
செந்தில் பாலாஜிக்கான நீதிமன்றக் காவல் வரும் ஜூலை 12ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. அமலாக்கத்துறையினர் இதுவரை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த இயலவில்லை என்பதும், இதய நோய் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் தற்போதைக்கு விசாரணை எதுவும் நடத்த இயலாத சூழல் இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவல் இன்று மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திமுக., அரசு செந்தில் பாலாஜியை பல்வேறு வழிகளில் பாதுகாத்து வரும் நிலையில், அமலாக்கத்துறை விசாரணை சரியான முறையில் நடக்குமா என்ற கேள்வி அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் எழுந்துள்ளது. எனவே, செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
முன்னர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது. காரணம், அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். இதனால் சரியான முறையில் வழக்கு நடைபெறாது என காரணம் சொல்லப்பட்டது. வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என அப்போது வழக்குத் தொடர்ந்தவர் திமுக.,வின் மூத்த தலைவரான மறைந்த அன்பழகன்.
இதை இப்போது பாஜக., பின்பற்ற வேண்டும் என்று கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. செந்தில் பாலாஜி குறித்த வழக்கு தமிழக நீதிமன்றத்தில் நடைபெற்றால், அதை தடுக்க திமுக., அரசு மற்றும் அதிகாரிகள் தரப்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், திமுக.,வினர் போராட்டங்களில் ஈடுபடுவர், இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் காரணம் கூறப்படுகிறது மேலும், கரூரில் சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக.,வினர் தாக்கியபோது, தமிழக போலீஸார் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை என்பதால், தமிழக போலீஸாரை நம்பி மத்திய விசாரணை அமைப்புகள் இனி சோதனைகளில் ஈடுபட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இத்தகைய காரணங்களைச் சொல்லி, அமலாக்கத்துறை அல்லது தனி நபர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜி கைது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, அவர் சட்டப்படிதான் கைது செய்யப்பட்டார் என்று அமலாக்கத்துறை வாதிட்டது. ஜூன் 13ல் நடந்த சோதனையில் அவர் உடன் இருந்தார். அவரை சட்டவிரோதமாக சிறைபிடிக்கவில்லை. சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார் என்று, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் கூறியது.
அப்போது, சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், மேகலா கூடுதலாக தாக்கல் செய்த மனுவில் கூறியது… கைது உத்தரவில் இருந்து செந்தில்பாலாஜியை விடுவிக்க வேண்டும். நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை முறையாக பரிசீலனை செய்யவில்லை. மனுவை முறையாக பரிசீலனை செய்யாமல் நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. செந்தில்பாலாஜிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என பாஜக., மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். 2022 ஆகஸ்ட் முதல் செந்தில்பாலாஜிக்கு எதிராக அவர் பேசி வருகிறார்… என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேகலா தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாகக் கைது செய்யவில்லை. சம்மனை பெற செந்தில்பாலாஜி மறுத்தார். அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக கைது செய்தோம். கைது குறித்து குறுஞ்செய்தி, இமெயில் மூலம் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜூன் 13ல் நடந்த சோதனையில் அவர் உடன் இருந்தார். அவரை சட்டவிரோதமாக சிறைபிடிக்கவில்லை. சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜியை இதுவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. வருங்காலத்தில் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும். செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்துள்ளார் என்பதற்கு காரணங்கள் உள்ளன. பெருந்தொகை டெபாசிட் செய்யப்பட்டது பற்றி எந்த விளக்கமும் செந்தில் பாலாஜி தரப்பில் அளிக்கப் படவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி பார்த்து வந்த இரு இலாகாக்களை வேறு இரு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக மாற்றப்பட்டதும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டதும் சர்ச்சையானது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா, ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் எங்கே தெரிவித்தார்? அவர் அமைச்சராக நீடிக்க வேண்டும் எனக் கோரி ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுதினாரா? அப்படியெனில் அந்தக் கடிதத்தை தாக்கல் செய்யுங்கள்’ எனக் கூறி வழக்கு விசாரணையை ஜூலை- 7 க்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.