பாரதியாரின் கண்ணன் பாட்டு
பகுதி – 17, கண்ணன் – என் சீடன்
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
ஒருநாள் கண்ணன் தனியாக என் வீட்டில் இருந்த சமயம் அவனை அழைத்து, “மகனே! என்மீது அளவற்ற பாசமும் நேசமும் நீ வைத்திருப்பது உண்மை என்று நான் நம்பி உன்னிடம் ஒன்று கேட்பேன், நீ அதனை செய்திடல் வேண்டும்.
நாம் யாரிடம் சேர்கிறோமோ அவர்களைப் போலவே நாமும் ஆகிவிடுகிறோம் அல்லவா? சாத்திரங்கள்பால் நாட்டமும், தர்க்க சாத்திர ஞானமும், கவிதைகளில் உண்மைப் பொருளை ஆய்வு செய்வதில் ஆர்வமும் கொண்டோர் மத்தியில், பொருள் சம்பாதிக்க அலையும் நேரம் போக மற்ற நேரங்களில் இருக்க முடியுமானால் நன்மை விளைந்திடும்.
பொழுதெல்லாம் என்னோடு இருக்க விரும்பும் அறிவுடைய மகன் உன்னைத்தவிர வேறு யார் இருக்கிறார்கள்? ஆகையால், எனது உதவிக்காக எனக்குத் துணையாக நீ என்னுடன் சில நாட்கள் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். முடியாது என்று சொல்லி என் மனம் துயரமடையச் செய்யாமல், நான் சொல்லுவதற்கு சம்மதிக்க வேண்டும்” என்று சொன்னேன்.
அதற்குக் கண்ணனும் “ஆகா! அப்படியே செய்கிறேன், ஆனால் உங்களோடு வேலை எதுவும் செய்யாமல் சோம்பேறியாக எப்படி இருப்பது? ஏதாவது வேலை கொடுங்கள் செய்துகொண்டு உங்களுடன் இருக்கிறேன்” என்றான். இவனுடைய இயல்பையும், சாமர்த்தியத்தையும் கருதி, “சரி! நான் எழுதுகின்ற கவிதைகளையெல்லாம் நல்ல காகிதத்தில் பிரதி எடுத்துக் கொடுக்கும் வேலையைச் செய்!” என்றேன். “நல்லது அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஒரு நாழிகைப் போது அங்கிருந்தான்.
“சரி, நான் போகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்ப நினைத்தான். எனக்கு கோபம் வந்தது, நான் எழுதிய பழங்கதை யொன்றை அவன் கையில் கொடுத்து, “இதை நன்கு பிரதி எடுத்துக் கொடு” என்றேன்.
அந்த வேலையைச் செய்பவன் போல கையில் வாங்கிக் கொண்டு கணப்பொழுது அங்கு இருந்தான். பின்னர் “நான் போகிறேன்” என்று எழுந்தான். எனக்கு கோபமான கோபம் வந்தது.
“என்னடா சொன்னதற்கு மாறாக இப்போது போகிறேன் என்கிறாய்? உன்னைப் பித்தன் என்று ஊரார் சொல்லுவது பிழையில்லை போலிருக்கிறது” என்றேன். அதற்கு “இந்த வேலையை நாளை வந்து செய்கிறேன்” என்றான்.
“இந்த வேலையை இங்கே இப்பொழுதே எடுத்துச் செய்கிறாயா, இல்லையா? பதில் சொல்” என்று உறுமினேன். கண்ணிமைக்கும் நேரத்தில் “முடியாது” என்று சொல்லவும், சினத்தீ என் உள்ளத்தில் வெள்ளமாய்ப் பாய, கண்கள் சிவக்க, இதழ்கள் துடிக்க கோபத்தோடு நான் “சீச்சீ…பேயே, கொஞ்ச நேரம் கூட என் முகத்திற்கு எதிரே நிற்காதே. இனி எந்தக் காலத்திலும் நீ என்னிடத்தில் வர வேண்டாம். போ, போ, போ” என்று இடிபோல முழங்கிச் சொன்னேன்.
கண்ணனும் எழுந்து போகத் தொடங்கினான். என் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வர, “மகனே, போய்வா, நீ வாழ்க, உன்னைத் தேவர்கள் காக்கட்டும். உன்னை நல்லவனாக ஆக்க நினைத்து என்னென்னவோ செய்தேன். தோற்றுப்போய் விட்டேனடா தோற்றுப்போய் விட்டேன். என் திட்டங்களெல்லாம் அழிந்தன. மறுபடியும் இங்கு வராதே! போய் வா, நீ வாழ்க” என்று வருத்தம் நீங்கி அமைதியாகச் சொன்னேன்.
கண்ணன் போய்விட்டான். திரும்பவும் ஓர் கணத்தில் எங்கிருந்தோ ஒரு நல்ல எழுதுகோல் கொண்டுவந்தான், நான் கொடுத்த பகுதியை மிக அழகாகப் பிரதியெடுத்தான். “ஐயனே, நீ காட்டிய வழிகள் அனைத்தையும் ஏற்று நடப்பேன். சொல்லும் அனைத்துக் காரியங்களையும் ஒழுங்காகச் செய்வேன்.
தங்களுக்கு இனி என்னால் எந்தத் துன்பமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு ஓடி மறைந்தான். கண்களிலிருந்து மறைந்த கண்ணன் மீண்டும் என் நெஞ்சத்தில் தோன்றி பேசத் தொடங்கினான்.
“மகனே, ஒன்றை உருவாக்குதல், மாற்றுதல், அழித்திடுதல் இவையெல்லாம் உன்னுடைய செயல் இல்லை. இதனைத் தெரிந்துகொள். தோற்றுவிட்டேன் என்று நீ சொன்ன அந்தக் கணத்திலேயே நீ வென்றுவிட்டாய். உலகத்தில் எந்தத் தொழிலைச் செய்கிறாயோ அதில் பற்றோ, பாசமோ வைக்காமல் நிஷ்காம்யமாகச் செயல்புரிந்து நீ வாழ்க! என்றான். வாழ்க கண்ணன். கம்பனின் வரிகளான
உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலு நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடையா ரவர்
தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே
நினைவுக்கு வருகிறதா?