ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனத்திற்காக 2 பேருக்கு ரூ.12 ஆயிரத்து 250 கட்டி பதிவு செய்தார். தேவஸ்தானம் மீது சேலம் நுகர்வோர் குறை தீர்மானத்தில் வக்கீல் செல்வகீதன் மூலம் வழக்கு தொடரப்பட்டது. 17 வருடம் காத்திருந்து தரிசனம் செய்ய முடியாததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.45 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் அழகாபுரம் மணிமேகலை தெருவில் வசித்து வருபவர் ராஜகோபால். இவரது மகன் ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனத்திற்காக 2 பேருக்கு ரூ.12 ஆயிரத்து 250 கட்டி பதிவு செய்தனர்.
அப்போது அவர்களுக்கு எஸ்.எல். நம்பர் ஒதுக்கப்பட்டு 2020-ம் ஆண்டு ஜூலை 10-ந்தேதி தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்டு ரசீதும் குறிப்பிட்டு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மேல் சாத்து வாஸ்திர சேவை இந்த தரிசனம் செய்ய வேறு தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
பின்னர் அந்த வாய்ப்பு இல்லை என்றும் தற்போது பிரேக் தரிசனம் செய்ய தேதி தரப்படும் என தேவஸ்தானம் மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்டது.
ஆனால் 17 வருடம் காத்திருந்தும் தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே தேவஸ்தானம் மீது சேலம் நுகர்வோர் குறை தீர்மானத்தில் வக்கீல் செல்வகீதன் மூலம் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி திருப்பதி தேவஸ்தானம் ஒரு வருட காலத்தில் மனுதாரருக்கு மேல் சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ரூ. 45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் இந்த தரிசனத்திற்காக கட்டிய ரூ.12,250 தொகையும் உத்தரவு பிறப்பித்த இரண்டு மாத காலத்தில் திருப்பி கொடுக்க வேண்டும். இல்லாவிடில் 6 சதவீதம் வட்டியுடன் சேர்த்து தர வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
திருப்பதி கோவில் நிர்வாகம் மீதான சேலம் நுகர்வோர் கோர்ட்டின் இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.