
கர்நாடக மாநிலம் பசவேஷ்சவுக் நிப்பான் காவல் நிலையத்தில் கடந்த 1994-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கள்ள நோட்டு வழக்கில் தொடர்புடைய சிவகாசி செல்லியார்அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி (வயது 51), முனீஸ்வரன் காலனியை சேர்ந்த பாண்டியன் என்ற பாண்டி (60), விருதுநகர் ரோசல்பட்டி ரோட்டை சேர்ந்த மூவேந்தர் என்ற மகேந்திரன் (61) ஆகிய 3 பேரும் கடந்த 24 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் சிக்கோடி மாவட்ட நீதிமன்றம் இந்த 3 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்தது.
இதை தொடர்ந்து கர்நாடக காவல்துறை கேட்டுக் கொண்டதன் பேரில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் சிவகாசி நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுபக்குமார் தலைமையில் தனிப்படையினர் இந்த 3 பேரையும் கைது செய்து சிவகாசி முதல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கர்நாடகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.