
மணிப்பூரில் ரயில்வே துறையால் கட்டப்பட்டு வரும் மிக உயரமான ரயில் பாலத்தில் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன
வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம், மேகாலயா, சிக்கிம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் ரயில் விரிவாக்கம் அதிக அளவில் இல்லை. இதையடுத்து, இந்த மாநிலங்களின் தலைநகரங்களை ரயில் மூலம் இணைப்பதற்காக, ஜிராபம்-இம்பால் இடையே ஒரு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
மிகவும் உயரமான தூண்களுடன் கூடிய இந்தப் பாலம், மணிப்பூரின் நோனி (Noney) பள்ளத்தாக்கின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது.
141 மீட்டர் உயரம் கொண்ட இந்த ரயில் பாலத்தின் நீளம் 703 மீட்டர் ஆகும். இந்த பாலம், ஐரோப்பாவின் மாண்டினீக்ரோவின், மலா- ரிஜேகா வையாடக்ட் (Mala – Rijeka viaduct, Montenegro in Europe) என்ற 139 மீட்டர் பாலத்தின் சாதனையை இந்த உயரம் முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் தலைமை பொறியாளர் சந்தீப் சர்மா கூறும்போது, ‘இப்போது ஜிரிபமுக்கும் இம்பாலுக்குமான தூரம் 220 கி.மீட்டராக இருக்கிறது. இப்போது இதைக் கடக்க 10-ல் இருந்து 12 மணி நேரம் ஆகிறது.
இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டால் தூரம் 111 கி.மீ-ஆக குறையும். இரண்டு, இரண்டறை மணிநேரத்தில் இந்த தூரத்தைக் கடக்க முடியும். நோனி பள்ளத்தாக்கில் கட்டப்பட்டு வரும் இந்தப் பாலம் முடிந்ததும் உலகின் உயரமான பாலமாக இருக்கும்’ என்றார்.