
கொரோனாவின் டெல்டா மாறுபாடு, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை கூட பாதிக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.
கொரோனா காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது போதாது என்று உருமாறிய கொரோனா மாறுபாடு, 2-வது அலை, 3-வது அலை என தொடர்ந்து பரவிக்கொண்டே வருகிறது..
இதனிடையே கொரோனா தொடர்பான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் INSACOG கூட்டமைப்பு, CSIR மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் இரண்டு தில்லி மருத்துவமனைகளில் டெல்டா மாறுபாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், கொரோனாவின் டெல்டா மாறுபாடு, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை கூட பாதிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது..
மேலும் ” தடுப்பூசி, நோயின் தீவிரத்தை தடுக்கிறது என்றாலும், திருப்புமுனையை ஏற்படுத்தும் நோய்த்தொற்றின் நிகழ்வுகள் உள்ளன. இதனால் மிகவும் டெல்டா மாறுபாடு பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பரவும் அபாயமும் உள்ளது.” என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு மனநிறைவை அடையும் மக்களுக்கு இந்த புதிய ஆய்வின் கண்டுபிடிப்புகள் தெளிவான எச்சரிக்கை என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
2 டோஸ் தடுப்பூசி போட்ட நபர்கள் கொரோனா தொற்றை கடத்துவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல. தடுப்பூசியின் 2 டோஸ் போட்டுக்கொண்ட நபர்களிடையே வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
எனவே 2 டோஸ் தடுப்பூசி போட்ட மக்களும், கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டிய அவசியத்தை ஆய்வு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே தடுப்பூசி போட்டவர்களும், மாஸ்க் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.