உலக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஹப்பிள் என்னும் விண்வெளி தொலைநோக்கியின் உதவியுடன் , பூமிக்கு மேல் உள்ள அழகிய உலகத்தை படம்பிடித்து காட்டுகிறது.
பூமியில் நிலையாக இருக்கும் இயற்கைகளை போன்று அவ்வபோது வானில் தோன்றும் காட்சி பேழைகளையும் படம்பிடித்து அனுப்பியிருக்கிறது. அந்த வகையில் புதிய நட்சத்திரம் பிறப்பதை தனது வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
புதிதாக பிறக்கும் நட்சத்திரங்களை நாசா புரோட்டோ ஸ்டார் என அழைக்கிறது. வாயு மற்றும் தூசி மேகங்கள் தங்களின் சொந்த ஈர்ப்பு விசையின் மூலம் நட்சத்திரங்களை உருவாக்குகின்றன.
அதாவது மேகம் வீழ்ச்சியடையும்போது, அடர்த்தியான, சூடான மையம் ஒன்று உருவாகிறது அது தூசி மற்றும் வாயுவை சேகரிக்கத் தொடங்கும், இப்படியாக நட்சத்திரங்களாக உருவெடுக்கின்றன.
தற்போது நாசா பகிர்ந்துள்ள செய்தியில் Chamaeleon Star உருவாவதை ஹப்பிள் படம்பிடித்திருப்பதாக கூறியுள்ளது.நெபுலா IC 2631 இல் J1672835.29-763111.64 என்னும் பகுதியில் இந்த புதிய நட்சத்திரம் உருவாகியுள்ளது.
புதிய நட்சத்திரம் அதனை சுற்றி சுருங்கும் மேகங்களால் வெளியிடப்படும் வெப்ப ஆற்றலாலும், அருகிலுள்ள வாயு மற்றும் தூசியிலிருந்து பொருட்களைக் குவிப்பதாலும் பிரகாசிக்கின்றன.
தேவையான அளவு பொருட்களை சேமித்த பின்னர் அணுக்கரு இணைவு தொடங்கும். அப்போது நட்சத்திரம் அடர்த்தி மற்றும் வெப்பம் அதிகம் கொண்ட முழுமையான நட்சத்திரமாக மாறுகின்றது, என நாசா விளக்கம் அளித்துள்ளது.
இந்த புகைப்படத்தை ஹப்பிள் அகச்சிவப்பு கதிர்கள் மூலம் படமாக்கியுள்ளது. புரோட்டோஸ்டார்கள் அகச்சிவப்பு ஒளியில் தெளிவாக தெரியும். காரணம் அது அதிக வெப்பத்தை வெளியிடுகிறது.
இந்த புகைப்படங்களை நாசா ஒரு நட்சத்திரம் கிட்டத்தட்ட பிறந்துவிட்டது என கேப்ஷன் கொடுத்துள்ளது.