடும்.
கொரோனா தொற்று தொடர்பாக அரசு அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சில வரையறைகளுடன் கருடசேவை உற்சவம் நடைபெற மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனுமதிக்க வேண்டும்.
- கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் ;
மாநில செயலாளர்,
இந்து மக்கள் கட்சி ..-