
மு.க.ஸ்டாலினின் இன்றைய செயல்பாடுகளை பார்க்கும் பொழுது, அவரது வாக்கினாலேயே அவர் சொன்னபடி, ”எதிர்க்கட்சி என்றால் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?” என்று கேட்டபடி, அன்று அவர் அரசியல் செய்தார் என்பதையும் இன்று அவியல் செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம். அவியல் கிச்சனில் தான் செய்வார்கள் என்பதால், ஒரு கிச்சன் கேபினட் நடத்தி வரும் ஸ்டாலினின் பேச்சில் உள்ள அர்த்தத்தை இப்போதுதான் நாம் புரிந்து கொள்கிறோம்.
அமைச்சரவையில் முக்கிய இடம் வகித்த செந்தில் பாலாஜியின் முக்கியத்துவம் எப்படிப்பட்டது என்பதை இன்றைய காட்சிகள் காட்டிக் கொடுத்துள்ளன. பலரும் சொல்வதைப் போல வரிசையாக அமைச்சர்கள் மருத்துவமனை வாசலில் நின்று கொண்டு இருப்பதை பார்க்கும் பொழுது, அமைச்சரவையில் செந்தில் பாலாஜி எப்படிப்பட்ட முக்கியமான இடத்தில் இருக்கிறார் என்பது உலகத்திற்கு தெரிகிறது.
தமிழக அரசுக்கு முக்கிய வருமானம் தரும் துறை என்று டாஸ்மாக் குறித்து அமைச்சர்களாலேயே கூறப்பட்டாலும் அரசை தாண்டியும் கட்சியில் இருப்பவர்களுக்கு எப்படிப்பட்ட வருமானத்தை அது குவித்துக் கொண்டிருக்கிறது என்பது இன்றைய நாடகங்களில் இருந்து தெரிய வருகிறது.
தலைமைச் செயலகத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியின் போது, தலைமைச்செயலாளர் அறையில் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இன்று… சட்டவிரோத பணப்பரிமாற்றம் புகார் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,
சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறைக்கு சென்று, தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என, தெரியவில்லை. தலைமை செயலகத்திலும் ‘ரெய்டு’ நடத்துவோம் எனக் காட்டவோ அல்லது அதை காட்டி மிரட்டவோ விரும்புகின்றனரா என தெரியவில்லை. இவை எல்லாமே விசாரணை அமைப்பானது, அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதையே எடுத்து காட்டுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்திற்கு வந்து சென்ற நிலையில், உடனே இதுபோன்ற காரியங்கள் நடக்கின்றன என்றால் என்ன பொருள்? பொது மேடைகளில் தி.மு.க.,வையும், ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து சென்றார் அமித்ஷா. அதற்கு தகுந்த விளக்கத்தை நாங்கள் கொடுத்து விட்டோம். இதுபோன்ற அமலாக்கத் துறை தாக்குதல்களை தலைமைச் செயலகத்தின் மீதே தொடுப்பது, கூட்டாட்சித் தத்துவத்துக்கே களங்கம் ஏற்படுத்துவதாகும்.
ஒரு மாநில அரசின் தலைமைச் செயலகத்துக்குள், மத்திய காவல் படையை அழைத்து வந்து, அதிகாரிகள் சோதனை நடத்துவது தான் அரசியல் சட்ட மாண்பைக் காப்பதா?மிகத் தவறான முன்னுதாரணங்களை தொடர்ந்து பா.ஜ., உருவாக்கி வருகிறது. பா.ஜ.,வின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர்.
அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, இதுபோன்ற புறவாசல் வழியாக அச்சுறுத்த பார்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை, பா.ஜ., தலைமை உணர வேண்டும். அதை அவர்களே உணரும் காலம் நெருங்குகிறது என்று கூறியுள்ளார்.
அதே நேரம் அன்று கடந்த 2016 டிசம்பர் மாதம் தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் அவரது அறையிலும், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அது தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத முன்னுதாரணமாக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
சில வாரங்களாகவே, தொழிலதிபர்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில்,‛ரெய்டு’கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவை பற்றிய முழுமையான உண்மைத் தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த நிலையில்தான், தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
தலைமைச்செயலாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை என்பது தமிழகத்தைத் தலைகுனிய வைத்துள்ளது. தமிழக நலன்களைப் புறக்கணித்து தங்கள் சொந்த லாபங்களுக்காக செயல்படும் அ.தி.மு.க., அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள், ஆளுங்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது கடுமையாகவும், வெளிப்படையாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,
ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்களும், ஆட்சியை ஆட்டி வைப்பவர்களும் தப்பிவிடக்கூடாது. ராம்மோகனராவ் ராஜினாமா செய்ய வேண்டும். புதிய தலைமை செயலாளர் நியமிக்கப்பட வேண்டும்…. என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்று சமூக வலைதளத்தில் ஸ்டாலின் பேசும் வீடியோக்களை வெளியிட்டு, சமூக வலைத்தளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அது போல், செந்தில் பாலாஜி கைது காவும் அமைச்சர் அறையில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளுக்காகவும் எதிர்ப்பு தெரிவித்து ஆதரவு குரல் கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசின் மல்லிகார்ஜுனன் அருகே உள்ளிட்ட எதிர் கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்ததை விமர்சித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் செந்தில் பாலாஜி குறித்து பேசிய பேச்சை வெளியிட்டு பதில் அளித்து இருக்கிறார்.
செந்தில் பாலாஜியை கரூர் மாவட்டத்தின் குளித்தலை நகரில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் எவ்வாறெல்லாம் பேசினார் எத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்பதை வீடியோவாக ஆங்கிலத்தில் சப்டைட்டில்களுடன் வெளியிட்டு இருக்கிறார்….