ஐ.பி.எல் 2021 – வெள்ளிக்கிழமை – 02.10.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
மும்பை இண்டியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் மும்பை அணியை மட்டையாடச் சொன்னது. மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் (33) சொல்லிக்கொள்ளும்படி ஆடினார். மற்றவர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
அணியின் மிக முக்கிய வீரர்களான ரோஹித் ஷர்மா (7), டி காக் (19), திவாரி (15), பொலார்ட் (6), ஹர்திக் பாண்ட்யா (17), க்ருணால் பாண்ட்யா (13) என எல்லா பேர்வாய்ந்த வீரர்களெல்லாம் சரியாக ஆடவில்லை. எனவே மும்பை இருபது ஓவர்களுக்கு எட்டு விக்கட் இழப்பிற்கு 129 ரன் எடுத்தது. டெல்லி அணியில் அக்சர் படேலும் அவேஷ் கானும் தலா மூன்று விக்கட் எடுத்தனர்.
அதன் பிறகு மட்டையாட வந்த டெல்லி அணியும் மோசமாக ஆடியது. முதல் மூன்று மட்டையாளர்கள் ஒற்றை இலக்க ரன்களூடன் ஆட்டமிழந்தனர். பின்னர் ஆடவந்த ரிஷப் பந்த் (26), ஷ்ரேயாஸ் ஐயர் (33), ஹெட்மையர் (15), அஸ்வின் (20) நன்றாக விளையாடினர். டெல்லி அணி 19.1 ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 132 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை சூபர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
இது ஒரு அதிக ரன்கள் அடிக்கப்பட்ட ஒரு ஆட்டம். பூவா தலையா வென்ற ராஜஸ்தான் அணி சென்னை அணியை மட்டையாடச் சொன்னது. சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் கடைசி பந்தில் ஒரு ஆறு அடித்து 101 ரன்கள் எடுத்தார்.
அவருக்கு உதவியாக பிளேசிஸ் (25), மொயீன் அலி (21), ஜதேஜா (32) ஆகியோர் ஆடினர். இருபது ஓவர் குடிவில் சென்னை அணி 189 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி வீரர்கள் சீரான வேகத்தில் ரன் எடுத்தனர். அவர்களது சரசரி ரன் ரேட் 8 ரன்னுக்கு குறையவேயில்லை. இறுதியில் ஒரு கடைசி பால் சிக்சர் மூலமாக ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 190 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றிகளின் மூலம் சென்னை அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டெல்லி அணி 18 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் (நெட் ரன் ரேட் குறைவு), ராஜஸ்தான் அணி ஆறாம் இடத்திலும், மும்பை அணி ஏழாம் இடத்திலும் உள்ளன.
கொல்கொத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய நான்கு அணிகளும் தலா 10 புள்ளிகள் பெற்றிருக்கின்றன. நான்கு அணிகளுக்கும் தலா இரண்டு மேட்சுகள் மீதமுள்ளன. எனவே இந்த நான்கு அணிகளுள் எந்த அணி நாலாவது இடத்தைப் பிடிக்கும் என்பது இனி வரும் ஆட்டங்களில் தெரியும்.