பெங்களூரு: தமிழகத்துக்கு நீர் திறந்துவிடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். தீர்ப்பு பற்றி கர்நாடக அரசு வழக்கறிஞர் உடன் விவாதிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
மே மாதத்திற்குள் தமிழகத்திற்கு கர்நாடகா, உடனடியாக 4 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், தவறினால் மாநில அரசு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.
காவிரி குறித்த வழக்கு மே.3 ஆம் தேதி இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்திற்கு மே மாதத்திற்குள் 4 டி.எம்.சி., தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும். உத்தரவை மீறினால் மாநில அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது.
காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க மாட்டோம். அது பற்றிக் கவலையில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம் என்று கூறியது நீதிமன்றம்.
மேலும், திட்ட வரைவு அறிக்கை குறித்து மத்திய அரசு இந்த விவகாரத்தில் தாங்கள் இதுவரை என்ன செய்தோம் என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். மே 3 ஆம் தேதி மத்திய அரசு திட்ட வரைவு குறித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், மத்திய அரசு முன்னதாகவே இரு வாரம் கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனு உடனே திரும்பப் பெறப் பட்டது. மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அந்த மனுவை திரும்பப் பெறக் கூறியதாக தெரிவிக்கப் பட்டது.
எனவே, இன்று மத்திய அரசு திட்டை வரைவு தாக்கல் செய்யாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, பிரதமர், மத்திய நீர்வள அமைச்சர் ஆகியோர் கர்நாடக தேர்தல் பிரசாரங்களில் சென்று விட்டதால், ஒப்புதல் பெற இயலவில்லை என்று கூறினார் மத்திய அரசி தலைமை வழக்குரைஞர்.
இந்நிலையில் வழக்கை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். இந்த விசாரணையின் போது, கர்நாடக அரசு வழக்கறிஞர் தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியுமா? முடியாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனிடையே, மத்திய அரசை தவிர்த்து கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறது என்று தமிழகத்தில் அரசியல் இயக்கங்கள் புகார் கூறின.
உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் பலத்த சந்தேகத்தை உருவாக்குகிறது. உச்ச நீதிமன்றத்தின் இன்றைய நிலைப்பாடு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுப்பது போல் உள்ளது.
இப்போது காவிரி பந்து இடைக்கால நீர் திறப்பு என்ற முறையில் கர்நாடக அரசின் கைக்கு மாற்றப்பட்டுள்ளது. கர்நாடக அரசு நீர் திறந்தாக வேண்டிய நிர்பந்தம் அல்லது எதிர்த்து செயல்பட வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
நீரைத் திறந்தால் காங்கிரஸ் கன்னட மக்களின் எதிரி என பாஜக பிரச்சாரம் செய்யும். அது பாஜக வாக்கு அறுவடைக்கு உதவும். திறக்காவிட்டால் மேலாண்மை வாரிய விவகாரத்தை ஆறப் போட்டு விடலாம்.
நடுநிலை தவறி மத்திய பாஜக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் மேற்கொண்டு வருகிறது என்ற அரசியல் ரீதியான பேச்சுகள் தமிழகத்தில் தலையெடுத்துள்ளன.
காரணம், கர்நாடகத்தில் பாஜக., வாக்கு வாங்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்கள், தொடர்ந்து போராட்டக் குரலை தமிழகத்தில் இது போல் எழுப்பி வருகின்றனர். பாஜக., வாக்கு அறுவடைக்கு உதவும் வகையில் நீதிமன்ற நிலைப்பாடு இருப்பதாகக் கூறுபவர்களின் உள்நோக்கம், அவ்வாறு வாக்குகள் கிடைத்துவிடக் கூடாது என்ற காங்கிரஸ் சார்பு நிலைப்பாடுதான் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
எங்களுக்கே தண்ணீர் இல்லை; தமிழகத்துக்கு எங்கிருந்து காவிரி நீர் கொடுப்பது என்று காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா கேட்டிருக்கிறார்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நீர்தர உத்தரவிட்ட உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறியுள்ளார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிப்பதாக, காவிரி விவகாரத்தில் மாபெரும் போராட்டக்களம் அமைப்பதை தவிர வேறு வழியில்லை. வாரியம் அமைக்காமல் மத்திய அரசின் பச்சை துரோகம் தொடருமானால் போராட்ட களம் அமைக்க நேரிடும். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டும் வரை போராட்டம் தொடரும்… என்று கூறியுள்ளார் மு. க. ஸ்டாலின்.
இதுதான் திமுக., வின் கூட்டுக் களவாணித்தன அரசியல் என்றும், அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் திமுக கைகோத்து நடத்தி வரும் அரசியல் நாடகம்தான் இந்தக் காவிரி அரசியல் என்றும் கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆனால் திமுக.,வின் காவிரிப் போராட்டத்தால் எதிர்விளைவுகளே ஏற்படும் என்று கூறப்படுகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸை வெற்றி பெற வைக்க திமுக இங்கே நடத்தும் நாடகத்தால் கர்நாடகத்தில் காங்கிரஸுக்கே பின்னடைவு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.