ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் ‘டெலிட் ஃபார் எவ்ரிஒன்’ (delete for everyone) அம்சத்திற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் பணியில் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.21.23.1-ஐ சமர்ப்பித்தது. புதிய மற்றும் வரவிருக்கும் வாட்ஸ்அப் அப்டேட் அம்சங்களைக் கண்காணிக்கும் ஆன்லைன் தளமான WaBetaInfo-வின் அறிக்கையின்படி, delete for everyone அம்சத்தில் வரக்கூடிய புதிய மாற்றங்கள் பற்றி கூறி இருக்கிறது.
தற்போது வாட்ஸ்அப் யூஸர்கள் தனிப்பட்ட மற்றும் குரூப் சேட்களில் அவசரத்தில் தவறுதலாகவோ அல்லது தற்செயலாகவோ டெக்ஸ்ட், இமேஜஸ், ஜிஃப் அல்லது வீடியோ என எந்த வடிவில் ஒரு மெசேஜை அனுப்பி இருந்தாலும் அதனை 1 மணி நேரத்தில் டெலிட் செய்து கொள்ள அனுமதிக்கிறது.
இன்னும் சரியாக சொன்னால் துல்லியமாக 1 மணிநேரம், 8 நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகளுக்குள் delete for everyone ஆப்ஷனை பயன்படுத்த வாட்ஸ்அப் தனது யூஸர்களை அனுமதித்து வருகிறது.
கடந்த 2017-ல் இந்த ஆப்ஷனை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய போது வெறும் 7 வினாடிகள் மட்டுமே யூஸர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் 2018-ல் delete for everyone ஆப்ஷனை பயன்படுத்த தற்போதுள்ள காலக்கெடு அதாவது 4,096 வினாடிகள் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த 4,096 வினாடிகள் காலக்கெடுவை மேலும் நீட்டிக்கவே தற்போது வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்து வருவதாக WaBetaInfo வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் கூறப்பட்டு இருக்கிறது.
மேலும் WaBetaInfo அதன் அறிக்கையில், 3 மாதங்கள் பழமையான மெசேஜை டெலிட் செய்ய அனுமதிக்கும் ஸ்கிரீன் ஷாட்டை ஒன்றையும் ஷேர் செய்து இருக்கிறது.
இதன் மூலம் எதிர்காலத்தில் ஒரு மெசேஜை நீக்குவதற்கான கால வரம்புக்கு , டைம் லிமிட் இல்லாமல் இருக்கலாம் என்பது தெரிகிறது. அதாவது எதிர்காலத்தில் வாட்ஸ்அப் யூஸர்கள் எப்போது அனுப்பிய மெசேஜ் என்பதை கருத்தில் கொள்ளாமல் டெலிட் செய்து கொள்ள முடியும்.
இந்த ஆன்லைன் தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், delete for everyone விருப்ப அம்சத்தை பயன்படுத்துவதற்கான கால வரம்பு, காலவரையற்றதாக ஆக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதனிடையே iOS-க்கான WhatsApp Beta (v2.21.220.15), புதிய வீடியோ பிளேபேக் இன்டர்ஃபேஸை (video playback interface) பெறுகிறது என்றும் WABetaInfo கூறி இருக்கிறது. இதன் மூலம் யூஸர்கள் ஃபுல் ஸ்க்ரீன் வீடியோவை பாஸ் மற்றும் ப்ளே செய்ய முடியும் மற்றும் பிக்சர்-இன்-பிக்சர் விண்டோவை க்ளோஸ் செய்யவும் முடியும் என்று கூறப்பட்டிருக்கிறது.
வாட்ஸ்அப்பின் v2.21.220.15-ல் சில iOS பீட்டா யூஸர்கள் இந்த செயல்பாட்டைப் பெற தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.