
கணவருக்கு கோயில் கட்டி பூஜை செய்யும் மனைவி.
பெண்ணுக்கு கணவனே கண் கண்டதெய்வம் என்று சொல்வது வழக்கம். புராணப் பெண்கள் கணவனை தெய்வமாக வழிபட்டார்கள். அங்கு பூஜை என்றால் உண்மையாக பூஜை செய்ய மாட்டார்கள். மதிப்பார்கள் என்று பொருள்.
ஆனால் ஒரு பெண்மணி உண்மையாகவே பூஜை செய்கிறார். தன் கணவருக்கு கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வருகிறார்.
ஆந்திரப் பிரதேசம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மாவதியும் அங்கிரெட்டியும் தம்பதிகள். அவர்களுக்கு சிவசங்கர் ரெட்டி என்ற மகன் உள்ளார்.

4 ஆண்டுகள் முன்பு சாலை விபத்தில் அங்கிரெட்டி இறந்து போனார். அதன்பின் சில நாட்களுக்கு அங்கிரெட்டி பத்மாவதியின் கனவில் தோன்றி தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்று கூறினாராம். அதனால் பத்மாவதி கோயில் கட்டி அதில் தன் கணவரின் விக்ரகத்தை ஏற்பாடு செய்து தினமும் பூஜை செய்து வருகிறார். சிறப்பு பூஜைகளும் நடத்துகிறார்.
அங்கிரெட்டியின் பிறந்த நாளன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்துகிறார்.
பத்மாவதியின் தாய் கூட தன் கணவருக்கு இதேபோல்தான் பூஜை செய்தாராம். அதனால் பத்மாவதியும் அதேபோல் செய்யத் தொடங்கியுள்ளார். அவருக்கு அவருடைய மகன் சிவசங்கர் ரெட்டி உதவி வருகிறார்.