
ஐ.பி.எல் 2021 – புதன் கிழமை – 06.10.2021
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
இன்று அபுதாபியில் நடந்த ஆட்டம் ஒரு உப்பு சப்பில்லாத ஆட்டம். பெங்களூர் அணி 16 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்குப் போய்விட்டது. சன்ரைசர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்திருப்பதால் அடுத்த சுற்றுக்கு இனிமேல் தேர்வாக முடியாது.
எனவே இந்த ஆட்டம் ஒரு உப்பு சப்பில்லாத ஆட்டமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் அதையும் ஒரு விறுவிறுப்பான ஆட்டமாக மாற்றிய பெருமை பெங்களூர் அணியின் சொதப்பலான ஆட்டமே காரணமாக இருக்கும்.
டாஸ் வென்று பெங்களூர் அணி சன்ரைசர்ஸ் அணியை மட்டையாடச் சொன்னது. இன்று தொடக்க வீரராக விருத்திமான் சாஹா வரவில்லை. அணியின் எந்த வீரரும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஜேசன் ராய் (44), அபிஷேக் ஷர்மா (13), வில்லியம்சன் (31), கர்க் (15), சாஹா (10), ஜேசன் ஹோல்டர் (16) எடுத்ததால் அணி இருபது ஓவர் முடிவில், ஏழு விக்கட் இழப்பிற்கு 141 ரன் எடுத்தது.
பெங்களூர் பந்துவீச்சாளர்கள் மிக நன்றாக பந்துவீசினார்கள். பின்னர் ஆடவந்த பெங்களூர் அணியில் முதல் ஓவரில் கோலி அவுட்டானார். படிக்கல் 41 ரன் எடுத்தார், ஆனால் அவரால் ஸ்கோரை வேகமாக நகர்த்தமுடியவில்லை.
இறுதி ஓவரில் 12 ரன் எடுக்க வேண்டியிருந்தது. டி வில்லியர்ஸ் ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால் மீதமிருந்த மூன்று பந்துகளில் அவரால் இன்னொரு சிக்ஸ் அடிக்கமுடியவில்லை. அதனால் பெங்களூர் அணி தோற்றுப் போனது. புள்ளிப் பட்டியலில் மாற்றம் எதுவும் இல்லை.
சன்ரைசர்ஸ் அணியின் இந்த வெற்றியால் எந்த அணிக்கும் சாதகமும் இல்லை; பாதகமும் இல்லை. நாளை அக்டோபர் ஏழாம் தேதி இரண்டு மேட்சுகள் உள்ளன.
சென்னை vs பஞ்சாப், கொல்கொத்தா vs ராஜஸ்தான். அதற்கடுத்த நாள் அக்டோபர் எட்டாம் தேதி மும்பை vs சன்ரைசர்ஸ், பெங்களூர் vs டெல்லி கேபிடல்ஸ்.
நான்காமிடத்தைப் பிடிக்கப் போவது மும்பையா அல்லது கொல்கொத்தாவா என்பது அப்போதுதான் தெரியும். அந்த நான் காம் இடத்தை நிர்ணயிப்பது ரன்ரேட்டாகத்தான் இருக்கும்.