— பாஸ்கர் கௌசிகன்
கும்பாபிஷேகம்- ப்ரம்மோற்சவம்
12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வது கட்டாயம் இல்லை என்பதை அழுத்திச் சொல்ல வேண்டிய காலமிது!
நன்றாக இருக்கும் ஒரு ஆலயத்தை 12 வருடங்கள் கடந்து விட்டதென கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என கட்டாயம் இல்லை, சிறு சிறு பணிகள் நடத்திய வகைக்கும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கட்டாயமில்லை…
சைவ வைணவ ஆகமங்கள் அவ்வாறு சொல்லவில்லை, அப்படி இருக்கும் போது, 12 வருடங்கள் கடந்ததென அறத்துறையே கும்பாபிஷேகம் செய்ய எத்தனிக்கிறது, ஏன் எனத்தேடிய போது,கும்பாபிஷேகத்தினால் ஏற்படும் பொருளாதாரம் என்பது இவர்களுக்கு ஏதோ வகையில் பயன் அளிக்கிறது என்பதை உணர முடிகிறது!
அறத்துறையின் எந்த கோவில் கும்பாபிஷேகமும் லஞ்சம் இன்றி நடப்பதில்லை என்பதே வேதனை…
சரி அப்படியானால் இறைவனின் சாந்நியத்யம் போய்விடும், என பல செவி வழிக்கதைகள் உலவுகிறதே! அவற்றை காண்போம்-நம்முடைய ஆலய நடைமுறைகள் அற்புதமானது, இறைவனின் அருளை நிலைநாட்ட அந்தந்த ஆலயங்களில் ப்ரம்மோற்சவங்களை குறைவின்றி நடத்தினாலே போதும்..
ஒவ்வொரு கோவிலிலும் 10 நாள் திருவிழா நடப்பதை பற்றி அறிந்திருப்பீர்கள், அதன் பெயரே ப்ரம்மோற்சவம்!
கொடி ஏற்றிய அன்று மாலை ஆரம்பிக்கும் யாகசாலை பூஜைகள் கொடி இறக்கும் காலை வரை 18 காலங்கள் யாகசாலை அமைத்து ஆராதனைகளைச்செய்ய வேண்டும்! அவ்வாறு செய்வதால் உத்தம அளவில் அங்கே அருள் அதிகரிக்கும்!
கொடி ஏற்றி அன்று மாலை ஆரம்பிக்கும் யாகசாலை பூஜைகள் திருவிழா அன்று காலை வரை அதாவது 18 காலங்கள் நடக்க வேண்டும்! ஒரு கும்பாபிஷேகத்தின் அதிக பட்ச கால அளவென்பது 9 நாட்கள் மற்றும் 18 காலங்களே ஆகும்! எனவே வருடா வருடம் நடத்தும் உற்சவங்களை சரியாக செய்தாலே கும்பாபிஷேகத்தின் தேவை ஒரு ஆலயத்திற்கு இல்லை!
இறைவன் நீரில் உறைபவர்!(சர்வா தேவதா ஆபோ) இந்த திருவிழாக்காலங்களில் இறைவன் வருடா வருடம் தீர்த்த உத்சவம் செல்வதால், நீரில் உறையும் அருட்சக்தி இயல்பிலேயே ஆலயத்தை அடையும்! பின் எதற்கு கும்பாபிஷேகம்?!
உள்ளபடியே இப்போது நடக்கும் கும்பாபிஷேகங்களை விட இந்த உற்சவங்கள் ஆயிரம் மடங்கு மேன்மையானது! ஆலய வழிபாடுகளின் முக்கியமான அங்கமும் கூட..இறை சாந்நித்யத்தை பன் மடங்கு உயர்த்த வல்லது… எனவே கும்பாபிஷேகத்தில் மட்டுமே சாந்நியத்யம் பெருகும் என்பது அறியாமையே…
நீங்கள் கும்பாபிஷேகம் என்று நடத்தும் அனைத்து அங்கங்களும் ஒரு உற்சவத்தில் இடம்பெறுவதால் அதுவும் வருடா வருடம் நடைபெற வேண்டும் என்பதால் உற்சவங்களை ஒழுங்காக நடத்துவதே அவசியமான ஒன்று! எந்த உற்சவத்தையும் சரிவர நடத்தாமல் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்கிறேன் பார் என்பது கேளிக்கூத்து..
கோவில் என்றால் அர்ச்சனை மட்டும் தான் செய்வார்கள் என்கிற தரத்திற்கு ஆலயங்களின் நடைமுறைகள் மழுங்கிக்கொண்டு உள்ளன!
கொடி ஏற்றி பத்து நாள் திருநாள் என்பது வான வேடிக்கை சுவாமி புறப்பாடு மட்டுமே என பொது ஜனங்கள் எண்ணும் அளவிற்கு நடைமுறை தேய்வு வந்தாகி விட்டது!
கொடி ஏற்றி யாகசாலை அமைத்து முறையாக காப்பு கட்டி,காலை மாலை ஹோமங்கள் செய்து, த்வஜ அபிஷேகம்,ஶ்ரீ பலி, புறப்பாடு,என திருநாளை நடத்துவது என்பது அடிப்படை அவசியம்! இதை அறத்துறை சரிவர நடத்தாது..காரணம் அர்ச்சனை செய்தால் பணம் வரும், உற்சவம் நடத்தினால் செலவு அல்லவா ஆகும்…
நிற்க:
எனவே தேவை உள்ள கோவில்களுக்கு உதவுங்கள்! பகட்டு கும்பாபிஷேகத்தால் ஏதும் நடவாது…உற்சவங்களில் ஈடுபாட்டை அதிகரியுங்கள்….
கருத்துகள் வரவேற்கப்படுகிறது