
கேரளாவில் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் ராகுல் காந்தி வழங்கிய டயாலிசிஸ் கருவியை டாக்டர்கள் ஏற்க மறுத்து டயாலிசிஸ் கருவி திருப்பி அனுப்பப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளானதாக காங்கிரசார் குற்றம் சாட்டியதால் வருகிற 17-ந் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் ராகுல் காந்தி. இவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வண்டூர் அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் கருவி ஒன்றை வழங்கினார்.
ரூ.50 லட்சம் மதிப்பிலான இந்த கருவியை ஏற்க ஆஸ்பத்திரி டாக்டர்கள் மறுத்து விட்டனர். மேலும் அந்த கருவிகளும் திருப்பி அனுப்பப்பட்டன.
இது பற்றிய தகவல் வெளியானதும் காங்கிரசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் டயாலிசிஸ் கருவி திருப்பி அனுப்பப்பட்டதால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளானதாகவும் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. வருகிற 17-ந் தேதிக்குள் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் சுகாதார துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




