
சாதி பிரச்சினையை காரணம் காட்டி உள்நோக்கத்துடன் கோவில்களுக்கு தமிழக அரசு சீல் வைக்கிறதா? என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இது குற்த்து வெளியிட்ட அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினை என அரசு அதிகாரிகள் கோவிலுக்கு சீல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மேல்பதி வீரணம்பட்டி காளி கோவிலிலும் இதே காரணத்தால் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
திருக்கோவிலில் வழிபாட்டு உரிமையை யாருக்கும் மறுக்கப்படக்கூடாது. கோவில் நிர்வாகம் பூஜை முறைகள் பராம்பரிய முறைப்படி நடக்கிறது. இக்கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை ஏற்றாலும் இதில் மாற்றம் இல்லை.
ஆனால் சிலர் சமூக அமைதியை கெடுக்க பிரச்சினையை உருவாக்குகின்றனர். இதனை இந்து சமுதாயம் அனுமதிக்கக்கூடாது. இந்து சமுதாய ஒற்றுமை அவசியம்.
சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவோரிடம் இந்துக்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்.
இரு சமூகங்களிடையே பிரச்சினை என்றால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமூகத்தின் பெரியவர்களை அழைத்து சுமூக முடிவு எடுத்து இருக்க வேண்டும். அதைவிடுத்து வேற்று மதத்தினரை அழைத்து சமூக நல்லிணக்கம் நாடகம் நடத்துவது கபட நாடகம். இதுவே வேற்று மதத்தினர் வழிபாட்டு இடங்களிலும் பிரச்சினை எழும்போது அதிகாரிகள் அந்த வழிபாட்டு இடங்களுக்கு உடனடியாக சீல் வைத்து இருக்கிறார்களா? அமைதி கூட்டத்திற்கு இந்து அமைப்புகளை, இந்து சமுதாய பெரியவர்களை அழைத்துள்ளனரா?
இத்தகைய நடவடிக்கைகள் தமிழக அரசின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், இந்து சமூகத்தில் ஒற்றுமை உணர்வு சகோதரத்துவம் ஏற்படவும் இந்து முன்னணி விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது.
அரசியல் ஆதாயம் கருதாமல் தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.