
பேஸ்புக் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவுகிறது. அதில் கருங்கற்கள் மீது இரும்பு ஆணிகள் வைக்கப்படுகின்றன.
சில நொடிகளில் அந்த ஆணிகள் இயல்பாகவே உருகுகின்றன. இரும்பு, எஃகினால் செய்யப்பட்ட பொருட்களை உருக்கும் ஆற்றல் இந்த அதிசயக் கல்லுக்கு உண்டு என கூறும் நெட்டிசன்கள், இந்தக் கல் ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சில கூடுதல் தகவல்களுடன் பகிரப்பட்ட இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்ததால் அவரவர், அவர்களுடைய மொழியில் மொழிபெயர்த்து வீடியோவை பகிரத் தொடங்கினர்.
பகிர்ந்த அனைவரும் இதனை உண்மை என்றும், அதியசக் கல் என்றும் குறிப்பிட்டனர். ஆனால், அந்த கல் அதியக் கல் இல்லை என்பது, தகவல்களை தேடிப் பார்க்கும்போது தெரிய வருகிறது. கல் மீது வைக்கப்படும் ஆணிகள் காலியம் எனப்படும் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது.
காலியம் உலோகத்தால் செய்யப்படும் இந்த ஆணிகள், 29 டிகிரி செல்ஷியஸ் உள்ள கற்கள் மீது வைக்கும்போது இயல்பாகவே உருகிவிடுமாம்.
அதாவது, காலியம் உலோகத்தை வெதுவெதுப்பான சூரிய ஒளி இருக்கும் பகுதியில் வைக்கும்போது, ஒளியின் வெப்பம் உலோகத்தை உருக்கிவிடும். கேலியத்தால் செய்யப்பட்ட சில ஆணிகள் 85.6 டிகிரி செல்ஷியஷில் உருகும் தன்மை கொண்டவையாக இருக்கும் என சிலர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வீடியோவில் இருக்கும் ஆணிகள் குறைவான வெப்பநிலையிலேயே உருகிவிடுமாறு தயாரிக்கப்பட்டிருக்கின்றன
எஃகு மற்றும் இரும்பு உலோகங்கள் உருகும்போது அவை முறையே நீலம் மற்றும் ஆரஞ்சு நிறமாக மாறும். ஆனால் வீடியோவில் இருக்கும் உலோகங்கள் வெண்மை நிறத்தில் உருகுகிறது.
காலியத்தால் செய்யப்படும் உலோகங்களைப் பொறுத்தவரை, திரவமாக்கப்பட்ட பிறகும் அதன் நிறம் மாறாமல் இருக்கும்.